Wednesday, April 19, 2023

காட்சிகளின் தன்மைக்கேற்ப மூக்குத்தி ஒளி விடும்.

 இன்று அதிகாலை வாக்கிங் போய்விட்டு வரும் போது " அழகிய கண்ணே " பாட்டு கேட்டுட்டே வந்ததில் இந்தப்படத்தின் இல்லை இல்லை காவியத்தின் பல காட்சிகள் உலா வந்தன..

இந்தப் படத்தை நான் முதலில் தூர்தர்ஷனில் தான் பார்த்தேன்.. கறுப்பு - வெள்ளை டிவியிலேயே காவியமாக மனதில் ஒட்டிக் கொண்டது. ஏனோ அந்த வயதில் பூபதி தான் ஹீரோ என்று நினைத்துக் கொண்டேன்.
பிறகு பாா்த்த போது தான் ஒரு படத்தில் மூக்குத்தி கூட கதை சொல்லும் என்பது தெரிந்தது.. காட்சிகளின் தன்மைக்கேற்ப மூக்குத்தி ஒளி விடும்.. ரசம் போயும் காட்சியளிக்கும்..
ஒரு வக்கிரம் பிடித்த ஆணாதிக்க சிந்தனையுள்ள பாத்திரத்தை கண் முன் நிறுத்தி விடும் விஜயன் பாத்திரம்.. அப்பப்பா! அவ்வளவு மென்மையான குரலில் கொடூரத்தைக் காட்டி இருப்பாா்.. ஒரு இடத்தில் சினிமாவுக்கு போய்விட்டு வந்து மனைவியை சந்தோஷப்படுத்தி விட்டு தனது இரண்டாவது கல்யாண ஆசையை சொல்லுவாா். மறுக்கும் அஸ்வினியின் கன்னத்தில் அறைவாா்.. ஆனால் அதைக் காட்டாமல் அடுத்த செகண்ட் அஸ்வினி தனது குழந்தைகளை சமாதானப் படுத்தும் காட்சியைக் காண்பிப்பார்.. செம டைரக்ஷன் டச் அது..
அதே போல அவ்வளவு கொடூரமானவருக்குள்ளும் பிள்ளைப் பாசம் இருக்கும் என்பதை அழகாகக் காண்பித்துக் கொண்டே வருவாா்..
அஸ்வினி ஷோபாவைப் போன்ற ஒரு அழுத்தமான நாயகி.. சினிமாவுக்கு போலாம் என்று கணவன் சொன்னவுடன் வெளியே வந்து வானத்தைப் பார்க்கும் முகத்தில் அத்தனை சந்தோஷத்தை காண்பிப்பாா்.. அதே போல தன்னை என்றோ பெண் கேட்டு வந்த சரத் பாபு என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்கும் போது என்றோ நடந்த அந்த நிகழ்வை நினைத்து அழகான ஒரு வெட்கம் முகத்தில் தெரிய தலையாட்டுவாா் பாருங்க.. மறக்கவே முடியாது.. அதே போல அவர் சாகும் சீனில் அற்புதமாக நடித்திருப்பாா்.. இது வரை அழாமல் இந்த சீனைப் பார்த்ததில்லை.. அதுவும் தன் கை வருடலிலேயே தாய்மையை அழகாக காண்பிப்பார்..
ஒவ்வொரு தடவையும் எப்பம்மா தம்பிக்கு மொட்டை அடிக்கப் போறீங்கன்னு நாவிதர் கேட்டு கேட்டு அலுத்து கடைசியில் அவரின் ஆசை அஸ்வினி இறப்பில் நிறைவேறும் போது குலுங்கி அழுது கொண்டே மொட்டை அடிப்பாா் நெஞ்சை உருக்கும் சீன் அது. குழந்தைகள் இரண்டும் தன் அம்மாவைப் பார்க்க வண்டி மறைவில் போய் முத்தம் கொடுக்கும் சீன், இவளுக்கு ரொம்ப பசிக்குதாமான்னு சொல்லிட்டு வெள்ளையா சிரிக்கும் சீன், ஆற்றுக்குள் கச்சேரி, சாருஹாசன் விஜயனிடம் மறுக்கும் சீன், அஸ்வினிக்கு பரிந்து பேசும் சரத்பாபுவை விஜயன் அடிப்பாா்.. ஆனால் உடைந்த கண்ணாடி யும், சரத்பாபு தன் ரத்தத்தை கழுவுவது மட்டுமே காண்பிப்பாா்..
தன் குழந்தைகளை பட்டினி போட்டு விட்டார் என்று திட்ட ஆரம்பிப்பார் விஜயன்.. ஆனால் குளித்து விட்டு வரும் அவள் அழகில் மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக சுருதி குறைந்த குரலில் பேசுவார்.. ஒரு மனிதனின் காம வசத்தை அற்புதமாக எடுத்துக்காட்டும் சீன், அந்தப் பள்ளிக்கூடம், அந்த வாத்தியார்கள்,விஜயன் சொல்வதற்காக வேஷ்டி கட்டிக் கொண்டு அவதிப்படுவது.. அஸ்வினியின் தங்கை - வாத்தியாரின் காதல், பஞ்சாயத்து சண்டை, பூபதி - சரத் பாபு நட்பு,போடா போடா பொக்கைப் பாட்டு, அந்த நடனம், அழகிய கண்ணே பாட்டில் காமெரா.. அப்பப்பா.. மறக்க முடியாத காட்சிகள்..
இளைய ராஜா வின் அழகான தீம் மியூசிக் படம் முழுக்க வரும்.. அதுவும் கிளைமாக்ஸ் awesome..
அதே போல விஜயன் மதுமாலினியை மானபங்க படுத்துவதை கண்ணால் கண்ட இரண்டாவது மனைவி அவரை முகத்தில் அடிப்பது போல வசனம் பேசி விட்டு ( சோற்றில் விஷம் வைத்து விடுவேன்.. அது என்னால் முடியும்) விலகுவது.. கடைசியாக அந்த கிளைமாக்ஸ் வசனம் " நான் பண்ணின தப்புலேயே மிகப் பெரிய தப்பு ன்னு நான் நினைக்கிறது.. உங்களை எல்லாம் என்னை மாதிரியே மாத்திட்டேன் பாருங்க.. அதான் " சொல்லிட்டு ஆற்றில் இறங்கி விடுவார்.. அவர் இறப்பதை குமிழ் குமிழாக காண்பிக்கும் காமெரா ஒரு இடத்தில் உறைந்து விடும்..( அசோக்குமாா்) பேக்ரவுண்ட் மியூசிக் ஒரு நிமிடம் நின்று பிறகு வரும்..
கடைசியாக அந்த இரு குழந்தைகளும் ஒன்றின் கையை ஒன்று பிடித்துக் கொண்டு வரும் போது உதிரிப்பூக்கள் என்று டைட்டில் வரும்.. அப்படியே யாரோ இதயத்தைக் கசக்கிப் போட்ட மாதிரி வலிக்கும்.. மனசெல்லாம் கனத்துப் போய், அப்படியே வேறெதையும் நினைக்காமல் அப்படியே கிடக்க வைக்கும்.. கிடந்தும் இருக்கிறேன்..
படத்தின் எந்தக் கதாபாத்திரமும் சத்தமாக பேச மாட்டார்கள்.. தன் பெண்டாட்டி எழுதிய லெட்டரைப் படித்துக் காண்பிக்க சொல்லி தொந்தரவு தரும் ஒரு கதாபாத்திரம் தவிர.
எப்போதும் எப்போதும் அணு அணுவாக ரசித்துப் பார்க்கும் படம்.. இது மட்டும் இல்லை.. மகேந்திரனின் படைப்புகள் பலவற்றில் என்னை இழந்துருக்கிறேன்.. வாழ்நாள் முழுவதும் ரசித்து அனுபவிக்க இம் மாதிரி ரசனையான படைப்புகள் தான் எத்தனை? எத்தனை!?..
May be an image of 2 people, people smiling and text that says "உதிரிப்பூக்கள் UDHIRI POOKKAL"
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...