Wednesday, April 19, 2023

எம்.ஜி.ஆர் தந்த பணத்தை வாங்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்.

 இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது வாழ்க்கையில் அதிகமாக மனம் தளர்ந்தது "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு இசையமைத்தபோதுதான்.கஷ்டப்பட்டு ஒரு டியூனைப் போட்டு அதை எம்.ஜி.ஆரிடம் அவர் வாசித்துக் காட்டினால் "இந்த டியூன் நன்றாகவே இல்லையே.இது வேண்டாம்"என்பாராம் எம். ஜி. ஆர்.அடுத்து "கொஞ்சம் பொறுங்கள் இன்னொரு டியூன் போடுகிறேன் " என்று விஸ்வநாதன் சொன்னால் "பரவாயில்லை விடு.இந்த டியூனே இருக்கட்டும் " என்று எம் ஜி ஆரிடமிருந்து பதில் வருமாம்.

பக்கத்தில் இருப்பவர்கள் "பாட்டு நல்லாத்தானே அண்ணே இருக்கு. எதனால உங்களுக்குப் பிடிக்கலே" என்று அவரிடம் கேட்டால் உடனே அவர்களோடு வாக்கு வாதம் செய்யத் தொடங்கிவிடுவாராம் .
“எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அவரை எப்படி திருப்திப் படுத்தறது அப்படீன்னும் புரியலே.ஆனா என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னால முடிஞ்ச அளவுக்கு மாத்தி மாத்தி பல டியூன்களைப் போட்டு பத்து நாட்களில் பதினைந்து பாடல்களை ரிக்கார்ட் செய்து கொடுத்தேன். ஆனால் அந்தப் பாடல்களில் ஒரு பாட்டைக்கூட எம். ஜி. ஆர் பாராட்டவில்லை” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக் கிறார் விஸ்வநாதன்
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்கான மொத்த பாடல்களையும் பதிவு செய்து முடித்துவிட்டு கே.பாலாஜியின் புதிய படத்துக்காக அவருடைய அலுவலகத்தில் பாடல் கம்போசிங்கில் விஸ்வநாதன் இருந்தபோது கையில் ஒரு போனுடன் அவசரம் அவசரமாக கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ஒடி வந்தார் பாலாஜி.
“அண்ணே உங்களுக்குத்தான் போன். எம். ஜி. ஆர் பேசறார்” என்றபடி போனை விசுவநாதன் கையில் கொடுத்தார்அவர்.
“உலகம் சுற்றும் வாலிபன்" பட ஷூட்டிங்கிற்காக நாளைக்கு எல்லோரும் சிங்கப்பூர் போகப் போறோம். படத்துக்கு பாட்டு எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்ட நீ அதுக்குப் பணம் வாங்கலேன்னா எப்படி?உடனே கிளம்பி வா”என்றார் எம். ஜி. ஆர்.
“மன்னிக்கணும் அண்ணே. எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்.ஏன்னா நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு டியூன் போட்டும் அதிலே ஒரு பாட்டு கூட உங்களுக்குப் பிடிக்கலே. அதனால உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு.அதனால எனக்கு பணம் எதுவும் வேணாம் அண்ணே” என்றார் விஸ்வநாதன்.
அடுத்து “மரியாதையா நீ இப்போ கிளம்பி இங்கே வர்றியா இல்லே நான் அங்கே வரட்டுமா?”என்று கேட்டார் எம். ஜி. ஆர்.
பாலாஜி உட்பட அந்த கம்போசிங்கில் இருந்த அனைவரும் "உடனே கிளம்பிப்போய் எம். ஜி. ஆரைப் பார்த்துவிட்டு வாங்க இந்த கம்போசிங்கை நாளைக்குக் கூட வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லவே அரை மனதோடு தியாகராயநகர் ஆற்காடு சாலையிலிருந்த எம் ஜி ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குக் கிளம்பினார் விஸ்வநாதன்'
அவர் சென்றபோது அந்த அலுவலகம் கல்யாண வீடு மாதிரி இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" பட விநியோகஸ்தர்கள், நடிகர் நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் என்று எல்லோரும் அங்கே கூடியிருந்தனர்.
அந்த அலுவலகத்துக்குள் எம்.எஸ்.விஸ்வநாதன் அடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் சார்பில் ஒரு ஆளுயர மாலை அவருக்கு அணிவிக்கப் பட்டது
அடுத்து விஸ்வநாதனுக்கு அருகில் வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர் “இவங்க எல்லோரும் விசு சார் அடுத்த படத்துக்கு மியூசிக் ஏதாவது ஸ்டாக் வைத்திருக்கிறாரா இல்லே இந்தப் படத்திலேயே தன்னுடைய எல்லாத் திறமைகளையும் கொட்டித் தீர்த்துட்டாரான்னு என்கிட்டே கேட்கறாங்க விசு. எல்லா பாட்டுக்களும் அவ்வளவு நல்லா இருக்காம். இவங்க எல்லோரும் சொல்றாங்க”என்று சொல்லிவிட்டு ஒரு பை நிறைய நோட்டுக் கட்டுகளைப் போட்டு விஸ்வநாதன் கைகளில் கொடுத்த போது “என்னை மன்னிச்சிக்கங்க. இந்தப் பணம் எனக்கு வேண்டாம்”என்றார் விஸ்வநாதன்.
"ஏன்?" என்று எம். ஜி. ஆர் தனது பார்வையாலேயே கேட்டபோது இப்போது கூட "பாட்டுக்கள் நல்லா வந்திருக்குன்னு விநியோகஸ்தர்கள் எல்லோரும் சொல்றாங்க அப்படீன்னுதானே நீங்க சொன்னீங்க. அப்படீ ன்னா இன்னும் கூட உங்களுக்கு நான் போட்ட பாட்டுக்கள் பிடிக்க லேன்னுதானே அர்த்தம்? அப்படியிருக்கும்போது எனக்கு இந்தப் பணம் எதற்கு?"என்றார் விஸ்வநாதன்
அவர் அப்படி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர் "எல்லா பாட்டுமே ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கு விசு. நான் வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பாட்டையும் நல்லா இல்லேன்னு சொன்னேன். அப்போதுதான் அடுத்த பாட்டுக்கு இன்னும் கூடுதல் கவனத்தோடு அக்கறை எடுத்துக் கொண்டு நீ இசையமைப்பாய் என்ற என்னுடைய சுயநலம்தான் அதற்குக் காரணம்"என்றார்.
"அங்கேதான் நீங்க தப்பு பண்றீங்க.ஒவ்வொரு பாட்டையும் நீங்க அப்பவே ரசித்து பராட்டியிருந்தீங்கன்னா.நான் அடுத்தடுத்து இன்னும் நல்ல டியூனா போட்டிருப்பேன்"என்று விஸ்வநாதன் அவருக்கு பதில் சொன்ன போது "அதுதான் தம்பி நல்ல கலைஞனோட குணம்"என்று சொல்லி அவரை தட்டிக் கொடுத்தார் எம். ஜி. ஆர்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த பத்னைந்து பாடல்களில் இருந்து பத்து பாடல்களைத் தேர்ந்தெடுத்த எம். ஜி. ஆர் அந்தப் பாடல்களைச் சுற்றி சம்பவங்களைப் பின்னித்தான் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதையை அமைத்திருந்தார்.
அந்தப்படத்தை வெளியிட எம். ஜி. ஆர் திட்டமிட்ட போது எம். ஜி. ஆர் திமுகவிலிருந்து வெளியே வந்து விட்டிருந்ததால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேர்ந்தது."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்றபோது திட்டமிட்டு பல முறை மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது. எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று தெரியாது என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே செலவழித்த எம்.எஸ்.விஸ்வநாதன் எப்போதெல்லாம் கரண்ட் வருகிறதோ அப்போதெல்லாம் பின்னணி இசையை பதிவு செய்தார். அந்தப் படத்திற்காக விஸ்வநாதன் கடுமையாக உழைத்ததைப் பார்த்து எம். ஜி. ஆர். அசந்து போனார். விஸ்வநாதனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பல முறை மன வருத்தங்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பல முறை எம். ஜி. ஆர் விஸ்வநாதனை திட்டியிருக்கிறார்.அப்படி பல முறை அவர் திட்டியிருந்தாலும் விஸ்வநாதனை வேறு யாராவது திட்டினால் எம். ஜி. ஆர் எப்போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.
1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பாக “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்.அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை. அந்தப் படத்துக்கான ஒரு பாடல் பதிவின்போது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பகல் பன்னிரண்டு மணிக்கு வந்த எம்.ஜி.ஆர் பதிவாக இருந்த பாட்டைக் கேட்டார்.அந்தப் பாடல் வரிகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை ஆகவே பாடல் வரிகள் மொத்தத்தையும் மாற்றச்சொன்ன அவர் இசையி லும் சில மாற்றங்களைச் சொன்னனார்.அவர் அப்படிச் சொன்னதும் "கொஞ்சம் டைம் கொடுங்க அண்ணே எல்லாத்தையும் மாத்திட்டு உங்களுக்கு வாசித்துக் காட்டு கிறேன்" என்றார் விஸ்வநாதன்.
"என்ன விசு காமெடியா பேசறே, இப்போதே மணி பன்னிரண்டு ஆகிறது.இன்னும் சிறிது நேரத்தில லஞ்ச் பிரேக் விடணும்.அதனால இப்பவே டியூன் எல்லாம் போட வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு.நேரத்துக்கு சாப்பிட்டாதான் உடம்பு நல்லாயிருக்கும் உடம்பு நல்லாயிருந்தாதான் உழைக்க முடியும்.லஞ்ச பிரேக் முடிஞ்சதும் நான் சொன்னபடி ட்யூனை மாத்திப் போட்டு வை. நான் வந்து கேட்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினர் எம் ஜி ஆர்
அவர் அப்படி சொல்லிவிட்டுக் கிளம்பியதும் விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. புதிதாக ஒரு மெட்டு போடுவதில் அவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. பத்து நிமிஷத்தில் போட்டு விடுவார் ஆனால் அன்று அவர் தவித்த தவிப்பிற்கு வேறு காரணமிருந்தது.
"இணைந்த கைகள்' பாடலை முடித்து விட்டு மதியம் ஸ்ரீதர் இயக்கியிருந்த "சிவந்த மண்" படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவர் போகவேண்டும்.அந்தப் படத்தின் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் அந்தப் படத்தின் கதாநாயகனான சிவாஜி தினமும் ரிக்கார்டிங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார்.
இங்கே உணவு இடைவேளை முடிந்து பாடலை கம்போசிங் செய்து அதற்குப் பிறகு ரிக்கார்டிங்கை முடித்துவிட்டு அங்கே செல்வது என்றால் நிச்சயமாக மாலை ஆறு மணி ஆகிவிடும்.அதுவரை சிவாஜியையும் ஸ்ரீதரையும் காத்திருக்க வைத்தால் நிச்சயம் அவர்களோடு தனக்குள்ள உறவு அடியோடு முறிந்துவிடும் என்று பயம் விஸ்வநாதனுக்குள் இருந்தது.
ஆனால் அதை எம். ஜி. ஆரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவரது தவிப்பைப் பார்த்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காரில் ஏறப் போன எம். ஜி. ஆரிடம் விஸ்வநாதன் நிலையைப் பற்றி முழுவதுமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டவுடன் காரில் ஏறப்போன எம். ஜி. ஆர் காரை விட்டு இறங்கி ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தார்
"என்ன பிரச்னை உனக்கு? "சிவந்த மண்" படத்தோட ரி ரிக்கார்டிங்குக்கு நேரத்துக்குப் போகலேன்னா ஸ்ரீதர் உன்னை கோபித்துக் கொள்வார். என்பதுதானே" என்று லேசாக சிரித்தபடியே அவரிடம் கேட்ட எம்.ஜி.ஆர் "நீ அந்த ரிக்கார்டிங்குக்க்கு போறதுக்கு முன்னாலே இந்த பாட்டில என்னென்ன மாற்றம் செய்யலாம்னு நினைக்கிறியோ அதை எல்லாம் உன்னுடைய உதவியாளரான கோவர்த்தன்கிட்ட சொல்லிட்டு போ. நான் சாப்பிட்டுவிட்டு வந்து அவரை வச்சிக்கிட்டு ரிக்கார்டிங்கை பார்த்துக்கறேன். சரியா?"என்று சொல்லி விட்டு "என்ன பண்றது விசு. நீ ரொம்ப பிசியான ஒரு மியுசிக் டைரக்டர்.அதனால நீ சிவாஜி படத்துக்கு போய் வேலையைப் பாரு. நான் இங்கே உன்னுடைய அசிஸ்டண்டா இருந்துகிட்டு மத்த வேலையைப் பார்க்கிறேன்" என்று அவரை கிண்டல் செய்தார்.
அவர் அப்படிச் சொன்னவுடன் விஸ்வநாதன் கண் கலங்கி விட்டார் உடனே அவரை அருகில் அழைத்த எம். ஜி.ஆர் “நாம்ப எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் விசு. உன்னை என்ன சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.அதனாலே நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவேன். ஆனா வேறு யாரும் உன்னைத் திட்ட நான் காரணமாக இருக்க மாட்டேன். அதனால சாப்பிட்டு முடித்துவிட்டு நீ அந்த ரிக்கார்டிங்குக்கு போய்விடு என்றார்.
விஸ்வநாதனின் பாடல்களை எம்ஜிஆர் பல முறை விமர்சித்த போதிலும் அவரிடமிருந்து விஸ்வநாதன் விலகாமல் இருந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர் அவர் மீது காட்டிய இந்த அதீத அன்புதான்.
May be an image of 2 people, people smiling and people performing martial arts
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...