Thursday, August 5, 2021

'மக்களை தேடி மருத்துவம்' பழைய திட்டத்திற்கு புதிய வடிவம்!

 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்த திட்டம் ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டம் என்றும், அதை பெயர் மாற்றி புதிதாக துவக்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'மக்களை தேடி மருத்துவம்'  பழைய திட்டம், புதிய வடிவம்!


கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில், 'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் இருப்பவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.அதன்படி, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், 'பிசியோதெரபி' சிகிச்சை, சிறுநீரக நோயாளிகள் பராமரிப்பு, குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.



விரிவுபடுத்தல்



இப்பணிகளில், தமிழக மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள், பிசியோதெரபி டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் ஈடுபடுவர். இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில், 2014ல் கொண்டு வரப்பட்ட, 'பணியிடங்களை தேடி நடமாடும் சுகாதார சேவை' திட்டத்தில், சில மாற்றங்களை செய்து, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை, தி.மு.க., அரசு தற்போது செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.அத்திட்டத்தின் அரசாணையை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அ.தி.மு.க.,வினர் கூறியுள்ளதாவது:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு, அவர்களின், 'பணியிடங்களை தேடி நடமாடும் சுகாதார சேவை' என்ற, திட்டம் கொண்டு வரப்பட்டது. பின், அனைத்து பகுதி மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


பெயர் மாற்றம்



அ.தி.மு.க., இலக்கிய அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் கூறியதாவது:முதல்வர் துவக்கி வைத்துள்ள, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், எங்களுடைய திட்டம். ஏற்கனவே இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். சட்டசபை விதி 110ன் கீழ், கட்டுமான தொழிலாளர்கள் பணியிடம் தேடிச் சென்று, அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 50 நகரும் மருத்துவமனைகளை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

இது, முத்தாய்ப்பான திட்டம் என, அனைவராலும் புகழப்பட்டது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக சென்னையை உரு வாக்கியவர் ஜெயலலிதா. அவர் கட்டுமான தொழிலாளர்களுக்காக 50 நகரும் மருத்துவமனைகளை, 19.62 கோடி ரூபாயில் செயல்படுத்தினார்.அவர் வழியில், இ.பி.எஸ்., கிராமப்புற மக்கள் மருத்துவ சேவை பெற, கிராமங்கள்தோறும், 'மினி கிளினிக்' என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அதை, மக்களை தேடி மருத்துவம் திட்டம் என, தி.மு.க., அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


இதில் என்ன தவறு?



மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, நடமாடும் மருத்துவ சேவை திட்டம், அவர்கள் ஆட்சி நடந்த போதே பயன்பாட்டில் இல்லை. 'மக்களை தேடி மருத்துவ திட்டம்' அ.தி.மு.க.,வை பின்பற்றி கொண்டு வரப்பட்ட திட்டமாக இருந்தாலும், அதில் என்ன தவறு உள்ளது?தற்போதைய கொரோனா சூழலில், நீரிழிவு, ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர், முறையான மருந்துகளை எடுத்து கொள்ளாத நிலை ஏற்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக 20 லட்சம் பேருக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கும். மாநிலம் முழுதும் ௧ கோடி பேர் பயன் பெறுவர். மக்கள் நலனை தான், முதல்வர் பார்க்கிறார். யாரை பின்பற்றி திட்டம் என்பதை விட, மக்களுக்கு பயன் அளிக்கிறதா என்பதே அரசின் இலக்கு. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


ஸ்டாலின் துவக்கி வைத்தார்



தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழா, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த நீரிழிவு நோயாளி சரோஜம்மா வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், மருந்து, மாத்திரைகளை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.

நீரிழிவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் என்பவர் வீட்டிற்கு சென்று, 'பிசியோதெரபி' சிகிச்சையை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை கோவை, சென்னை, சேலம், மதுரை, தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஏழு மாவட்டங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், காந்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின், தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.கோவில் முன் மேடைசூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில், ரக்சை எனப்படும் கோவில் மரத்தடியில், விநாயகர் மற்றும் இதர தெய்வங்கள் முன், விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது ஒரு பெண், கோவில் விளக்கை எரிய வைத்தபடி இருந்தார்.


'கெயில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம்'



நிகழ்ச்சி முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:மருத்துவமனையை மக்கள் தேடி வரக்கூடிய சூழ்நிலையை மாற்றும் வகையில், 'மக்களை தேடி மருத்துவம்' செல்லும் காலத்தை தற்போது உருவாக்கி உள்ளோம்.இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமல் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்படும். ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்னை, இதர நோய்கள், பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தான் முக்கிய பணி.மாநிலம் முழுதும் இந்தாண்டு இறுதிக்குள் படிப்படியாக இத்திட்டம் செயல்படும்; 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 1 கோடி மக்கள் பயன் பெறுவர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, 'கெயில்' நிறுவனத்தின் குழாய்களை பதிக்க அனுமதிக்க மாட்டோம். ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, அனைவருக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...