மனதில் ஈரம், அன்பு, கருணை - இவற்றைப் பெண்களுக்கு சற்று அதிகமாகப் படைத்திருக்கிறான் ஆண்டவன்.
எதிராளியின் முகக் குறிப்பை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான் என்பது என் கருத்து. அனுபவபூர்வமாகவும் இதை உணர்ந்துள்ளேன்.
அலுவலகம் முடிந்து களைப்பும் பசியும் ஒருசேர வரும் மகனிடம், ‘‘கை கால் கழுவிட்டு வாப்பா. சாப்பிடலாம்’’ என்று சாப்பாடு தவிர வேறு எதையும் பேச மாட்டாள் தாய்.
சாலையில் செல்கிற எந்தக் குழந்தை தடுக்கி விழுந்தாலும், தன் குழந்தையே தடுக்கி விழுந்ததைப் போல் பாசத்துடன் பார்ப்பவள் பெண்.
1985 அல்லது 1986 ஆக இருக்கலாம். அப்போது சென்னை பட்டினப்பாக்கத்தில் தங்கி இருந்தேன். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 12 பி பஸ்ஸில் வடபழநி சென்று முருகப் பெருமானை வணங்கும் பேறு அப்போது இருந்தது.
கையில் போதுமான காசு இல்லை என்றால், சைக்கிளிலேயே சென்று விடுவேன். அப்பல்லாம் இப்ப இருக்கிற ஹெவி டிராபிக் கிடையாது.
ஒரு முறை நான் ஓட்டிக் கொண்டு போன சைக்கிள், முருகன் தரிசனம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் கோடம்பாக்கம் பாலம் அருகே டயர் வெடித்து விட்டது. சரி செய்வதற்காக அருகில் உள்ள ஒரு சைக்கிள் ரிப்பேர் கடைக்குத் தள்ளிக் கொண்டு போய் டயர் மாற்றச் சொன்னேன். எல்லாம் முடித்த பிறகு அவர் கேட்ட தொகையைப் பார்த்தால், பன்னிரண்டு ரூபாய் என்னிடம் குறைந்து காணப்பட்டது.
சைக்கிள் கடைக்காரர், ‘‘கையில போதுமான காசு வெச்சுக்காம ஏன் வந்தீங்க?’’ என்று சற்று கறாராகப் பேசினார்.
மொபைல் போனெல்லாம் இல்லாத காலம். நான் கையைப் பிசைந்து கொண்டு நின்றேன்.
இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார் அருகில் பூ விற்கும் ஒரு பெண்மணி. என் முகத்தைப் பார்த்து விட்டு அருகில் வந்தவர், ‘‘ஏம்ப்பா கண்ணு... காசு குறையுதா?’’ என்று வாஞ்சையுடன் கேட்டார்.
‘‘ஆமாம்’’ என்பது போல் தலையை மட்டும் அசைத்து, பன்னிரண்டு ரூபாய் குறைவதாகச் சொன்னேன்.
முந்தானை சுருக்கை அவிழ்த்து சில்லறைக் காசுகளாகப் பொறுக்கி பன்னிரண்டு ரூபாய் என்னிடம் கொடுத்து, ‘‘சைக்கிளை எடுத்து ஓட்டிட்டுப் போ ராசா... எப்ப முடியுமோ, என்கிட்ட குடு’’ என்றார்.
என் கண்கள் என்னையும் அறியாமல் கலங்கின.
அடுத்த வாரம் சைக்கிளில் போகும்போது பன்னிரண்டு ரூபாயைப் பெண்மணியிடம் கொடுத்தேன். ‘‘இதுக்கு என்ன ராசா அவசரம்?’’ என்று அந்தப் பெண்மணி கேட்டதில் போலித்தனம் இல்லை.
அதன்பின், அந்த வழியே செல்லும்போதெல்லாம் பெண்மணியைத் தேடுவேன். காணவே இல்லை.
அன்பும், ஈரமும், கருணையும் கொண்ட ஒட்டுமொத்த பெண் இனத்துக்கே என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகா பெரியவா சரணம்.
No comments:
Post a Comment