Monday, March 13, 2017

சிக்கலில் தமிழக நிர்வாகம்!

தமிழக அரசின் போலீஸ் துறைக்கு சொந்தமான ஜாமர் கருவி, கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் செல்போன்களை செயல் இழக்க பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம், பன்னீர் தரப்பினர் கேட்டுக் கொண்டனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த புகார் மனுவை, கவர்னர், மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், மத்திய உள்துறை, தற்போது தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. கூடவே, இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு என்ன விளக்கம் கொடுப்பது என புரியாமல், மூவரும் தடுமாறி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததால், அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. தமிழக அரசு சார்பிலும் அவருக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாய்களை செலவழித்து, பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது.
சிறப்பு அதிரடிப் படை போலீஸார், ஜெயலலிதாவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கினர். அவர், எங்கு சென்றாலும், குறிப்பிட்ட அந்த ஏரியாவில் உள்ள செல்போன் டவர்களை செயல் இழக்கச் செய்து, செல்போன்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக, மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாமர் கருவி அடங்கிய கார், போலீஸ் தரப்பில் வாங்கப்பட்டது. அந்த கார், ஜெயலலிதா எங்கு செல்கிறாரோ, அங்கு முன் கூட்டியே சென்று விடும். மற்ற நேரங்களில், ஜெ.,யின் போயஸ் தோட்டம் வீட்டிலேயே, நிறுத்தப்பட்டிருக்கும்.
டிச., 5, 2016ல் ஜெயலலிதா இறந்ததும், அந்த ஜாமர் கருவியை, செக்யூரிட்டி பிரிவுக்கு அதை, செக்யூரிட்டி எஸ்.பி.,யான சுதாகர் திரும்பக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. போயஸ் தோட்டத்திலேயே தொடர்ந்து வைத்திருந்தார். இதற்கிடையில், ஜெ., மறைவுக்குப் பின், சசிகலா, முதல்வராகத் துடித்த போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணி பக்கம் சென்று விடாமல் இருக்க, கூவத்தூர் உள்ள ‛கோல்டன் பே' சொகுசு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்களும், செயல்படாமல் செய்யப்பட்டன. அதற்காக, தமிழக போலீஸ் துறைக்கு சொந்தமான ஜாமர் கருவி, செக்யூரிட்டி போலீஸ் பிரிவு அதிகாரிகள் துணையோடு, கூவத்தூரில் உள்ள ரிசார்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உளவுத்துறை அதிகாரியாக இருந்து விடுப்பில் சென்று, போயஸ் தோட்டத்திலேயே அமர்ந்து, அரசியல் வேலை பார்த்த அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே, ஜாமர் கருவி, கூவத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதை கண்டறிந்த, பன்னீர் தரப்பினர், அரசுக்கு சொந்தமான ஜாமர் கருவியை, எப்படி அரசியல் காரணங்களுக்காக, கூவத்தூருக்கு கொண்டு செல்லலாம்? இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி, இந்த காரியத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு, விசாரணைக்காக, மத்திய உள்துறைக்கு உடனடியாக அனுப்பப்பட்டது.
தனியார் யாரும் ஜாமர் கருவி வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இந்நிலையில், தனியார் ஒருவரின் விருப்பப்படி, போலீஸ் துறையின் ஜாமர் கருவி எப்படி கூவத்தூர் சென்றது? என விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை டி.ஜி.பி., ஆகியோருக்கு, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு எப்படி விளக்கம் அனுப்புவது என்று புரியாமல், அரசு அதிகாரிகள் தடுமாறி வருகின்றனர். ஒருவேளை, நடந்த விஷயங்களை மறைக்காமல், மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்பி வைக்குமானால், உளவுத் துறை, செக்யூரிட்டி பிரிவுகளைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள், சஸ்பெண்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலும், தமிழக அரசு தவித்து வருகிறது.
இந்த பிரச்னையை முதல்வர் பழனிச்சாமியிடம், அதிகாரிகள் கொண்டு சென்ற போது, அரசு தரப்பு கருவியை எப்படி கூவத்தூருக்கு கொண்டு வந்தீர்கள் என, கேள்வி கேட்டதும், தமிழக அரசு அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த பிரச்னை, தமிழக போலீஸ் வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உளவுப் பிரிவு போலீசாரும், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...