:டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தையின் கணிப்புகளை மீறி அதிக லாபம் ஈட்டியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான, டி.சி.எஸ்., ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, முதல் காலாண்டில், நிகர லாபமாக, 8,131 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், இந்நிறுவனம், நிகர லாபமாக, 7,340 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது. இதனுடன், நடப்பாண்டு லாபத்தை ஒப்பிடும்போது, 10.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 38 ஆயிரத்து, 172 கோடி ரூபாயாகும். இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 34 ஆயிரத்து, 261 கோடி ரூபாயாக
இருந்தது.நடப்பாண்டில் வருவாயை பொறுத்தவரை, 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான, ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
இந்த புதிய நிதியாண்டில், ஒரு நிலையான துவக்கத்தை பெற்றுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்கள், அவர்களது வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து முதலீடு
செய்கின்றனர்.இதனால், இந்த காலாண்டில், எங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்தன. அதன் மூலம் வருவாயும் கிட்டியது.மதிப்பீட்டு காலத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாயில், டிஜிட்டல் வருவாய், 32.2 சதவீதமாக உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின், முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 42.1 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த காலாண்டில், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட, 12 ஆயிரத்து, 356 பேர்களுடன் சேர்த்து, மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை, 4 லட்சத்து, 36 ஆயிரத்து, 641 பேர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை.ஒரு பங்கின் வருவாய், 21.67 ரூபாய் ஆக உள்ளது. இது ஆண்டுக்கு, 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டில், ஒரு பங்குக்கு, 5 ரூபாய் டிவிடெண்டு வழங்க, நிர்வாகக் குழு பரிந்துரைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment