கோவா சட்டசபையில், 17 எம்.எல்.ஏ.,க்களுடன், தனிப்பெரும் கட்சியாக வலம் வந்த காங்கிரஸ், தற்போது, ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன் தத்தளித்து கொண்டிருக்கிறது.

கோவா சட்டசபைக்கு, 2017ல் தேர்தல் நடந்தது. இதில், காங்., 17 இடங்களில் வென்றது. பா.ஜ., 13 இடங்களை பிடித்தது. கோவா முன்னணி கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது. இந்நிலையில், 2017ல், காங்.,கைச் சேர்ந்த வால்போய் தொகுதி, எம்.எல்.ஏ., விஷ்வஜித் ரானே, பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு, அமைச்சர் பதவி தரப்பட்டது. இதுவே, காங்., சந்தித்த முதல் சரிவு. அடுத்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே ஆகியோர், 2018ல் பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, காங்.,கின் பலம், 14 ஆக குறைந்தது. இதற்கிடையே, முதல்வர் மனோகர் பரீக்கர் மற்றும் மபுசா தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரான்சிஸ் டிசோஸா ஆகியோர் மரணம் அடைந்தனர். அதனால், கோவா சட்டசபையின், நான்கு தொகுதிகளுக்கு, சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், மூன்று தொகுதியில் பா.ஜ.,வும், ஒரு தொகுதியில், காங்.,கும் வென்றன. இதனால், காங்.,கின் பலம், 15 ஆக உயர்ந்தது.
இந்த நேரத்தில் தான், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சந்திரகாந்த் கவ்லேக்கர் தலைமையில், காங்.,கைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் இணைந்து, அக்கட்சியின் பலத்தை, ஐந்தாக குறைத்து உள்ளனர். தற்போது, காங்.,கில் உள்ள, ஐந்து, எம்.எல்.ஏ.,க்களில், நான்கு பேர், முன்னாள் முதல்வர்களாக பதவி வகித்தவர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில், தங்கள் கட்சியைச் சேர்ந்த, 13 எம்.எல்.ஏ.,க்களை, காங்., இழந்துள்ளது.
மூவருக்கு அமைச்சர் பதவி!
பா.ஜ.,வில் இணைந்துள்ள, 10 காங்., - எம்.எல்.ஏ.,க்களில், மூன்று பேருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, பா.ஜ.,வைச் சேர்ந்த துணை சபாநாயகர் மைக்கேல் லோபோவுக்கும் அமைச்சர் பதவி தரப்பட்ட உள்ளது. இதை, மைக்கேல் லோபோ நேற்று உறுதி செய்தார். இவர்கள் நால்வரும், இன்று பதவி ஏற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. காங்.,கைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., பக்கம் வந்ததற்கு, மைக்கேல் லோபோ முக்கிய பங்காற்றியதால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment