Friday, July 12, 2019

உரிமை மாற்றம்!

‘சரவண பவன்’ நமது சிறந்த உணவகங்களில் ஒன்று. இது ராஜகோபால் என்பவருக்கும் அவர் வாரிசுகளுக்கும் சொந்தமானது என்பதும் நம்மில் அநேகருக்குத் தெரியும். இது, கட்டாயம் மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரத் துறையின் (கார்ப்பரேட் அஃபேர்ஸ்) கீழ் ஜி எஸ் டி அடையாள எண் பெற்றிருக்கும். ‘அண்ணாச்சி’ ராஜகோபாலின் சரவணபவன் சுவைக்காகவே போவோர் உண்டு. இந்த உணவகத்துக்கு உலகம் முழுதும் கிளைகள் உண்டு. இவை ‘கை மாறி விட்டன’ என்றும், பல கோடி ரூபாய்களுக்கு யாரோ ஒரு கனவான் சரவணபவனை வாங்கி விட்டதாகவும் ‘கிசு கிசு’. வெளியில் அறிவிக்கப் பட வில்லை!
அந்த காலத்தில் , மாயூரத்தில் காளியாகுடி ஹோட்டலும், கும்பகோணத்தில் வெங்கடா லாட்ஜ் ஹோட்டலும் சுவையான உணவுக்குப் பெயர் போனவை. இங்கெல்லாம் போய் சாப்பிட, அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் அதிகாலை கிளம்பி வருவார்கள்!. இவையும் ‘கை மாறி விட்டனவா’ என்று தெரிய வில்லை! இப்படிப்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு நான் பழைய பெருமையை எண்ணி, சமீபத்தில் போனேன். தரம் சகிக்க வில்லை.
ஆற்காட்டில் முன்பு சேர்மன் இனிப்பகம் என்று ஒன்று இருந்தது அதில் தயாரிக்கப் படும் மக்கன்பேடா உலகப் பிரச்சித்தி பெற்றது. கொஞ்ச நாள் முன்பு நான் போன போது, வேறு யாரோ மக்கன்பேடாவை விற்கிறார்கள்.
சரி! இப்படிப்பட்ட பெயரைப் பெற்றிருக்கும் நிறுவனங்களின் உரிமையை, சத்தம் போடாமல், எந்த வாடிக்கையாளருக்கும் தெரிவிக்காமல், வேறொருவருக்கு மாற்றி விடலாமா? ஒரு நபரோ அல்லது குழுவோ , வாடிக்கையாளர்கள் மனதைக் கவர்ந்து, தொடர்ந்து அவர்கள் ஆதரவைப் பெற்று வரும் போது, ஒருவருக்கும் அறிவிக்காமல், உரிமையை வேறொருவருக்கோ, அல்லது குழுவுக்கோ மாற்றி விடுவது நியாயமா? அது வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை மிகவும் பாதிக்காதா?
நான் சென்னையிலிருந்து வெளியூர் போகும் போதெல்லாம், கிராண்ட் ஸ்வீட்ஸ் பலகாரங்களை வாங்கிச் செல்வது வழக்கம். என் சொந்தக்காரர்களுக்கும், நண்பர்களுக்கும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்புகளும் தட்டை போன்ற கார வகைகளும் மிகவும் பிடித்தமானவை. நான் வெளி நாடுகளுக்குப் போகும் போது கூட கிராண்ட் ஸ்வீட்ஸ் தயாரிப்புகளைக் கட்டாயம் வாங்கிச் செல்வதுண்டு. 
இப்போது என் நண்பர் மூலம், கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பகத்தின் 18 கிளைகளை அப்துல்லா என்பவர் வாங்கி விட்டதாகவும், மாம்பலம் பஸுல்லா சாலையில் உள்ள ஒரே ஒரு கிளை மட்டும் தான் அசல் உரிமையாளரின் வாரிசுக்கு சொந்தம் என்றும் கேள்விப்படுகிறேன். இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது!
‘தி ஹிந்து’ நாளிதழ், கஸ்தூரிரங்க ஐயங்கார் வாரிசுகளுக்கு சொந்தமானது என்று நமக்குத் தெரியும். அதுவும் அன்னிய நாட்டு அமைப்பு ஒன்றுக்கு சத்தம் போடாமல் விலைக்கு விற்கப் பட்டு விட்டது என்று சொல்லுகிறார்கள். ‘ஆனந்த விகடன் ‘ வார இதழும் அப்படியே! இவற்றுக்கு என்று இருக்கும் வாசகர்கள் விஷயம் தெரிந்தால் அதிர்ச்சி அடைய மாட்டார்களா?
இவை போன்று பல நிறுவனங்கள் சத்தம் போடாமல் கை மாறி இருக்கின்றன. கை மாறிய விஷயம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப் படுவதே இல்லை. அவர்களும், அசல் உரிமையாளரிடம் தொடர்ந்து சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதாக எண்ணி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இது தவறு இல்லையா? ஒரு நிறுவனம் கை மாறும் போது, அது மக்களுக்கு அறிவிக்கப் பட வேண்டாமா? தங்களுக்குள் ரகசியமாக பரிவர்த்தனை செய்து கொள்ளும் உரிமையாளர்கள், தங்களை நம்பிய வாடிக்கையாளர்களுக்கு துரோகம் இழைப்பதாக ஆகாதா?
மத்திய அரசு, எந்த நிறுவனமும், கை மாறினால், அதனை குறைந்த பட்சம் 3 தினப் பத்திரிகைகளிலும், 3 டி வி க்களிலும் மூன்று நாட்களுக்கு , மொத்த பறிமாற்ற விவரத்தையும் அறிவிக்க வேண்டும் என்னும் சட்டம் கொண்டு வர வேண்டும். 
நண்பர்களே! நான் கூறுவது சரியா? இல்லையா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...