Thursday, July 5, 2018

அரசு நிர்ணயித்த வட்டியுடன் அசலைக் கொடுத்தால் போதும்.

*தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன்* வாங்கியவர்கள் நீதிமன்றம் வாயிலாகவும் பணத்தை திரும்பச் செலுத்தலாம்:
அரசு நிர்ணயித்த வட்டியுடன் அசலைக் கொடுத்தால் போதும்.
தனியாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள், அந்தப் பணத்தை அவரிடம்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கடன் தொகையை அரசால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியுடன் சேர்த்து தங்கள் எல்லைக்குட்பட்ட நீதிமன்றம் வாயிலாகக் கூட செலுத்தலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 23-ம் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து பலியாகினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் நபர்களை கண்டறிந்து, தமிழ்நாடு வரம்புக்கு அதிகமான வட்டி வசூல் (கந்துவட்டி) தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள், அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தைவிட அதிகமாக வசூலித்தால் அது கந்து வட்டியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கடனாளியை கொடுமைப்படுத்துவோருக்கும், கொடுமைப்படுதத் தூண்டுவோருக்கும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன், ரூ.30 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். கடன் கொடுத்தவரின் தொல்லை காரணமாக ஒரு கடனாளியோ அல்லது அவரது குடும்பத்தில் ஒருவரோ தற்கொலை செய்துகொண்டால், அது தற்கொலை நிகழத் தூண்டப்பட்டதாக கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.
நீதிமன்றத்தில் முறையிடுவது எப்படி?
அவசர தேவைக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கும்போது எந்த தேதியில், எவ்வளவு ரூபாய் கடனாகப் பெறுகிறோம் என்பதை தவறாமல் புரோ நோட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும். கடன் பெறுபவரும் ஒரு பிரதியை பெற்றுக்கொள்வது நல்லது. அதன்பின் ஒவ்வொரு முறையும் வட்டி கொடுக்கும்போது, அதுகுறித்த விவரங்களை புரோ நோட்டின் பின்பகுதியில் குறிப்பிட்டு வரவு வைத்துக்கொள்ள வேண்டும். பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படும்போது இது பேருதவியாக இருக்கும்.
அதேபோல, வட்டிக்கு கடன் வாங்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் காலியாக உள்ள காசோலை (ப்ளாங்க் செக்), புரோ நோட், அதனுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் ஆகியவற்றில் கையெழுத்திட்டுக் கொடுக்கக் கூடாது. தவிர்க்க முடியாதபட்சத்தில், அவ்வாறு கையெழுத்திட்டுக் கொடுக்க நேர்ந்தால், அந்த காசோலையின் எண், கொடுத்த தேதியை குறித்துக்கொள்ள வேண்டும்.
பின்னாளில் கடன் கொடுத்தவர் கூடுதலாக தொகைகேட்டு பிரச்சினை செய்யத் தொடங்கினால், உடனடியாக அந்த காசோலையின் எண்ணைக் குறிப்பிட்டு, அது செல்லாது என அறிவிக்கும் கடிதத்தை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு அளிக்க வேண்டும். அதன் ஒரு பிரதியை நாமும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், அந்த காசோலை மதிப்பிழந்துவிடும். அதை வைத்துக்கொண்டு கடன் கொடுத்தவரால் எதுவும் செய்ய முடியாது.
பெரும்பாலும் கடன் கொடுப்பவர்கள் நமக்கு எந்த ஆவணத்தையும் கொடுக்க மாட்டார்கள்.
எனவே, அவர்கள் கூடுதலாக வட்டி கேட்டு மிரட்டும் சமயத்தில், நீதிமன்றத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்படலாம். இதைத் தவிர்க்கவும் வழி இருக்கிறது. கொடுத்த பணத்துக்கு கூடுதல் தொகை கேட்டு மிரட்டுவதை நிறுத்திக் கொள்ளும்படியும், இதுகுறித்து சட்டரீதியாக தனக்கு பதிலளிக்குமாறும் கடன் கொடுத்தவருக்கு வழக்கறிஞர் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அந்த நோட்டீஸில் அவரிடம் கடனாகப் பெற்ற தொகை, அந்த சமயத்தில் தொகையை குறிப்பிட்டு கொடுத்த காசோலை, காலியாகக் கொடுத்த காசோலை போன்ற விவரங்களை எழுதி, காசோலைகளின் எண்களையும் நோட்டீஸில் குறிப்பிட வேண்டும். இதற்கு அவர் பதில் அளித்தாலும், அளிக்காவிட்டாலும், இந்த நோட்டீஸ் நீதிமன்றத்தில் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும். அதோடு மட்டுமின்றி காவல் நிலையத்திலும், காவல் ஆணையர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்து அதன் நகல்களை வைத்திருக்க வேண்டும்.
இவை இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை நீதிமன்றத்தில் புகார் செய்தால், அதுதொடர்பான சட்டரீதியிலான விசாரணை நடைபெறும்போது, கடன் கொடுத்தவர் நிச்சயம் சிக்கிக் கொள்வார் என்றார்.
வட்டிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்...
வட்டி ரகங்கள் குறித்து காவல் துறையினரும், வட்டி தொழில் அறிந்தவர்களும் கூறுவதாவது:
கில்லர் வட்டி: வட்டிக்கு பணம் தேவை என ஒருவரிடம் கேட்டுவிட்டு, அந்த பணத்தை குறிப்பிட்ட நாளில் நாம் வாங்காவிட்டாலும் ஒருமாதம் கழித்து வந்து, “நீ கேட்டதால் நான் பணத்தை தனியாக எடுத்து வைத்து விட்டேன். நீ வாங்காமல் போனதற்கு நான் பொறுப்பாக முடியாது. எனவே வட்டியைக் கொடுத்து விடு” எனக்கூறி வசூலிப்பார்களாம்.
மடக்கு வட்டி: அசலுக்கான வட்டியை மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சரியாக செலுத்திவிட வேண்டும். ஒரு மாதம் தவறினாலும் அந்த வட்டித் தொகையையும் அசலுடன் சேர்த்து, அந்த தொகைக்கு அடுத்தடுத்த மாதங்களில் வட்டி செலுத்த வேண்டும்.
சுணக்கு வட்டி: அசலுக்கான வட்டியை மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் கட்டாமல் ஒருநாள் தவறினாலும், அதற்கென தனியாக வட்டி வசூலிக்கப்படுவதை சுணக்கு வட்டி என்கின்றனர்.
ஸ்பீடு வட்டி: அவசரத்துக்காக ஒருவரிடம் காலையில் ரூ.500 கடன் கேட்டால் 100 ரூபாயை வட்டியாகப் பிடித்துக் கொண்டு, மீதித்தொகை ரூ.400-ஐக் கொடுப்பார்களாம். அன்று மாலை கடனை திருப்பிக் கொடுக்கும்போது ரூ.500-ஐக் கொடுக்க வேண்டும்.
தின வட்டி: ஒரே ஒருநாள் என்ற அடிப்படையில் இந்த வகை கடன் அளிக்கப்படுகிறது. கடன் தொகையில் 10 சதவீதத்தை பிடித்துக்கொண்டு 90 சதவீதத்தை மட்டும் கொடுப்பார்களாம். அன்று மாலையே கடனை திருப்பி தந்துவிட வேண்டுமாம்.
டீசல் வட்டி: வியாபாரம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்களுக்குத் தேவையான டீசல் உள்ளிட்ட பொருட்களை காலையில் கடனாகக் கொடுக்கும் நபர்கள், அன்று மாலையே வசூலிக்க வந்துவிடுவார்கள். அப்போது அவர்களிடம் டீசல் மற்றும் பொருட்களுக்கான தொகையுடன், அந்த மதிப்பில் 25 சதவீதத்தை வட்டியாக சேர்த்துத் தர வேண்டுமாம்.... 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...