நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது வள்ளுவர் தேகத்துக்கு மட்டும் சொன்னார் என்று நான் எண்ணவில்லை, தேசத்துக்கும் சேர்த்து என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.
லஞ்சம், ஊழல், நேர்மையின்மை, செயலின்மை, உறவினர் சலுகை(nepotism) , நயவஞ்சகம், களவு, பொய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் இந்த தேசத்தை பிடித்துள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நதி மூலம், ரிஷி மூலம் தேடிப்போனால் அது இந்த தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களிடம் வந்து முடிகிறது.
அரசியல்வாதி தான் ஆட்சியாளர் ஆவது. அவர்களை அந்த பொறுப்பில் அமர்த்துவது மக்களாகிய நாம்தான். எனவே நோய்க்கான மூல காரணம் நம்மிடம்தான் இருக்கிறது. இன்னும் சரியாக சொல்லப்போனால் பிரச்சனை நாம் இவர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறையில் இருக்கிறது.
இதை தான் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். பிரச்சனையை சரியாக சொல்ல முடிந்த அவரால் அதற்கு சரியான தீர்வை கண்டெடுக்க முடியவில்லை. இன்னொரு அரசியல் கட்சி தொடங்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அவர் கட்சியை மட்டுமல்ல மொத்தமாக நாட்டிலுள்ள எல்லா கட்சிகளையும் சேர்த்தே தான் சொல்கிறேன். இந்த கட்சிகள்தான் நமது ஜனநாயகத்துக்கு மிக பெரும் கேடு. அதனால்தான் நம்மால் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாமல் அரசியவாதிகளில் ஒருவரை தேர்ந்தடுக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்.
ஆட்சியாளர்களை மக்களிலிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கும் மாற்று தேர்தல் முறையை வலியுறுத்தவே இந்த பதிவு. இதுவே நாம் வரிசைப்படுத்திய தேசத்தை பீடித்துள்ள நோய்களுக்கான சஞ்சீவினி மருந்து. இது நமது பண்டைய சோழ மன்னர்கள் அறிமுகம் செய்த குடவோலை தேர்வு முறையின் நீட்சி என சொல்லத்தக்க "மகேசன் தேர்வு மக்களின் தீர்ப்பு"..
இந்த முறைப்படி தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டம் – வேட்பாளர் விண்ணப்பம்
இரண்டாம் கட்டம் – வேட்பாளர் தேர்வு – குடவோலை முறை
மூன்றாம் கட்டம் – உறுப்பினர் தேர்வு – வாக்களிப்பு
நான்காம் கட்டம் – அமைச்சரவை வேட்பாளராக தகுதிபெற – எழுத்து தேர்வு
ஐந்தாம் கட்டம் – அமைச்சரவை தேர்வு – உறுப்பினர்கள் வாக்களிப்பு
இரண்டாம் கட்டம் – வேட்பாளர் தேர்வு – குடவோலை முறை
மூன்றாம் கட்டம் – உறுப்பினர் தேர்வு – வாக்களிப்பு
நான்காம் கட்டம் – அமைச்சரவை வேட்பாளராக தகுதிபெற – எழுத்து தேர்வு
ஐந்தாம் கட்டம் – அமைச்சரவை தேர்வு – உறுப்பினர்கள் வாக்களிப்பு
முதலில் தேர்தலில் நிற்பதற்கு சில அடிப்படை தகுதிகள் வேண்டும். அரசியல் அடிப்படைகளையும், அரசின் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளையும், மக்கள் பிரதிநிகளின் கடமை-உரிமைகளையும், அடிப்படை சட்ட விதிகளையும் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே அரசியல் களத்துக்கு வர தகுதி பெறும் நோக்கத்தில் DPA எனப்படும் Diploma in Political Administration என்ற பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே வேட்பாளராய் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். இந்த தேர்வை 18 வயது நிரம்பிய யாரும் எழுதலாம். ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வு நடைபெறும்.
தேர்தல் அறிவிக்கப்படும் போது வேட்பாளராக விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமகனாக 25 முதல் 65 வயது இருப்போர் அவர் வசிப்பிட தொகுதியில் மட்டுமே வேட்பாளராக விண்ணப்பிக்க இயலும். இதை ஆதார் அட்டை முகவரி மூலம் வரையறுக்கலாம். மக்கள் சேவை செய்ய ஆர்வமும் தகுதியும் இருக்கும் எல்லாரும் இணையம் மூலமும் கைத்தொலைபேசி செயலி மூலமும் இலவசமாக விண்ணப்பிக்கலாம். சென்னையில் உட்கார்ந்துகொண்டு திண்டுக்கல் தொகுதிக்கு வேட்பு மனு கொடுக்கும் வேலையெல்லாம் இனி செல்லுபடியாகாது.
இரண்டாம் கட்டம், இதுதான் மிக முக்கியம் இதில் தான் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பித்த அனைவரின் ஆதார் எண்களும் சிறிய தாளில் அச்சிடப்பட்டு ஒரு கண்ணாடி குடத்தில் எல்லாரும் பார்க்கும் வண்ணம் வைக்கப்படும். ஒரு நான்கு வயது குழந்தையை கொண்டு குடத்தை குலுக்கிவிட்டு தொகுதிக்கு பத்து சீட்டுகள் எடுக்கப்படும், அவர்களே வேட்பாளர்கள்.
இதை வெறும் குலுக்கல் என்று வைக்காமல் இறைவன் முன்னிலையில் செய்தால் இன்னும் விசேஷம், சோழ நாட்டில் குடவோலைமுறையில் இப்படிதான் தேர்வு நடைபெற்றது. எனினும் பல மதத்தோர் வாழும் நாட்டில் இதற்கு ஆட்சேபங்கள் எழ வாய்ப்பு உள்ளதால் ஒரு பொது இடத்தில் வைத்து கூட்டு பிரார்த்தனை செய்து இறைவனிடம் வேட்பாளர்களை தெரிவு செய்யவதை விட்டுவிடவேண்டும். குழந்தையின் தேர்வு அவர் விருப்பம் என கொள்வோம்.
மூன்றாம் கட்டத்தில் மக்கள் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். இன்றுள்ளது போல இல்லாமல் வேட்பாளர் தேர்வு முடிந்த அடுத்த நாள் பிரச்சாரம் அதற்கு அடுத்த நாள் வாக்களிப்பு அதற்கு அடுத்த நாள் முடிவு. பிரச்சாரம் என்பது மிக மிக எளிமையாக தேர்தல் நடத்தும் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு பொது இடத்தில் நடைபெறும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதினைந்து நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது மக்கள் பணிக்கான திட்டம், எதற்கு முக்கியத்துவம் தருவார் என்பதை அறிவிக்கவேண்டும். இது தொலைகாட்சியிலும் இணைய,கைத்தொலைபேசி வழியே வாக்காளர்களுக்கு சென்று சேரும். ஒருவரும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க அனுமதி இல்லை, அவர் சார்பில் யாரும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குறுதிகள் அளிப்பதும் குற்றம் என அறிவிக்கப்படும். வேட்பாளர் உரையினை சீர்தூக்கி பார்த்து, அவர் பின்னணியையும் அறிந்து மக்களே முடிவெடுத்து வாக்களிக்கவேண்டும். அதிக வாக்கு பெற்றவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
நான்காம் கட்டத்தில் வாக்களிப்பில் வென்ற உறுப்பினர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். இதில் பொது நிர்வாகம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, நிதி நிர்வாகம், வணிகம் என அமைச்சரவையில் உள்ள அனைத்து துறைகளிலும் கேள்விகள் இருக்கும். மத்திய அமைச்சரவைக்கும் தேசிய அளவிலும், மாநில அமைச்சரவைக்கு அவரவர் மாநிலம் சார்ந்ததாகவும் கேள்விகள் இருக்கும். இதில் அனைத்து துறைகளிலும் சராசரியை விட அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் முதல் பத்து இடம் பிடித்தவர்கள் தேசிய அளவின் பிரதமர் பதவிக்கும மாநில அளவில் முதல்வர் பதவிக்கும் தகுதி பெறுவர். துறை வாரியாக முதல் பத்து இடம் பிடித்தோர் அமைச்சர் தேர்வுக்கு தகுதி பெறுவர்.
இறுதி கட்டத்தில் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்படும். மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முன்னே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு தெரிவு செய்யப்பட்டோர் தங்களின் எதிர்கால திட்டங்களை விளக்கி கூறவேண்டும். அதே போல மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முன் முதல்வர் மற்றும் மாநில அமைச்சரவைக்கு தெரிவு செய்யப்பட்டோர் தங்களின் எதிர்கால திட்டங்களை விளக்கி கூறவேண்டும். இவர்கள் உரையினை சீர்தூக்கி பார்த்து உறுப்பினர்கள் வாக்களித்து அமைச்சரவையை தேர்வு செய்யவேண்டும். இந்த உரைகளும் தேர்வும் நாட்டு மக்கள் காணும் வண்ணம் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும்.
இவ்வளவுதான் தேர்தல்..
சற்றே சிந்தித்து பார்த்தால் இதன் சிறப்புகள் புலப்படும். தேர்தலில் சாதி இல்லை. மதம் இல்லை. கட்சி இல்லை. மாநாடு இல்லை. கூட்டணி இல்லை. தேர்தல் வசூல் இல்லை. குடும்ப அரசியல் இல்லை. ஓட்டுக்கு காசுகொடுப்பதற்கில்லை. கள்ளவோட்டும் இல்லை. பிரச்சாரம் இல்லை.தொழிலதிபர், நடிகர் தயவு எதுவும் தேவையில்லை.
மக்கள் பணியாற்ற எல்லா மக்களுக்கும் சமமான வாய்ப்பு.நம்பமுடியாத அளவுக்கு தேர்தலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வீணடிக்கப்படும் லட்சக்கணக்கான கோடிகள் பணம் மிச்சம். இதை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.எதிர் கட்சி ஆளும் கட்சி என்ற பிரிவினை இருக்காது. சட்டமன்றம் நாடாளுமன்றம் முறையாக நடக்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவரும் மக்கள் சேவகர்கள். அவர்களுக்கு கட்சி,கூட்டணி என்று எந்த சுமையும் இருக்காது. மக்கள் நலம் ஒன்றே அரசின் கொள்கையாக இருக்குமாதலால் தனியாக இடதுசாரி, வலதுசாரி, கம்யூனிச, சோசியலிச கொள்கைகளுக்காக அடித்துக்கொள்வது இருக்காது. யாரிடமும் கைநீட்டி தேர்தல் செலவுக்கு பணம் வாங்காததால் எந்த தொழிலதிபருக்கும் சலுகை காட்ட தேவையில்லை.
மிக முக்கியமானது. இன்றிருப்பது போல பதவிக்கு வருவோர் மக்களிடமிருந்து விலகி வேறு உலகில் வாழ்வது போல வாழும் வேலையெல்லாம் செல்லுபடியாகாது. பணிக்காலத்தில் கண்ணியமான சம்பளம் வழங்கப்படும். அவ்வளவுதான். பென்ஷன் உள்ளிட்ட எந்த சலுகையும் கிடையாது. பதவி காலம் முடிந்ததும் மீண்டும் மக்களோடு மக்களாக கலந்துவிடவேண்டும்.
வாழ்நாளில் ஒரே முறை மட்டுமே ஒரு பதவியை ஒருவரால் வகிக்க முடியும். யாரும் என்றைக்கும் சாஸ்வதமாக பதவியில் இருக்கவும் முடியாது. அவரின் வாரிசுக்கு பதவியை தாரைவார்க்கவும் முடியாது. அது மட்டுமல்ல பொது வாழ்வில் ஈடுபடுவோரின், அவரின் குடும்பத்தாரின் பணப்பரிமாற்றங்கள் குறைந்தது 25 வருடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். வருமானத்துக்கு மீறிய அளவில் ஏதேனும் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும்.
இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும். கட்சிகளுடன் சேர்த்து அவர்கள் செய்து வந்த அத்தனை அடாவடிகளும் முடிந்துவிடும். கட்சி என்ற அமைப்பையே ஒழித்துவிட்டதால் மிகப்பெரும் ஊழல் ஏதும் செய்தாலும் அந்த பணத்தை மறைக்க முடியாது மாட்டிக்கொள்வர்
இதில் பாதக அம்சங்களும் இல்லாமல் இல்லை. அநேகமாய் அரசியல் அனுபவம் என்பது இல்லாமலேயே பதவிக்கு வருவார்கள். நிர்வாக திறன் இருக்குமா என்பது தெரியாது. அதிகாரிகள் அரசியல்வாதிகளை ஓரம் கட்ட பார்க்கலாம். உண்மையிலேயே அரசியலில் சேவை செய்ய வேண்டும், மக்களுக்கு பாடுபடவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.எந்த அமைப்பிலுமே ஒன்றிரண்டு கோளாறுகள் இருக்கத்தான் செய்யும், நிலவிலேயே களங்கம் இருக்கிறதே. ஆனாலும் இப்போது இருக்கும் ஊழல் மலிந்த, நேர்மை மறந்த அரசமைப்பு முறைக்கு இது ஆயிரம் பல்லாயிரம் மடங்கு தேவலாம்.
இன்றைய சூழலில் தனியாக தேர்தல் களத்துக்கு வரும் நல்லவர்கள் கட்சி வேட்பாளர்களின் தகிடுதத்தங்களையும், ஆள்பலத்தையும், பண பலத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தேர்தல் களத்திலிருந்து விலகுவதையும், தோல்வியடைவதையும் பார்க்கிறோம். தனி ஒருவனாய் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவது இயலாத காரியம். அதனால்தான் கட்சி வேட்பாளர்களை விரட்டிவிட்டு மக்கள் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்த இந்த திட்டத்தை நான் முன்மொழிகிறேன்.
ஊழல் செய்யவோ, சொத்து சேர்க்கவோ இதில் அதிகம் வழியில்லை என்று தெரிய வரும் போது காலப்போக்கில் சேவை எண்ணம் கொண்டோர் மட்டுமே போட்டியிடும் நிலை வரும். மேலும் ஒரு ஆட்சி முடிந்தவுடன் அதில் பங்குபெற்றோர் அனைவரும் எந்த சலுகையுமின்றி மீண்டும் மக்களுடனேயே கலந்துவிடவேண்டியதால், சுயநலமின்றி பணியாற்றுவோர் மட்டுமே இதில் ஆர்வம் கொள்வர்
அடேயப்பா இது மிகப்பெரிய மாற்றமாயிற்றே. இதை அமல்படுத்த அரசியல் சாசனத்தையேயல்லவா மாற்றவேண்டும் என்றெல்லாம் எண்ணி குழம்பவேண்டாம். அரசியல் சாசனத்தில் எங்கேயும் கட்சிகளின் வேட்பாளர் என்று குறிப்பிடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் கட்சி சாராத தனி நபர்களையே அது ஆதரிக்கிறது.
அன்றைக்கு மஹாத்மா காந்தி,ஜெயப்ரகாஷ் நாராயணன் போன்ற அரசியல் ஞானிகளும் இன்றைக்கு அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் கட்சிகளில்லாத ஜனநாயகத்தை அமல்படுத்த போராடி வருகிறார்கள். எனவே இது புதிய சிந்தனையும் அல்ல. ஆயின் செயல் வடிவம் புத்தம் புதிது.
இது நடைமுறைக்கு ஒத்து வருமா, ஊழல் அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா என்பதை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு இது போன்ற ஒரு தேர்தல் முறை ஏற்பட்டால் நாட்டிற்கு நன்மையா தீமையா என்று மட்டும் எண்ணி பார்க்கவேண்டும்.மக்கள் விவாதமாக மாற்றவேண்டும். எந்த அரசியல்வாதியும், எந்த அரசியல் கட்சியும் இதனை ஆதரிக்காது. அரசியல்வாதிகளை தங்களின் கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்க விரும்பும் பணமுதலைகளும் விரும்பாது. எல்லா ஊடகங்களும் இவர்களில் பிடியில், எனவே எந்த ஊடகமும் ஆதரிக்காது.
பணமற்ற பரிமாற்றத்தை 80 களில் யாரேனும் சொல்லியிருந்தால், நகைத்திருப்போம். இன்று அது நடைமுறைக்கு வந்துவிட்டது. அது போலத்தான் இந்த கட்சிகளற்ற ஜனநாயகம் ஒரு நாள் சாத்தியமாகலாம்.
மருத்துவம் படிக்க தகுதி வேண்டும், நுழைவு தேர்வு எழுத வேண்டும். எந்த வேலைக்கும் தகுதி வேண்டியிருக்கும் போது, நம்மை ஆள்பவர்களுக்கு அப்படி ஒரு தகுதியை வைப்பதில் என்ன தவறு?
இது போன்ற சிந்தனைகளை உள்ளடக்கி நமது பிரதிநிதிகளை, ஒரு காசு கூட செலவு செய்ய தேவையில்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கக்கூடிய பழமையையும் புதுமையையும் கலந்த ஒரு மிகஎளிமையான தேர்தல் வழிமுறை இது.
இதை அமல்படுத்துவதற்கு ஒரு இமாலய முயற்சி தேவைப்படலாம். ஏன், இதை இரண்டாம் சுதந்திர போராட்டம் என்று கூட சொல்லலாம். முகம் தெரியாத ஆனால் ஒத்த கொள்கையுடைய நண்பர்களை இணைக்கும் பாலமாக இணையமும் முகநூலும் விளங்குகின்றன. மூன்றாண்டுகளுக்கு முன்னர் சென்னை பெருவெள்ளத்தின் போது சமூக ஊடகங்களை எப்படி அழகாக மக்களின் நலனுக்கு பயன்படுத்துவது என்று இளைஞர்கள் காட்டினார்கள். அதே போல தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் நடந்தது.
இந்த எண்ணத்தை இன்று விதைப்போம்..அடுத்த தலைமுறையிலோ இல்லை அதற்கும் அடுத்த தலைமுறையிலோ இதன் பலன் கிடைத்தால் கூட போதும்.
இதன் சாதக பாதக அம்சங்களை மட்டும் விவாதிப்போம் நண்பர்களே..
நன்றி!!!
No comments:
Post a Comment