முக்கண் முதல்வராகத் திகழும் விநாயகரை துதிக்க ஏற்ற செவ்வரளி மலர்கள், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த மலராகவும் போற்றப்படுகிறது. செவ்வரளி மலர்கள், சிவபிரானுக்கும் பிரியமானவை. சிவத் திருத்தலங்களில் தலமரமாகவும் இருப்பவை செவ்வரளியாகும்.
ஆன்மீகத்தில் தொடர்புடைய மலர்களாக இருந்தாலும், செடியின் நச்சுத்தன்மை காரணமாக, இதை வீடுகளில் வளர்ப்பதில்லை. இலைகள் உள்ளிட்ட செடியின் அனைத்து பாகங்களும் நஞ்சாயினும், மலர்கள் மருத்துவ நன்மைகள் மிக்கவை.
செவ்வரளிப் பூக்கள்
நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, சாலையின் நடுவே, கண்களுக்குக் குளிர்ச்சியான பல வண்ண மலர்ச் செடிகள், பச்சைப் பசேலென்ற காய்கள் மற்றும் இலைகளுடன் பூத்துக் குலுங்குவதை, நாம் கவனித்திருப்போம்.
நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, சாலையின் நடுவே, கண்களுக்குக் குளிர்ச்சியான பல வண்ண மலர்ச் செடிகள், பச்சைப் பசேலென்ற காய்கள் மற்றும் இலைகளுடன் பூத்துக் குலுங்குவதை, நாம் கவனித்திருப்போம்.
அதை இன்னும் உன்னிப்பாக கவனித்திருந்தால், அந்த மலர்ச்செடிகளில் அநேக செடிகள் செவ்வரளி என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டிருப்போம்!.
சாலைகளின் நடுவே, மற்றும் ஓரங்களில் ஏன் செவ்வரளிச் செடியை வளர்க்கிறார்கள்?
சாலைகளில் பலதரப்பட்ட வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புகைநச்சு, கார்பன் மாசுக்கள் போன்றவை, காற்றை அசுத்தமாக்குவதுடன், சுவாசிப்பவர்களுக்கு, சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அரளிச் செடிகளின் இலைகள் மற்றும் மலர்கள், காற்றின் மாசுக்களை, கார்பன் துகள்களை காற்றிலிருந்து நீக்கி, காற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. அதன் மூலம், காற்று மாசுக்கள் நீங்கிய சுத்தமான காற்றை, நாம் சுவாசிக்க முடிகிறது.
காற்றையும் சுவாசத்தையும் நலமாக்கும் வல்லமை நிறைந்தவை. அரளிச் செடிகள். அதனால்தான், நெடுஞ்சாலைகளில், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில், அரளிச் செடிகளை அதிக அளவில் வளர்க்கின்றனர். மேலும், அரளிச்செடிகள் மண் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவை. எனவேதான், சாலைகளின் இருபுறமும், இந்தச் செடிகளை வளர்த்து வருகின்றனர். மேலும் அதிக இரைச்சல் தரும் தொழிற்சாலைகளின் இயந்திர சத்தங்களை கிரகித்துக் கொண்டு, அவற்றின் சத்தத்தை குறைக்கும் ஆற்றல்மிக்கவை அரளிச்செடிகள் என்றால், ஆச்சரியமாகத்தானே இருக்கும்!. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன சத்தத்தையும், குறைக்கும் இயல்புமிக்கவை.
எப்படி வளரும்?
வீடுகளில் குழந்தைகள் தொடாத அளவில், தோட்டங்களில் அரளிச் செடிகளை வளர்த்துவந்தால், காற்று மாசு நீங்கி, காற்று சுத்தமாகும். மேலும், அதிக இரைச்சலை கிரகித்து, ஒலி அளவையும் கட்டுப்படுத்தும்.
எல்லா சீதோஷ்ண நிலைகளிலும், எல்லா காலங்களிலும் வளரும் அரளி, நாடெங்கும் தானே வளர்கிறது. மஞ்சள் மலர்கள் மற்றும் சிவந்த மலர்களையுடைய இருவகைகள் இருந்தாலும், நீரியம் ஒலேண்டர் எனும் செவ்வரளிச்செடியின் மலர்கள், அதிக மருத்துவப் பலன்கள் மிக்கவை.
மருத்துவத்தில் செவ்வரளி மலர்கள்.
எளிய மணம் கமழும் அழகிய செவ்வரளி மலர்கள், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சீன மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில், பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருந்துகள் தயாரிப்பில் பயனாகிறது.
நெஞ்சு வலி
செவ்வரளி செடிகளின் வேர்ப் பட்டையை தூளாக்கி, தக்க மருத்துவ ஆலோசனையில் பேரில் சாப்பிட, நெஞ்சு வலி மாயமாக மறையும். இதய கோளாறு உள்ளவர்களுக்கு செவ்வரளி மலர்கள், அருமருந்தாகிறது.
கைகால் புண்கள், சேற்றுப்புண்
அரளி மலர்களை அரைத்து, கைகால் காயங்கள் மற்றும் கால்களின் சேற்றுப்புண்கள் மீது தடவிவர, அவை விரைவில் ஆறிவிடும்.
தலைவலி
கடுகு, கேரட்,பீட்ரூட் சேர்ந்த சாற்றில், அரளி மலர்களையும் நெல்லிக்காய்களையும் அரைத்த கலவையை இட்டு, நன்கு கலக்கி அதை நெற்றியில் பற்று போல தடவிவர, தலைவலி விலகிவிடும்.
பேன் தொல்லை
தலையில் இருக்கும் பேன் தரும் அரிப்பு நீங்க, இரவில் உறங்கும்போது, தலையில் செவ்வரளிப்பூக்களை வைத்துக்கொண்டு உறங்கிவர, பேன்கள் அழிந்துவிடும்.
மூல நோய்
அரளி வேரை நீர்விட்டு அரைத்து, அதை, மூலநோய்க் கட்டிமீது தடவி வர, மூல நோய் குணமாகும்.
படுக்கைப் புண் Bed Sore
உடலின் இரத்த மண்டலத்தில் ஏற்படும் நச்சுத்தொற்றுக்களால், உடல் உறுப்புகள், கைகால்களின் உணர் நரம்புகள் பாதித்து, அவ்விடங்களில் சருமத்தில் புண்கள் ஏற்பட்டு, நெடுநாளாகியும் ஆறாமல் இருக்கும். வயது முதிர்ந்தோர் நெடுங்காலம் படுக்கையிலே இருக்கும்போது, உடல் நலிந்து, இடுப்பில், முதுகில் பெட் சோர் எனும் ஆறாத அழுகும் நிலையிலுள்ள படுக்கைப் புண்கள் ஏற்பட்டு, கடும் வேதனையைத்தரும். எந்த மருந்திலும் அவ்வளவு எளிதில் குணமாகாது, இத்தகைய புண்கள்.
இந்தப் புண்களை ஆற்றும் வல்லமைமிக்கது, அரளிச்செடி. அரளியின் வேர்ப்பட்டைகளை சேகரித்து, அவற்றை நீரிலிட்டு காய்ச்சி, அரளிப் பட்டைகளோடு சேர்த்து அரைத்து விழுதாக்கி, நல்லெண்ணையில் இட்டு தைலம் போலக் காய்ச்சிக்கொண்டு, அந்தத் தைலத்தை, நெடுநாள் புண்கள், அழுகும் நிலையில் இருக்கும் படுக்கைப் புண்கள், சர்க்கரை பாதிப்பு புண்கள் மற்றும் ஆறாத புண்களின் மீது தடவிவர, நாளடைவில் புண்கள், அதிசயத்தக்க அளவில் ஆறிவிடும்.
செவ்வரளி மலர்களை கந்தகத்தில் அரைத்து, அந்தச் சாற்றையும், படுக்கைப்புண்கள் உள்ளிட்ட அழுகிய புண்களில் தடவிவர, புண்களிலுள்ள நச்சுக்கள் நீங்கி, புண்கள் விரைவில் குணமாகி, உடல் நலமாகும்.
முக அழகு
செவ்வரளிப்பூக்களை அரைத்து, அதை முகத்தில் தடவி வர, முகப்பருக்கள் நீங்கி, முகம் மிருதுவாகும். முகத்தின் கருமையை நீக்கி, முகத்தை பொலிவாக்கும்.
மூட்டு வலி
தற்காலத்தில் எல்லோரையும் பாதிக்கும் பிரச்னையாக இருப்பது, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள். அதிக நேரம் இருக்கையில் அமர்ந்தே இருப்பது, அதிக நேரம் டூ விலரில் சுற்றிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால், மேற்சொன்ன வலிகள் ஏற்படுகின்றன.
செவ்வரளிப்பூக்களை நீரிட்டு அரைத்து, அந்த விழுதை, வலியுள்ள கைகால் மூட்டுக்களில் தடவிவர, வலிகள் உடனே, மாயமாக மறைந்துவிடும்.
விஷக்கடி
தக்க மருத்துவர்களின் மேற்பார்வையில், அரளிவேர் அல்லது அரளிப்பூக்களை அளித்து, பாதிக்கப் பட்டவர்களை வாந்தியெடுக்க வைத்து, பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளை குணமாக்கலாம்.
செவ்வரளியின் பக்கவிளைவுகள்.
நாம் அரளியின் நற்தன்மைகளை இதுவரை பார்த்தோம். இனி அதன் ஒரிஜினல் குணநலன்களை தெரிந்து கொள்வோம்.
நச்சுத்தன்மை கொண்ட அரளிச்சாறு, அரளி கொதிநீர் உடலுக்கு விஷமாகி, உயிரை மாய்க்கும் தன்மையுடையது.
அரளிப்பூக்களின் தேன், பல்வேறு அபாயகரமான பக்கவிளைவுகளை தரக்கூடியது.
அரளி இலைகள் உடலில் பட்டாலே, சிலருக்கு, உடல் தோல் தடித்து, வீங்கிவிடும்.
மகவை சுமக்கும் கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பாலூட்டும் அன்னையர், அரளிச்செடியின் அருகில் செல்லக்கூட, பெரியோர் அனுமதிக்கமாட்டார்கள்.
அரளியின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க, நாம் செய்யவேண்டியவை.
ஏராள நன்மைகள் அரளியில் இருந்தாலும், அதன் நச்சு பாதிப்பிலிருந்து எப்படி விலகியிருப்பது, என்பதைப் பார்க்கலாம்.
பச்சையாக அரளியை உபயோகிக்கக் கூடாது. அரளிப்பூக்களின் சாறு, அதிக நச்சுத்தன்மை மிக்கது. தக்க மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரளியை, மருந்தாக எடுத்துக்கொள்வது, கடுமையான பக்க விளைவுகளில் இருந்து, காப்பாற்றும். மூலிகை மருத்துவரின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.
செடி முழுவதும் நச்சுத்தன்மைமிக்க அரளியில், நம் உடல் நலத்தைக் காக்கும் தன்மைகள் ஓரளவு நிறைந்திருந்தாலும், நாமாகவே அதை மருந்தாக்கி, தினமும் எடுத்துக் கொள்வதோ, அல்லது அடிக்கடி உபயோகிப்பதோ கூடாது.
அனுபவமிக்க தேர்ந்த மூலிகை மருத்துவர் அல்லது சித்த மருத்துவரிடம் பரிந்துரை பெற்று, அவர்களின் மேற்பார்வையில், அரளியின் பயன்களை அடைவதே, சாலச்சிறந்தாகும்.
வாழ்கவளமுடன்.
தமிழ் மண்ணே வணக்கம்.
No comments:
Post a Comment