Thursday, August 2, 2018

இன்று ஆடிப்பெருக்கு திருநாள்...

"ஆடியிலே பெருக்கெடுத்து 
ஆடிவரும் காவேரி...
ஆடிப்பெருக்கு... இன்று ஆடிப்பெருக்கு திருநாள்...
***************************************
காவிரியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிற வேளையில் - ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று காவிரி பாயக் கூடிய அனைத்து ஊர்களிலும் ‘ஆடிப்பெருக்கு’ விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
குடகு மலையில் உற்பத்தி ஆகிற காவிரி தமிழகத்தில் ஒகேனக்கல் துவங்கி பூம்புகார் வரை பாய்கிறது. மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, குளித்தலை, முக்கொம்பு, திருச்சி, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை என்று காவிரி கடலில் கலக்கிற பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு களை கட்டும்.
நமது கலாசாரத்தில் நதிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் காவிரி வளம் பெருக்கும் பகுதிகளில் சோழ தேசத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
கரிகாற்சோழ மன்னன் காலத்தில் இந்த ‘ஆடிப்பெருக்கு’ கொண்டாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் காவிரியின் இரு கரைகளையும் தொட்டு நீரானது வெள்ளம் போல் பாய்ந்து கொண்டிருக்கும்.
காவிரிக்கு ‘தட்சிண கங்கை’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்’ என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினார் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.
ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுனரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.
🌟 ஆடிப்பெருக்கு தினமான இன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?
🌟 நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.
🌟 பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜை :
🌟 ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகளை செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.
🌟 வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்கலப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுவார்கள்.
🌟 வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
🌟 திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
🌟 பார்வதிதேவி தன் திருமணத்திற்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் உள்ளது.
🌟 ஆடிப்பெருக்கான இன்று ஆற்றிற்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் ஆறேழு ஆண்டு களுக்குப் பின் இந்த ஆண்டு தான் காவிரில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இந்த தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.
...................................................................
❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...