யாரையும் குறிப்பா குறிப்பிட்டு எழுதலை. காயப்படுத்தறதுக்காவும் இல்ல. கேக்கணும்னு வெகுநாளா மனசில் இருந்த கேள்விகள் தான்...!
#பணிநிமித்தம் இல்ல வேற ஏதோ ஒரு காரணமாக #வெளிநாட்டுக்கு போயிடறிங்க. அங்கேயே செட்டில் ஆகி #பாஸ்போர்ட்டை கூட சரண்டர் செய்து #குடியுரிமையும் கிடைச்சிடுது. அங்கயே தேர்தலில் வாக்களிக்கறிங்க. உங்க பிள்ளைகள் வருங்காலம் எல்லாமே அங்கேதான்னு முடிவாகிடுது. அதை தெளிவான முடிவாகவே தான் எடுக்கறிங்க.
ஆனாலும் வேடிக்கை பார்க்கற மாதிரி இந்திய அரசியல், இந்திய சமூக சூழல் எல்லாவற்றிலும் உங்களோட கருத்துக்கள், குரல்களை தர்றிங்க. ரொம்பவே சந்தோசம். ஏன்னா யாரும் அவங்க அவங்க வேரை அறுத்தெறிய முடியாது. எங்க எப்படி வாழ்ந்தாலும் நம்ம பால்யம் மட்டுமே நமக்கான உணர்வா இருக்கும். ரொம்பவே புரியுது.
ஆனா அங்க உள்ள சூழல், அரசியல் அமைப்பு, வசதிகள், வாய்ப்புகள், சமூக கட்டமைப்பெல்லாத்தையும் கம்பேர் செய்து கொஞ்சங்கூட ஈவு இரக்கமில்லாத இந்தியாவை எப்படி கண்ட படி பேச முடியுது. அதொண்ணுக்கு மட்டும்தான் விளக்கம் வேணும்.
இங்க பொழைக்க வழியில்லாத போயிட்டிங்க, பணத்தாசை புடிச்சு போனீங்க இப்படியான தட்டையான வாதம் எதுவுமே என்னிடம் இல்லை. அவரவருக்கான வாய்ப்பை அவரவர் பயன்படுத்திக்கறோம். இதில் எனக்கு மறுப்பே இல்லை. அவரவருக்கான சூழல் தான் எங்க வேலை பாக்கணும் வாழணும்ங்கறத முடிவு பண்ணுது. இடம் பெயர்தல் மனித அடிப்படை.
இந்த அங்க போனதும் அமெரிக்க அம்புஜமாகவே சுவிர்சலாந்து சுந்தரமாகவோ மாறி கண்டபடி பேசுற புத்தி மட்டும் ஏன் வருதுனு சொல்லுங்களேன்.
ஏன்னா ஒரே ஒரு விசயம் தான். மனித உரிமை தர்றோம், சிறப்பான தனிமனித சுதந்திரம் தர்றோம், மிகச்சிறந்த வாழ்சூழல் உடையதுனு சொல்லிக்கற எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்க பிராந்தியங்களுக்கும் படுகேவலமான கருப்பான வரலாறு இருக்குது. அங்க மேல சொன்ன விசயங்கள காலால நசுக்கி தரையோட தரையா புதைச்ச கதைகள் இருக்குது.
எந்த நாடு பணத்தாலயும் வசதிகளாளயும் முதலில் முன்னேறுச்சோ அது காலை ஊனிக்கிட்ட பிறகுதான் மனிதநேயம்னு வாயை திறக்கும். அதுவரை கள்ளாட்டமும் ஊளைத்தனமும் தான் எல்லா நாடுகளுக்குமே அடித்தளம்.
மேற்கத்திய நாடுகள் சுரண்டித்தின்ன கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள்லாம் இனிமேத்தான் மேல வந்து மனிதநேயத்துக்கெல்லாம் குரல் தரணும்.
அப்புறம் கடைசி பாயிண்டு இனி நீங்களே நினைச்சாலும் உங்க பிள்ளைகள் இங்கே வர விரும்ப மாட்டாங்க அதில் தவறும் இல்ல அதுவே அவங்க வேர்விட்ட இடம். சோ உங்களோட உங்க வம்சத்துக்கு இந்திய பந்தம் முடியுது.
அது நல்லா தெரிஞ்சும் ஏன் இங்குள்ளவங்கள மட்டம் தட்டிப்பேசுறது எகத்தாளமா பேசுறது முட்டாள்கள்ங்கறதுனு தான் புரியலை. ஏன்னா உங்களுக்கு இங்க நியாவகங்களைத்தவிர வேறேதுமே சொந்தமில்ல பாருங்க..
முடிஞ்சா பொறந்து வளர்ந்து தண்ணி குடிச்ச நாடுனு விரும்புங்க. இல்லைனா கம்முனாவது போங்க. நீங்க வெளிநாடுகள்னு காட்ற உத்தம பிம்பமும் மெச்சூர்ட்னு காட்டிக்கற பிம்பமும் படு காமெடியா இருக்குது.
எல்லா இடத்திலும் மனிதர்களே. அளவுகோல் கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும். அவளோதான்..!
No comments:
Post a Comment