இன்று #ஆடி வெள்ளியுடன் சேர்ந்து வரும் பௌர்ணமி தினம்! அம்பாளை நம் வீட்டிற்குள் அழைக்க சுலபமான முறையில் பூஜை செய்வது எப்படி?
நாளை வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்துடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை என்பது இன்னொரு சிறப்பு. ஆடி முதல் வெள்ளி உடன் பௌர்ணமியும் சேர்ந்து வருவது மேலும் மேலும் சிறப்பு. முதல் வாரமே ஆடி மாத வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினத்தன்று வருவதால் இந்த வெள்ளிக்கிழமையை வீட்டில் இருக்கும் பெண்கள் தவற விடக்கூடாது. நாளை அம்மனின் மனதைக் குளிர வைக்கும் படி வீட்டில் எளிமையான முறையில் பூஜை செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எந்த விசேஷ தினமாக இருந்தாலும் பெண்கள் அதிகாலை வேளையிலேயே எழுந்து தலைக்கு குளித்து விட வேண்டும். உங்களுக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி குளிக்கின்ற தண்ணீரில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். இரவு உடையை அணிந்து கொள்ளாமல் உங்களுக்கு எது சவுகரியமான உடையோ அதை அழகாக அணிந்துகொண்டு வெள்ளிக்கிழமை வேலையைத் தொடர வேண்டும்.
வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட்டு, நிலை வாசல் படியில் மஞ்சள் குங்குமத்தை வைத்து, நிலை வாசல் படிக்கு மேல் பக்கம் வேப்பிலை தோரணம் கட்டி விடவேண்டும். எலுமிச்சம் பழங்களை வெட்டி குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் வைத்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்து, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக உங்களுடைய வீட்டில் அம்பாளின் சிலை இருந்தால், அந்த அம்பாளின் சிலைக்கு நாளை பால் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு அழகாக அலங்காரம் செய்து, அம்மனின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விடவேண்டும். அம்மனின் திருவுருவ படம் இருந்தால் அந்த திருவுருவப் படத்தை நன்றாக துடைத்து, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் வேப்பிலை மாலை அணிவியுங்கள்.
ஒரு தாம்பூலத் தட்டை பெரியதாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு, ஒரு எலுமிச்சம் பழம், ஒரு கொத்து வேப்பிலை, வெற்றிலை பாக்கு பூ, முடிந்தால் ஒரு ரவிக்கைத்துணி, இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இது ஆடி வெள்ளி என்பதால் அம்பாளுக்காக படைக்க வேண்டிய பொருட்கள். அடுத்தபடியாக பௌர்ணமி, வெள்ளிக்கிழமை. மகாலட்சுமிக்கு விருப்பமான மாதுளம்பழம், நெல்லிக் கணி, இந்த இரண்டு பொருட்களையும் அதே தாம்புல தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதோடு சேர்த்து அம்பாளுக்கு கட்டாயமாக சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக வைக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி வைத்து இருந்தாலும், ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நாளையதினம் நெய் ஊற்றி அதில் 2 டைமண்ட் கற்கண்டுகளைப் போட்டு தீபமேற்றி வைத்துவிடுங்கள். தேங்காயை உடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அலங்காரங்களை எல்லாம் பூஜை அறையில் செய்து முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பூஜை அறையில், அம்பாளின் முன்பு அமர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை அம்பாளிடம் வைத்து, அம்பாளை மனமுருகி வீட்டிற்கு அழைத்து, முடிந்தால் அம்பாளின் பெயரைச்சொல்லி மந்திரங்களை உச்சரித்து, ஐந்து நிமிடங்கள் அமைதியாக வழிபாடு செய்துவிட்டு அதன் பின்பு இறுதியாக தீப தூப கற்பூர ஆராதனை காண்பித்து குடும்பத்துடன் உங்களுடைய பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய மறக்க வேண்டாம்.
இந்தப் பூஜையை உங்களால் காலைவேளையில் செய்ய முடிந்தாலும் செய்யலாம். முடியாதவர்கள் மாலை நேரத்திலும் செய்யலாம். பூஜை முடிந்த பின்பு பூஜை அறையில் அம்பாளுக்கு படைத்த மஞ்சள் குங்குமம் வளையல் மஞ்சள் கயிறு வெற்றிலை பாக்கு இந்த பொருட்களை எல்லாம் வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் திருமணமாகாத கன்னிப் பெண்களும் அணிந்து கொள்ளலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கும் அந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம். தவறு கிடையாது.
மேலே சொன்ன பூஜை புனஸ்காரங்கள் அத்தனையையும் நாம் மனம் விரும்பி அம்பாளுக்காக செய்வது. ஆனால் அந்த அம்பாள் நம்மிடம் விரும்பி எதிர்பார்ப்பது, உண்மையான பக்தி, தூய்மையான மனது அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்யாத சுயநலமில்லாத மனம். ஆகவே உங்களுடைய கோரிக்கையோடு சேர்த்து, இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை அம்பாளிடம் வைத்து மனமுருகி வேண்டி வழிபாடு செய்தால் உங்கள் வீட்டிற்கு அம்பாள் விரும்பி வந்து அருளாசியை மனமார வழங்கி விடுவாள், என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
No comments:
Post a Comment