வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.
நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள். கல்லடி - கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழும். அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று காய்கள்தான் சேதமடைந்து இருக்கும்.
பார்வைகளிலே சுப பார்வை, அசுப பார்வை என இருவகை உண்டு. பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கும். இவர்கள் தொடங்கி வைக்கும் காரியங்கள் விருத்தியாகும். இவர்களை கைராசிக்காரர்கள் என்று சொல்வார்கள். இந்த பார்வை, ராசி மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் கிரகங்களுக்கும் உள்ளது. ஜாதகத்தில் குரு பார்வை மிகவும் சிறப்பாகும். குரு பார்க்க கோடி நன்மை குவியும் என்பது சாஸ்திர வாக்கு. சனி பார்வை சர்வ நாசம் என்பார்கள். அதேபோல் உச்சபலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை கொடுக்கும்.
நீச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். சூரியன், சந்திரன் சமசப்தமமாக பார்க்கும்போதுதான் பவுர்ணமி உண்டாகிறது. இதன்மூலம் பார்க்கும் பார்வைக்கு உள்ள பலம் என்ன என்பதை நாம் உணர முடிகிறது. மகான்களுக்கு பல சக்திகள் உண்டு. அதில் பிரதானமானது அவர்களின் கருணை மிகுந்த அருள் பொங்கும் பார்வையாகும். அவர்கள் பார்வை மூலம் நம்மீது உள்ள திருஷ்டி, தோஷங்கள், தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். இதை நயன தீட்சை என்பார்கள்.
நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம். நல்ல யோகமான திசைகள் நடக்கும்போது எல்லா விஷயங்களும் சாதகமாகவும், மளமளவென்றும் கூடிவரும். யோகமான திசையில் சில கெட்ட ஆதிபத்ய புக்திகள் வரும் நேரத்தில் திடீர் சறுக்கல்கள், எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும். திடீர் விபத்துகள், மருத்துவ செலவுகள், கைப்பொருள் இழப்பு போன்றவை எல்லாம் 6, 8, 12-ம் அதிபதியின் திசா, புக்தி, அந்தரங்களில் ஏற்படலாம். லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், மனச்சஞ்சலம், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும். பட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அதுபோல கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புக்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கிரக சுபபார்வை நமக்கு அரணாக இருந்து காக்கும் என்பது அனுபவ உண்மையாகும்.
விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
#திதிகள்:
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்த்து பரிகாரம் பெறலாம்.
No comments:
Post a Comment