இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள்.
அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே!
இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் கயிற்றுக்குக் கட்டுண்டு கிடந்தான்.
கயிற்றை எடுத்து அவனது இடுப்பில் சுற்றிக் கட்டலாம் என்றால், லேசாகப் பெருத்தான் கண்ணபிரான். கயிற்று முனைகளைக் கட்டுவதற்கு இரண்டு அங்குல இடைவெளி இருந்தது. இன்னொரு கயிற்றைச் சேர்த்து, முடிச்சுப் போட்டுக் கட்ட முனைந்தார்கள். இன்னும் சற்றுப் பெருத்தான். இப்போதும் இரண்டு அங்குல இடைவெளி இருந்தது.
இன்னொரு கயிறு, இன்னொரு இரண்டு அங்குல பருமன்... என்றே இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்க... அவன் அம்மா சோர்ந்து போனாள். ஆனால், கண்ணன் களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான் பகவான் யோசித்தான். ''அடேடே..! இப்போது நாம் யாரிடம் நம் வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்? இதோ... தோல்வியைக் கண்டு அம்மா துவண்டுவிட்டாளே! பாவம் அவள்’ என்று எண்ணியவன், 'இந்த என்னுடைய திமிர்த்தனத்தை உன்னிடம் காட்டியது தவறுதான் தாயே! இந்தாம்மா... என்னைக் கயிற்றில் கட்டிக்கொள்’என்பதுபோல், பருமனைக் குறைத்துக் கொண்டு நின்றான்.
உடனே, குறும்புக் கண்ணனைக் கயிற்றில் கட்டிப்போட்டாள் தாய். நம்முடைய தாய் - தந்தையிடம் தோற்றுப் போவதில் தப்பே இல்லை என்பதை எவ்வளவு சூசகமாக, அழகாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறான் ஸ்ரீகண்ணபிரான்.
பகவான், கயிற்றுக்கெல்லாம் கட்டுப்படாதவர். பிறகு..?
அவர் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுபவர். காதலுக்கும் பிரேமைக்கும் கட்டுண்டு கிடப்பவர்.
இதனை, 'கண்ணிநுண் சிறுத்தாம்புடன் கட்டுண்டப் பண்ணிய பெரு மாயன்...’எனும் அழகிய பாடல் அற்புதமாக விளக்குகிறது.
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே அந்தக் கயிற்றுத் தழும்பைக் காணலாம். அது தழும்பு அல்ல; பட்டம்.
நெற்றியில் கிரீடம் சூட்டிக்கொண்டால், திருமண் இட்டுக் கொண்டால் அந்த இடத்தில் தழும்பேறிக் கிடக்கும், அல்லவா... அப்படித்தான் இது!
அந்தப் பட்டம் எதை உணர்த்துகிறது தெரியுமா? 'அடியவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு நான் கட்டுண்டு கிடப்பேன்’ என்பதைத்தான் அந்தத் தழும்பின் மூலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார், பகவான் ஸ்ரீகிருஷ்ணர்!
ஆகவே, தாய்- தந்தையிடம் தர்க்கம் வேண்டாம்; சண்டையும் பூசலும் அவசியமில்லை. வெற்றி - தோல்வி என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்கள் வெற்றி பெற்றால், அதற்காக மகிழ்வது நீங்கள்தான். பூரிப்பது நீங்கள்தான்!
சரி... ஸ்ரீகிருஷ்ணர் பெற்றோரிடம் தோற்றதைப் பார்த்தோம். ஸ்ரீராமர் தோற்றது தெரியுமா? அவர் யாரிடம் தோற்றுப் போனார் என்பதை அறிவீர்களா?
கோதாவரி நதி. ஸ்ரீராமபிரானுக்கும் சீதாப்பிராட்டிக்கும் நீச்சல் போட்டி. நதிக்கு நடுவில் உள்ள பாறையை யார் முதலில் தொட்டுவிட்டுக் கரைக்கு வருகிறார் என்பது தான் போட்டி.
அந்தப் பாறையின் மேலே நடுவராக அமர்ந்திருக்கிறார் ஸ்ரீலட்சுமணர்.
ராவணன் எனும் அரக்கனையே அழித்தொழிக்க அவதரித்த ஸ்ரீராமருக்கு இதெல்லாம் ஒரு போட்டியா என்ன?
கரையில் இருந்து சீதை பதினைந்து அடி தூரத்தைக் கடப்பதற்குள், அவர் பாறையைத் தொட்டுவிட்டுத் திரும்பி, பாதி தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்.
இறுகிய முகத்துடன், மூச்சிழுத்துக்கொண்டு, கைகளை வீசி, கால்களை உதைத்து அரக்கப்பரக்க நீச்சலடித்துக்கொண்டு, பாறையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் சீதை.
பரிதவிப்பான சீதையின் திருமுகத்தைப் பார்த்ததும், ஸ்ரீராமபிரானுக்குள் ஒரு யோசனை...
'இங்கே அரக்கனுடனா எனக்குப் போட்டி?
யாரை வெல்ல இப்படி மல்லுக்கட்டி க்கொண்டு, வெற்றி பெறும் முனைப்புடன் வெறித்தனமாக நீச்சலடிக்கிறேன்?
இதோ... இவள் என் பிரிய சகி அல்லவா? என் அன்புக்கு உரிய இல்லாள் அல்லவா? அவளைத் தோற்கடித்துவிட்டு, அந்த வெற்றியை எங்கே, எவரிடம் பகிர்ந்துகொண்டு கொண்டாடுவதாம்?
தீராத பகையாளியைத் தோற்கடிக்கிற புத்தியுடன் அல்லவா இந்தப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்?’ என்று நினைத்த ஸ்ரீராமர், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினார்; அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டார்.
அதையடுத்து, சீதாதேவி வேகமாக நீந்திக் கரையை அடைந்தாள்; வெற்றியும் பெற்றாள். அதுவரை நடுவராக இருந்த ஸ்ரீலட்சுமணர், தடாலென்று கட்சி மாறி, அண்ணியாருடன் இணைந்து, 'என்ன அண்ணா! அடடா! இப்படி அநியாயமா தோத்துப் போயிட்டீங்களே’என்று ஸ்ரீராமரைக் கேலி செய்தார். சீதையும் ஸ்ரீராமரை வெகுவாகக் கேலி செய்தாள்.
அசோகவனத்தில் சிறை இருந்தபோது, ஸ்ரீராமரை நினைத்தபடியே கிடந்தபோது, அங்கே ஸ்ரீஅனுமன் வர... அவனிடம் இந்தச் சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, 'ஹூம்... அவரும் நானும் எப்படியெல்லாம் சந்தோஷமும் குதூகலமுமாக வாழ்ந்தோம், தெரியுமா?’என்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம்!
இதைத்தான், 'பத்தினிக்குத் தோற்பான் பரம ரசிகன்’என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர்.
'மனைவியைத் தோற்கடித்துவிட்டு வெற்றி பெற்ற பூரிப்பை எவரிடம் சொல்லிப் பெருமைப்பட முடியும்?
அவளிடம் தோற்றுப் போனால், அந்தத் தோல்வியைக்கூட அவளிடம் பெருமைபடப் பேசி மகிழலாம்!
இன்னும் சொல்லப் போனால், மனைவியிடம் தோற்றுப் போனால், வாழ்வில் ஜெயிக்கலாம்!
ஆக, பெற்றோர்களுக்குக் கட்டுப்படுவதை ஸ்ரீகண்ணனும், மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை ஸ்ரீராமபிரானும் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள். உணர்ந்து, தெளிந்து, செயல்படுபவர்கள் பாக்கியவான்கள்!
இந்த அருங்குணங்களால் திளைத்த ஸ்ரீஆண்டாள், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’என்று உருகிப் பாடுகிறாள்.
சீதாபிராட்டியிடம் 'மாயாசிரஸ்’ கொண்டு வந்து காட்டுகிறான் ராவணன்.
'இதோ, உன் கணவனின் தலை. அவன் இறந்துவிட்டான்’ என்று மாயத் தோற்றத்தை, கொய்த தலையைக் கையில் வைத்துக் காட்டுகிறான்.
'ஸ்ரீராமர் உயிருடன் இருக்கிறார்’எனும் தகவல் ஏற்கெனவே தெரிந்துவிட்டது சீதாவுக்கு!
எனவே, அவள் கலகலவெனச் சிரித்துக்கொண்டே, 'அவர் சாகவில்லை’ என்றாள்.
'எப்படிச் சொல்கிறாய்?’என்று ராவணன் கேட்டான்.
அதற்கு அவள், ''எப்போது நான் உயிருடன் இருக்கிறேனோ, அப்போது அவரும் உயிருடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். இப்போது, அவர் உயிருடன் இருக்கிறார். ஒருவேளை நீ சொல்வது போல், அவர் உயிருடன் இல்லையெனில், இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்!'' என்றாள்.
'நீயின்றி நானில்லை; 'நானின்றி அவனில்லை!’ என்பார்கள். பரஸ்பரம் இந்த முக்கியத்துவத்தையும் பேரன்பையும் உணர்ந்துவிட்டால், அந்தத் தம்பதியை எவராலும் எப்போதும் எதுவும் செய்துவிட முடியாது!
நம்மிடம் உள்ள குணங்களில் ஏதேனும் ஒன்று நம்மைப் போலவே வேறொருவருக்கும் இருந்தால், சட்டென்று அவர்கள் மீது சிநேகிதம், பிரியம், வாஞ்சை... நமக்கு வரும் அல்லவா?!
பகவானும் அப்படித்தான்...
அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!
அவனுடைய குணங்கள் நம்முடைய குணங்களாக இருந்துவிட்டால், இறைவன் நமக்கு சிநேகிதனாக, பிரியம் உள்ளவனாக, வாஞ்சை உள்ளவனாக இருப்பான்!
ஹரே கிருஷ்ணா
விஸ்வநாதன் பவுன்சாமி.
No comments:
Post a Comment