இன்று நாட்டில் நடைபெறும் அனைத்து தீவிரவாதங்களுக்கும் பயங்கரவாதங்களுக்கும் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, ஓட்டுக்குத் துட்டு, லஞ்சம், பேராசை அனைத்துக்கும் காரணம் ஆரம்பக் கல்வி மனதுக்கு பிடித்த மாதிரி இல்லாததுதான்.
கிராமப் பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 60மாணவர்கள் வரை இருந்தால் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் தான் பணியில் இருப்பர். ஒருவர் விடுப்பு எடுத்தாலோ, அலுவலக வேலையாகச் சென்று விட்டாலோ, பயிற்சிக்குச் சென்றாலோ, சென்சஸ் கணக்கு எடுக்கச் சென்றாலோ, மருத்துவ விடுப்பில் சென்றாலோ 1 முதல் 5 வரை படிக்கும் அந்த 60குழந்தைகளையும் ஒரே ஒரு ஆசிரியை தான் கவனிக்க வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் என நாலும் நாலும் எட்டு பாடப்புத்தகங்கள். 3,4,5,வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5+5+5=15 பாடப் புத்தகங்கள். 1to5மொத்த சப்ஜெக்ட்கள் 23.
காலை 9.30மணி முதல் மாலை 4.10வரை காலை இறை வழிபாடு, காலை இடைவேளை, மதிய உணவு இடைவேளை, மாலை இடைவேளை தவிர்த்து மீதமுள்ள நேரத்தில் ஒரே ஒரு ஆசிரியை 60குழந்தைகளையும் அடி தடி மல்லுக்கட்டு, சண்டை சச்சரவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவு தான் பாடம் நடத்த முடியும்.
இத்தகைய சூழ்நிலையில் கல்வி அலுவலர் வருகிறார். தமிழ், ஆங்கிலம் வாசிக்கச் சொல்கிறார். சிலர் வாசிக்கின்றனர். சிலர் வாசிக்கத் திணறுகின்றனர்.
ஆசிரியையிடம் "வாங்குற சம்பளத்திற்கு வேலை பாருங்க, அடுத்த முறை வரும் போது, இம்ப்புரூவ்மெண்ட் இல்லைன்னா உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை செய்து கிளம்புகிறார்.
அந்த ஆசிரியைக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. "உழைக்க மாட்டேன்னா சொல்றேன், ஆடுமாடு மேய்க்கிற வேலையா? இல்லை அடுப்படி வேலையா? நாலு ஆள் வேலையை ஒத்தாளா செஞ்சி முடிக்க..! இது அறிவைப் புகட்டும் வேலை.
5வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு மாணவரிடமும் எழுத்தறிவு, எண் அறிவு புகட்ட தனிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இதை எல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை. குறை சொல்ல மட்டும் எப்படி மனம் வருகிறதோ என்று பலவாறு சிந்திக்கிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகிறார்.
அதிகாரி திட்டியதே மனதிற்குள் ஓடுகிறது. தன் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என முடிவு செய்கிறார். ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர், மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பாசிரியர் என இருக்கும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் அட்மிசனுக்கு அலைமோது கிறது. தனியார் பள்ளிப் படிப்பு தரமானது என்று பெற்றோர் நினைக்க இது முக்கிய காரணம்.
ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்தால் தொடக்கப்பள்ளிகளின் கல்வித் தரம் நிச்சயம் உயரும். ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்த முடியும். தனிப்பட்ட முறையில் கவனித்து கற்றுக் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
கற்றுக் கொள்வதால் படிப்பில் ஆர்வம் ஏற்படும். ஆர்வம் நிறையப் படிக்கத் தூண்டும். நிறையப் படித்தால் குற்றங்கள் குறையும்.அதற்கு இரண்டு ஆசிரியர் பள்ளிகளை 5ஆசிரியர் பள்ளிகளாக மாற்ற வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமித்தால் பயன் இல்லை. வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருந்தால் ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகளின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment