சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டியுடன், ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ½ கிராம் அளவிற்கு தினமும் இரண்டு வேளைகள், சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
மூலநோய் தீர, சோற்றுக் கற்றாழை இலைத் தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப்பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சம்பழ அளவில் சாப்பிட்டு வர வேண்டும். தினமும் காலையில் மட்டும், ஒரு வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.
சோற்றுக் கற்றாழை இலையை நீளமாகக் கீறி அதன் சதை வெளியே தெரியுமாறு செய்ய வேண்டும். கண் இமைகளை மூடி, அவற்றின் மேல், இலையின் கீறிய சதைப்பற்றான பகுதியை வைத்துக் கட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் இவ்வாறு செய்துவர கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு குணமாகும். இந்தக் காலத்தில் காரமான உணவுகளைக் குறைத்து வெயிலில் அலைவதையும் தவிர்க்க வேண்டும்.
சோற்றுக் கற்றாழை இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காயவைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு சிட்டிகை அளவு பொடியை, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்ணீரில் கலந்து பருக மலச்சிக்கல் தீரும். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.
சோற்றுக் கற்றாழை இலையைக் கீறி சதைப் பகுதியை வெளியே தெரியுமாறு செய்து, அதைக் காயத்தின் மீது வைத்து கட்டுப்போட வேண்டும். காயம் ஆறும் வரை தினமும் இருமுறைகள், இவ்வாறு தொடர்ந்து செய்ய வெட்டுக்காயங்கள் குணமாகும்.
சோற்றுக் கற்றாழை சோற்றை எடுத்துப் புதிதாகத் தினமும் மேலே வெண்படையின் மீது பூசிவர வெண்படை குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளைப் போல உள்ள சதைப் பகுதியை, சின்னச் சிறு துண்டுகளாக வெட்டி தூய தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும். எனவே நன்றாக கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்புத் தன்மையும், குமட்டுதலும் குறைந்துவிடும்.
No comments:
Post a Comment