ஆந்திர மாநிலம் வரையில், உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் திட்டத்துக்காக, சேலம் மாவட்டத்தில், 1.50 லட்சம் பனை, தென்னை மரங்களை அழிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், மகேந்திரபுரிக்கும், 756 கிலோ வாட் உயர் அழுத்த மின் கேபிள் பதிக்கும் பணி நடக்கிறது.
இந்த உயர் அழுத்த மின் பாதைக்கான பணிகள், தற்போது, சேலம் மாவட்டம், ஆத்தூர், மணிவிழுந்தான் பகுதி வரை நிறைவு பெற்றுள்ளது.அதைதொடர்ந்து, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், குறிச்சி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வழியாக, ஆந்திர மாநிலத்துக்கு, இந்த மின்பாதை செல்ல உள்ளது. மின்பாதைக்காக, விவசாய நிலங்களில் உள்ள, பனை மரம், தென்னை மரம் ஆகியவற்றை வெட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு வெட்டும்பட்சத்தில், ஒரு லட்சம் பனை மரங்களும், 50 ஆயிரம், தென்னை மரங்களும் அழிக்கப்படும்.
இந்த தகவலால், சேலம் மாவட்ட விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். மரம் வெட்டுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது.சேலம் ஆர்.டி.ஓ., விஜய்பாபு தலைமை வகித்தார். ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கேபிள் பாதை அமைக்கும் பவர் கிரீட் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:மரங்களை வெட்டக்கூடாது.
அவற்றை வெட்டாத வகையில், மின் பாதை வழித்தடத்தை மாற்றியமைக்க வேண்டும். வெட்டுவதற்கான நெருக்கடி ஏற்படும்பட்சத்தில், சம்மந்தப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதிலும், பனைக்கு, 10 ஆயிரம் ரூபாயும், தென்னைக்கு, 25 ஆயிரம் ரூபாயும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மேற்கண்ட கோரிக்கைகளை , அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். முத்தரப்புக் கூட்டம், எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
No comments:
Post a Comment