ஒருவரிடம் பணம் கொடுத்து அந்தப் பணம் வரவில்லையென்றால், 'அந்தப் பணம் அவ்வளவுதான்... நாமம்தான்... திருப்பதி உண்டியல்ல போட்டமாதிரிதான்' என்று போகிறபோக்கில் சர்வசாதாரணமாகப் பேசிவிடுகிறோம்.
ஆனால், உண்மையில் திருப்பதி உண்டியலில் போடும் பணம் என்னவெல்லாம் நல்ல காரியங்களைச் செய்கிறது பாருங்கள்.
எப்போதும் மக்கள்வெள்ளத்தால் இந்த 'ஆனந்த நிலையம்' நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கின்றது. இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில் இதுதான்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான வாடிகன் தேவாலயத்துக்கு அடுத்தபடியாக பணம் படைத்த கோயில் இதுதான்.
'சாமியிலேயே பணக்கார சாமி இதுதான்' என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
திருப்பதியில், ஶ்ரீவாரி உண்டியலும், லட்டு பிரசாதமும் பக்தர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தரும் உன்னதங்கள்.
எந்த ஒரு ஆலயமுமே அத்தனை எளிதாக பிரபலமாகி விடுவதில்லை.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மௌனமான தீர்வை மனதுக்குள் தேடி பிரார்த்தனை செய்கிறார்கள்.
எந்தத் திருத்தலத்தில் அந்தப் பிரார்த்தனை நல்லவிதமாக நிறைவேறுகிறதோ அந்தத் திருத்தலத்துக்கு இதய சுத்தியோடு சென்று தங்கள் காணிக்கையைச் செலுத்துவார்கள்.
அதன் பிறகு, அந்தத் திருத்தலத்தின் மகிமையை அந்த தெய்வத்தின் சக்தியை தங்கள் நண்பர்களிடம் தங்கள் உறவினர்களிடம் சொல்லி சிலாகிப்பார்கள். அப்படி வாய்மொழியாகவே அந்தக் கோயில் பிரபலமடையும். இந்த நேர்த்திக்கடனை சிலரால் உடனடியாக செலுத்த முடியாது. 'ஏழையின் கடன் ஏழு வருஷம்' என்னும் சொலவடையே நம் கிராமப்புறங்களில் இன்னமும் மக்களால் சொல்லப்படுவதுண்டு.
திருப்பதி வெங்கடாசலபதியை மனதில் வேண்டிக்கொண்டு வாகன வசதி இல்லாத அந்த காலத்தில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்கள் ஏற்படுத்தப்பட்டன.
திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட காணிக்கையை இங்கே செலுத்தலாம். ஆனால், இங்கே வேண்டிக்கொண்டு திருப்பதியில் செலுத்தக்கூடாது என்பார்கள். காரணம் அந்தக் காலத்திலேயே திருவேங்கடமலை செல்வச்செழிப்புடன் பெரிய கோயிலாக இருந்ததுடன், மற்ற கோயில்களின் வளர்ச்சிக்கும் ஆதரவு தந்து வருகிறது
1933-ம் ஆண்டில் அப்போதிருந்த வெள்ளை அரசாங்கம் ஒரு சிறப்பு மசோதாவை இயற்றி ‘திருமலா தேவஸ்தான கமிட்டி’ எனும் தன்னாட்சிக் குழுவிடம் இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தது. அதன்படி அரசால் நியமிக்கப்படும் கமிஷனர் மூலம் இந்த கோயில் நிர்வகிக்கப்படும் நடைமுறை தொடங்கியது.
மேலும் ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுரை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ வும் ஏற்படுத்தப்பட்டது.
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள், பொன்னாபரணங்கள், வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம், தினம்தோறும் நடைபெறும் திருமலை சேவா மூலம் கிடைக்கும் பணம், நேர்த்திக்கடனாக, காணிக்கையாகவென உண்டியலில் செலுத்தப்படும் பணம், லட்டு விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் என பலவகைகளிலும் வருமானம் வருகிறது.
இந்த பணமெல்லாம் ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்பட்டு அதற்கேற்ப பல்வேறு நல்ல காரியங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது.
இவையாவும் திருமலை-திருப்பதி தேவஸ்தான கமிட்டி மற்றும் அறங்காவலர் குழுவினரின் மேற்பார்வையில் சிறப்பாக செய்யப்படுகின்றது.
பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு இருக்கும் வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், கோவிந்தராஜ ஸ்வாமி கோயில், சீனிவாசமங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்த வருமானத்திலிருந்தே பராமரிக்கப்படுகின்றன.
இவை தவிர திருமலையைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் வேறு பல கோயில்களுக்கும் இந்த நிதி வழங்கப்படுகிறது.
திருமலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள், இலவச லாக்கர்கள், இலவச குளியலறைகள், இலவச கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் தரமான முறையில் வழங்கப்படுகின்றது.
பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானம் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையைப் பெற்றதாகும்.
கடலைப்பருப்பு, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற விலை உயர்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
இவை தவிர இலவச பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள், மலர்கள், செடிகொடிகள் மற்றும் பசுமை மிக்க மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுவாமி வெங்கடாசலபதியின் மிகப் பிரசித்தி பெற்ற பக்தர்களில் ஒருவர் தரிகோண்டா வெங்கமம்பா என்ற பெண்மணி. அவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 1730 -ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வெங்கடாசலபதியிடம் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு, அக்காலத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான நபர்கள் பலருக்கு உத்வேகமூட்டி, கோயில் காரியங்களுக்காகக் குறிப்பிடத்தக்க நன்கொடைகளைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு ஊக்கமளித்தார்.
ஏழைகளுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவை என்று கருதிய வெங்கமம்பா, அந்த நன்கொடைகள் அனைத்தையும் கோயிலுக்கு வந்த ஏழை பக்தர்களுக்கு இலவச உணவும் நீரும் கொடுப்பதற்குப் பயன்படுத்தினார்.
கடவுளின் கடைக்கண் பார்வை படுவதற்கு ஒரு பக்தர் செய்யக்கூடிய பல காரியங்களில், அன்னதானம் வழங்குவது மிக உயர்ந்த காரியமாகக் கருதப்படுகிறது.
அன்னச் சத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே நன்கொடைகள் மூலம் நடத்தப்பட்டு வந்ததாக, கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வளாகத்தைச் சுற்றியும் இருக்கின்ற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இன்றளவும், அன்னதானத் திட்டத்தின் வாயிலாக, மேல்திருப்பதியில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
எல்லா நாட்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்ற இத்திட்டம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகளால்தான் நடத்தப்படுகின்றது.
அன்னதானத் திட்டத்தை என்றென்றைக்கும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நன்கொடையாகக் கிடைக்கும் பணம் முழுவதையும் தேவஸ்தானம் தேசிய வங்கிகளில் முதலீடு செய்கிறது.
அதிலிருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றது.
குறைந்தபட்ச நன்கொடை 1,000 ரூபாய்.
ஒரு லட்ச ரூபாயிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் வரை நன்கொடையாக அளிப்பவர்களுக்கு சிறப்பு தரிசனம், தங்கும் இடம் போன்ற சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பத்து லட்ச ரூபாய் நன்கொடை கொடுப்பவர்களின் பெயர்கள், வளாகத்தில் உணவு பரிமாறப்படும் இடத்தில் எழுதப்படுகிறது.
இவை தவிர நாம் காணிக்கையாக செலுத்தும் பணம் இன்னும் என்ன என்ன காரியங்களுக்குப் பயன்படுகிறதெனப் பாருங்கள்.
* நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோயிலாக திருமலை திகழ்கின்றது. ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோயிலில் உபயோகிக்கப்படுகின்றன.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது.
அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர்.
நாட்டிலேயே மிகப் பெரிய கோயில் நிர்வாக அமைப்பு இதுதான்.
ஒரே கோயிலில் அதிகபட்ச எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இந்தக் கோயிலில்தான்.
* வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
*தினமும் சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.
* 30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோயில் நிர்வகித்து வருகிறது.
* சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884-ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது.
நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959-ல் திறக்கப்பட்டது.
நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது.
அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டிடக்கலைப் பள்ளி.
* நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981-ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.
*தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.
அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 -ல் நிறுவப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்...
* ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
'மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964-ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
* மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை.
இந்த அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
* ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக்கட்டளை
இந்த அறக்கட்டளை, கோயில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாசாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
* பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை முழுமையான அறப்பணிகள் அல்ல. முக்கியமான அறப்பணிகள் அவ்வளவே.
No comments:
Post a Comment