மிடில் க்ளாசுக்கென்று சில குணாதிசயங்கள் உண்டு.
ஜலதோஷம் என்று வந்துவிட்டால் டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தாமல் கர்சீப்பை பல்வேறு திசைகளிலும் மடித்து பயன்படுத்த கூடியவர்கள்.
கூகுள் தான் இவர்களுக்கு மாதா,பிதா, குரு, தெய்வம் என்று சகலமும். பயோகிளிட்டஸைன் பற்றி ஒரு கான்ட்ரவர்ஸி இருக்கே டாக்டர் என்று முந்திரிக்கொட்டையாகி அவரிடம் தன் அறிவினை வெளிப்படுத்துவார்கள்.
இவர்கள் பார்மசியில் மருந்து வாங்கும்போது அஞ்சு வருஷம் டாக்டருக்கு படித்தவங்க மாதிரி டோலோ 650 அட்டையை பாரஸீட்டமால் தவிர வேறு என்ன காம்பினேஷன் என்று மருந்து எடுத்துக்கொடுக்கும் பையனிடம் இவர் ஸ்டெயிலாக காட்டும் பிரதாபம் தனி வகை..
சம நிலையில் உள்ளவர்களின் வளர்ச்சியை பார்த்து மனதார பாராட்ட மாட்டார்கள். ரொம்ப சந்தோஷம், பெருமையா இருக்கு என்றெல்லாம் வாயார வாழ்த்திய கையோடு ஜெலுசில் குடிப்பவர்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கும், இந்த கம்ப்பேரிசனே தப்பு என்று அதிகம் பேசினாலும், கௌஷிக் கணக்குல எவ்வளவுடா என்று மகனிடம் கேட்க தயங்காதவர்கள்.
வசதியானவர்கள் என்றால் தவறான வழியில் தான் இவர்கள் சம்பாதித்திருப்பார்கள் என்ற ஒரு உளுத்துப்போன சித்தாந்தத்தை கொண்டவர்கள். தாங்கள் மட்டுமே சட்டத்திற்கு உட்பட்டு ஒழுங்காக வரி கட்டி உத்தமர்களாக வாழ்கிறோம் என்ற எண்ணம் உடையவர்கள்.இவர்களின் வசம் இருக்கும் ஓரிரு வீட்டில் வரும் வாடகையை வருமான வரி தாக்கலில் குறிப்பிடமாட்டார்கள்.
சொந்த பையனுக்கு வாடகை தருவது போல்
எச் ஆர் ஏ வாங்கக்கூடியவர்கள்
எச் ஆர் ஏ வாங்கக்கூடியவர்கள்
என்றோ ஒரு நாள் சிவானந்த குருகுலம் போன்று ஏதோ ஒரு ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுத்துவிட்டு அதை ஆண்டுக்கொருமுறை பத்து பேரிடமாவது சொல்லி கொள்வார்கள்.
நேரடியாக லஞ்சம் வாங்க பயப்படுபவர்கள்.பதவியை பயன்படுத்தி திருப்பதியில் சிறப்பு தரிசனம் என்றால் ஓ கே. வெளியில் தெரியாத அளவிற்கு ஐயாயிரம் ரூபாய்க்கு குறைவான பரிசுப்பொருட்களாக கிடைத்தால் மறுக்காமல் வாங்கிக்கொண்டு அவர் பேமெண்ட்டை உடனடியாக பாஸ் செய்யக்கூடியவர்கள்.
இவர்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்றொடர்கள் ' நான் ரொம்ப ஸ்ட்ரெயிட் பார்வர்ட், மனசுல பட்டதை அப்படியே சொல்லிடுவேன், கொஞ்சம் ஷாட் டெம்பர்ட்''
முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஏதாவது தவறு நடக்கும்போது 'கலிகாலம்' என்று பதில் போடுபவர்கள். ஓரளவு வசதி உள்ள வீட்டில் திருமணம் செய்து கொண்டு அல்லது நல்ல வேலைக்கு போகும் பெண்ணாய் பார்த்து திருமணம் செய்துகொண்டு முகநூலில் திருமணத்திற்கு ஆடம்பரங்கள் கூடவே கூடாது என்று பதிவை போட்டு சமூகப்பொறுப்பை நிலைநாட்டுவார்கள்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது உள்ளிட்ட ஏனைய ஆன்மீக இறை சமாசாரங்களை சிரத்தையாக செய்வாரோ இல்லையோ எல்லோருக்கும் தான் செய்வதை தெரியப்படுத்திவிடுவார்கள். குறிப்பாக ஆன்மீகவாதிகளிடமோ, குருமார்களிடமோ பேசும்போது மூக்கின் முன்னால் கையை மிக பவ்யமாக வைத்துக்கொள்ள (எச்சில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக)
மறக்கமாட்டார்கள். உத்தம பக்தர்கள் யூ சீ!!..
மறக்கமாட்டார்கள். உத்தம பக்தர்கள் யூ சீ!!..
பிசினெஸ் செய்யும் பையன்களுக்கு எளிதில் பெண் கொடுக்க மாட்டார்கள். அப்படியே வேலை செய்பவர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் மாதத்தில் எவ்வளவு நாள் நைட் ஷிப்ட் போன்ற கேள்விகளை தவறாமல் கேட்பார்கள்.
நன்றாக விளையாடினாலோ, நன்றாக பாடினாலோ பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நிறுத்த சொல்லிவிடுவார்கள்.
இருபது வருடங்களில் ஒரு வீடு கூட மாறியிருக்கமாட்டார்கள். ஆனாலும் ப்ரிட்ஜ், ஏ சி,
டி வி வாங்கிய அரக்கு கலர் அட்டைபெட்டிகளை பரணில் தாய் வீட்டு சீதனம் போல் சேர்த்து வைத்திருப்பார்கள்.
டி வி வாங்கிய அரக்கு கலர் அட்டைபெட்டிகளை பரணில் தாய் வீட்டு சீதனம் போல் சேர்த்து வைத்திருப்பார்கள்.
பல பேர் வீடுகளில் ஜொள்ளு வழிந்து பழுப்பு நிறம் ஏறிய அழுக்கு தலைகாணிகளை அழகான உறையை கொண்டு மறைத்து இரண்டு மூன்று கண்டிப்பாக வைத்திருப்பார்கள்.
சி டி பிளேயர்கள் வழக்கொழிந்து போய் பல வருடங்கள் ஆனாலும் வீட்டின் ஷோ கேசில் இடத்தை அடைத்தாவது அதை வைத்து கொள்ள தயங்கமாட்டார்கள்.
உபயோகம் இல்லாத பழைய ஷூக்கள் மூன்று நான்கு கண்டிப்பாக ஷூ ரேக்குகளில் இருக்கும். அங்கு நிரம்பி வழியும் நேரத்தில் அவை பால்கனிக்கு போகுமே தவிர வெளியே குப்பை தொட்டிக்கு போகாது.
அதிக விலை கொடுத்தாலும் ஆண்டிராய்டு போன் தான், கம்ப்யூட்டர் என்றால் விண்டோஸ் தான்.
காதல் திருமணம், மாற்று ஜாதி, மதம், வெளிநாட்டினர் போன்ற அனைத்துமே மன வருத்தப்பட்டாலும் பிறகு ஏற்று கொள்கிறார்கள் சில ஜாதி இந்துக்களை தவிர.. பழைய காலம் போல் அப்பாக்கள் நான் விஷத்தை குடித்து இறந்துவிடுவேன் போன்ற டயலாக்குகள் பேசுவதில்லை.
இந்துக்களாக இருப்பின் மற்ற எல்லா கடவுள்களை பூஜைக்கும் பண்டிகைகளுக்கும் வைத்து ஆத்ம பூர்வமான நம்பிக்கைக்கு பெரும்பான்மையான வீடுகளில் ஷீரடி சாய் இடம் பெற்றுவிட்டார்
கடைசி வரை பிதுக்கிய டூத் பேஸ்ட், வேலை செய்பவர்களுக்கு சற்றே தண்ணியாக உள்ள காபி, டீ போன்ற அவலங்கள் இப்போது இல்லை என்றே நினைக்கிறேன்.
கடைசியாக ஒன்று. இவற்றில் நிறைய இருந்தாலும் , ஒன்றிரண்டு தான் தங்களிடம் இருப்பதாக சொல்லி நேர்மையை நிலைநாட்டுபவர்கள்.
No comments:
Post a Comment