Thursday, August 2, 2018

இப்போ வர்ற சீரியல்லா இது தான் தீம்..

அந்த காலத்தில் ஒரு சில படங்களில் கதை மிகவும் த்ராபையாக இருக்கும். ஏதாவது ஒரு சிறிய முடிச்சு மட்டுமே இருக்கும். அதை சுற்றியே கதை நகரும். முடிச்சு மிகவும் மெல்லியதாகையால் கதையை நகர்த்த கொஞ்சம் சிரமப் படுவார்கள்.
படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கதை முடிந்து விடுமோ என்று இருக்கும். அனேகமாக அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ஒரு வசனம் எப்பொழுதுமே கை கொடுக்கும். மிகவும் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்ட நாயகன் அல்லது நாயகி அழுதபடியே, “நான் சொல்றதை கேளுங்க” ன்னு ஒரு வசனம் கண்டிப்பா பேசுவாங்க. அதுக்கு பதில் என்ன இருக்கும்னா, “போதும் இனிமே நீ சொல்றதை கேட்க நாங்க யாரும் தயாரா இல்லை” என்று வரும். “நான் சொல்றதை கேளுங்க”க்கு பதிலா என்ன விஷயமோ அந்த விஷயத்தையே சொல்லிட்டா படமே முடிஞ்சிடும். ஆனா சொல்ல மாட்டாங்க.
நாயகன் சாயங்காலமா தன் முகத்தை மூடிக்கிட்டு, அக்கம் பக்கம் பார்த்தபடியே திருட்டுத் தனமாக ஒரு வீட்டிற்கு போவான். இவன் போகும் போது அந்த வீட்டின் கதவு திறந்தே இருக்கும். படாரென்று திறந்து கொண்டு உள்ளே போய் கதவை தாளிட்டு விடுவான். உடனே அந்த வீட்டின் மேல் மாடியில் விளக்கு எரியும். அந்த வெளிச்சத்தில் ஜன்னலில் நிழல்கள் தெரியும். நாயகனும் ஒரு பெண்ணும் பேசிக் கொண்டு இருப்பார்கள். மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். கைகளைப் பிடித்துக்கொண்டும் அணைத்துக் கொண்டும் பேசுவார்கள். இதை நாயகி பார்த்து விடுவாள். அடுத்த நாளே காதலனை மறித்து “உங்களுக்கு நான் முக்கியமில்லை. வேறொருத்தி இருக்கிறாள் போலும். நானே என் கண்களால் பார்த்தேன்” என்பாள். உடனே நாயகன் அழுது புரண்டு, “நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்” என்பான். “போதும். கேட்டதெல்லாம் போதும். என் வாழ்க்கையே பாழாகி விட்டது.” என்று நாயகியும் வசனம் பேசுவாள். கூட்டம் கூடும். எல்லோரிடமும் நாயகன் “தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்” என்பான். ஒருவர் அவன் கன்னத்தில் அடித்து, “போதும் உன் நாடகம்” என்று மறுபுறம் தள்ளி விடுவார். அங்கேயும் நாயகன் சென்று “தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள்” என்று அழுவான். அவர்களும் கேட்காமல் அவன் முதுகில் மொத்துவார்கள். உடனே காட்சி மாறும். நாயகன் கீழே விழுந்து கிடப்பான். அழுது கொண்டே ஒரு பாட்டு பாடுவான். அநேகமாக பி.பி. ஸ்ரீநிவாஸ் அல்லது எம்.எஸ்.விசுவநாதன் குரலில் ஒரு அசரீரி பாட்டு ஒலிக்கும். கதாநாயகன் ஒரு பாலத்து மேல தாடி மீசையோட பாடிகிட்டே போவான். இப்படி கதை நீண்டு கொண்டே போகும். படத்தின் கடைசிக் காட்சியில் நாயகன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, “ஐயோ, என்னை நம்ப மாட்டீர்களா? அவள் என் தங்கையடா, தங்கை” என்று அழுது புரண்டு கொண்டே வசனம் பேசுவான்.
“தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க” க்கு பதிலா ஒரே வரியில “அவள் என் தங்கை” என்று அப்போதே சொல்லி இருந்தால் சமாசாரம் அப்பவே முடிந்திருக்கும். ஆனால் எதை சொன்னால் அவன் மீது பழி வராதோ அதை மட்டும் பளிச்சென்று உடைத்து சொல்ல மாட்டான். நான் சொல்வதை நீங்கள் யாரும் கேட்கவே இல்லையே என்று ஒரு சப்பைக்கட்டு வேற கட்டுவான்/ள்.
“இந்த நகை உன் பெட்டியில் எப்படி வந்தது? உம்...சொல்லு...திருடினாய்தானே?” என்று கேட்பார்கள். உடனே நாயகி “நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கள்” என்று ஆரம்பிப்பாள். “நிறுத்துடி. இனிமேலும் நீ சொல்றதை கேட்க நாங்க என்ன முட்டாள்னு நினைச்சியா?” ன்னு ஒரு வசனம் யாரவது பேசுவாங்க. “இது என்னுடைய நகைதான்” ன்னு ஒரே ஒரு வரி சொல்லி இருந்தா படமே முடிஞ்சி போயிடும். ஆனா “நான் சொல்றதை.......” தான் வரும்.
இந்த “தயவு செஞ்சி நான் சொல்றதை கேளுங்க”வை பல தடவை கேட்டு நான் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கேன். ரொம்பவும் crucial ஆனா சமயத்துல, நாயகன் உண்மையை சொல்ல வேண்டிய சமயத்துல, ஐயோ சொல்லித் தொலைக்க மாட்டானான்னு நமக்கு இருக்கும். ஆனா அவனோ “நான் சொல்றதை கேளுங்க” வுலயே நிப்பான். எரிச்சல் எரிச்சலா வரும். இந்த எரிச்சலை நீங்க யாராவது அனுபவிச்சிருக்கீங்களா?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...