31 ஆண்டுகளுக்கு முன் சரியாக இதே நேரம்.
டிசம்பர் 24, 1987 வியாழக்கிழமை... அதிகாலை சுமார் 5 மணி.
டிசம்பர் 24, 1987 வியாழக்கிழமை... அதிகாலை சுமார் 5 மணி.
நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.
அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்.
“அப்படியே நிறுத்திட்டு எல்லோரும் ராஜாஜி மண்டபத்துக்குக் கிளம்புங்க” என்று அதிகாரிகள் கூறியவுடன்,
‘சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்’ என்று நினைத்துக்கொண்டு ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு நாம் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது.
போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க ‘மார்க்’ செய்துகொண்டிருந்தனர்.
வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.
‘முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டு வரப்படவிருக்கிறது’ என்று கேள்விப்பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்பட்டது.
கொஞ்ச நேரம்தான்... ஒரு கட்டடம் சரிவதுபோல் ‘டமார்’ என்ற சத்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்தை நோக்கி ஓடி வந்தனர்.
சில போலீஸ் அதிகாரிகள், “இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டு வரவில்லை’’ என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்துவந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்தை நோக்கிப் பாய்ந்தது.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் நின்ற போலீஸார், கணநேரத்தில் ஓரமாய் விலகிக்கொண்டனர். படிக்கட்டின் மேலிருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளான புயல் கிளம்பிவருவது போலிருந்தது.
வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன்வாசல் வழியாக மேலே ஏறி, கதவுகளை முட்டி மோதித் திறந்தனர். உள்ளே முதல்வரின் உடல் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி,
“எங்கே... எங்கே எங்க தெய்வம்?” என்று ஓடித் தேடினர்.
ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ‘‘ஐயோ, காணோமே... காணோமே” என்று அரற்றியபடி, அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கி விட்டனர்.
ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன.
தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்து வைக்கப்பட்டிருந்த ஆணிகளின்மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது.
ராஜாஜி மண்டபத்தின் எதிரேயிருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டியபின் சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது.
முதல்வர் உடல் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதும், பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது.
மேடை மீது வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
“மேடையில் வேண்டாம்... நடு ஹாலிலேயே இருக்கட்டும்” என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.
“மேடையில் வேண்டாம்... நடு ஹாலிலேயே இருக்கட்டும்” என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.
இது நடந்துகொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் பின் வாசல் வழியாக அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் வந்தனர்.
கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா.
கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரையடுத்து, ஒரு அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.
பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்குமுன் பின்வாசல் வழியாகக் கொண்டு வந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவிலிருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்திருந்தனர்.
வழக்கமாக அவரைப் பார்க்கும் உடை... தூங்கிக்கொண்டிருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர்.
வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டிருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.
வழக்கம்போல் அவர் வலது கையில் கட்டியிருப்பது போலவே, கட்டப்பட்டிருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45-ஐத் தாண்டி இயங்கிக்கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் வரை மண்டபத்துக்குள் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர்.
முதல்வரின் அருகே இடதுபக்கமாக அவரது வளர்ப்பு மகன் அப்பு, அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன் இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வெறித்துப் பார்த்தபடியே இருந்தனர்.
கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும் வாய்விட்டுக் கதறினார்கள், பத்மநாபனும் அப்புவும்.
ஜெயலலிதா வந்ததும், சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக, அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்றுகொண்டு,
யார் முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றியிருந்தன.
ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார். அவருக்கு அருகில் வி.என்.ஜானகியின் உறவினரான நடிகர் தீபன் அழுதுகொண்டு நின்றார்.
முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் சரிவான மேடை தயாரித்து முடியவில்லை.
அப்போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை. தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார்.
தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற அமைச்சர் பொன்னையன், முதல்வரின் முகத்தை நோக்கி ஏனோ கையை நீட்டினார்.
சடாரென்று பொன்னையனின் கையைப் பிடித்து, முதல்வரின் முகத்தைத் தொடவிடாமல் விலக்கிவிட்டதோடு, அவரை முறைத்தார் ஜெயலலிதா.
ராமாவரம் தோட்டத்திலிருந்து வந்திருந்த முதலமைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடிவந்து அமைச்சர்களிடம்,
“கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது” என்று முறையிட்டார்.
அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர்.
ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடித்துவந்து, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்.
ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார். முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது.
ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது.
வெள்ளை நிற பேன்ட் சட்டையிலிருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார்.
அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டிருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின் மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக்கொண்டார்.
நெற்றி பிளந்து, அவருடைய மார்புப் பகுதிவரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் கைகளை நீட்டி,
“தலைவா... போயிட்டியா... நீ போயிட்டியா!” என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்ம் முழுக்க ரத்தக் கறை படிந்தது.
அமைச்சர்களும், பிரமுகர்களும் முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். திடீரென்று சின்ன சலசலப்பு தெரிந்தது.
படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தார். வந்ததும் மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார்.
பின்னர், முதல்வருக்குப் பின்னால் இருந்த மண்டபத்துக்குள் வந்தார். முதல்வரின் உறவினர் ஒருவரைப் பிரதமரிடம் அறிமுகப்படுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன். உறவினரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவர் சொன்னதைச் சிறிதுநேரம் கேட்டார் ராஜீவ்.
பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடுகூட, ஒரு தட்டு நிறைய பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்து கொண்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள்மயமாய் இருந்தது. தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக்கொண்டு அழுதார்.
குழந்தை போலத் தேம்பியபடி, “இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... ‘எதுன்னாலும் நீ என்னை வந்து பாரு... ஏன் நீ வர மாட்டேங்கறே’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்” என்று குமுறிக்கொண்டிருந்தபோது,
ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே இடத்தில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.
ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து,
“ரஷ்யாவில் லெனின் உடலை ரசாயானத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலுள்ள ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பெட்டிஷன் கொடுத்திருக்கிறார்” என்றார்.
சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ, “அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதையெல்லாம் விரும்ப மாட்டார். அண்ணாவைப் போல, சந்தனப்பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்” என்று மறுத்தார்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவிடம் சென்று,
“காலையிலேருந்து நின்று கொண்டே இருக்கிறீர்கள்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்” என்றார்.
ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.
டி.ஜி.பி. ரவீந்திரன், முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்து,
“இறுதிச்சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே..?” என்றார்.
அவர்கள் “ஆம்” என்றதும்,
"நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க. நாளை மதியம் இரண்டு மணிக்கு அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுங்கள். அங்கவஸ்திரம், சட்டியெல்லாம் கொண்டு வந்திடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்”
-என்று சொல்லி அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார். அவர்களைப் பின்தொடர்ந்து நாமும் ராஜாஜி மண்டபத்தை விட்டுப் பின்புறமாய் வெளியேறினோம்.
திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, ரோட்டின் இருமருங்கும் முண்டியடித்துக்கொண்டிருந்தனர்.
வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளுடனும், ரத்தச் சிராய்ப்புகளுடனும் எதிர்ப்பட்டனர்.
மாலை ஆறு மணி சுமாருக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, நடுரோட்டில், வெளியூர்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாகக் காத்துக் கிடந்தனர்.
ஒரு காவல்துறை அதிகாரியிடம், “என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்பமாட்டேன்” என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக் கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.
இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம் வரை சாப்பாடு, தண்ணீர் எதுவுமில்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர்.
ரோடுகளிலும், புற்றீசல் போல் புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர்,
“நாங்க தவமிருந்து பெத்த தலப்புள்ளை போயிடுச்சே... எங்க குலதெய்வத்தின் உசிரே இப்போ கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா’’
-என்று கதறியபடி, முதல்வர் உடலிருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால், எப்படியும் முதல்வரைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வரிசையில் நின்று காத்திருந்தார்.
கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தபோது,
“இனி எங்களுக்குனு யாரு இருக்கா, எங்களை அநாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு” என்று விசும்பினார்!
No comments:
Post a Comment