நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.
ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.
அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.
அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.
மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.
‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.
நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment