வைகுண்ட ஏகாதசி விரத முறை !!
மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு.
🌟 வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம். இப்பொழுது வைகுண்ட ஏகாதசியன்று எவ்வாறு விரதத்தை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.
🌟 ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
🌟 ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
🌟 ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
🌟 ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.
🌟 மேலும், 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.
🌟 முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
🌟 இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
🌟 மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.
🌟 துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என்கிறார்கள். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது.
🌟 ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
🌟 வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.
No comments:
Post a Comment