தமிழக அரசியல் நகர்வுகளில் எது முக்கியமானதோ இல்லையோ? யார் வரும் போது எவரெல்லாம் வாழ்த்து சொல்கின்றார்கள்? என்பது உங்களுக்குப் புரிந்தால் போதும்? மீதியுள்ளவற்றை உங்களால் யூகித்துக் கொள்ள முடியும்?
அண்ணாமலை அவர்களின் வரவு இதைத்தான் எனக்கு உணர்த்துகின்றது.
பாஜக வில் முருகன் தலைவராக இருந்த போது பெரிய அளவு எதிர்ப்பும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்லை. அவரை நீக்கியது தவறு என்று திருமாவளவன் இப்போது சொல்கின்றார். அவர் பட்டியலினத்தவர் என்பதற்காக அல்ல. அதற்கு அப்பாலும் விசயங்கள் உள்ளது.
அவர் மத்திய அமைச்சர் ஆனதற்கு முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்புகின்றார். அவர் யாருக்காக இருந்தார்? எப்படிச் செயல்பட்டார்? என்பது இங்கு பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் மாறியது, மாற்றப்பட்டது பாஜக வை விட எதிர் அணியில் இருப்பவர்களுக்குப் பயங்கர ஷாக்.
வளர்வதற்கு வாய்ப்புள்ள இடங்களை வெட்டி நறுக்கி கத்தரித்து வைத்த போதிலும் அது மீண்டும் துளிர்த்து எழும் போது பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்.
அப்படித்தான் இப்போது மற்றவர்கள் பார்வையில் தமிழக பாஜக கண்ணில் பறக்கும் பூச்சியாக தெரிகின்றது.
காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவர் நியமிக்கப்படுகின்றார் என்றால் நியமிக்கப்படாத பத்து தலைவர்கள் அடுத்தடுத்த நாளில் வெளி வருவார்கள். காங்கிரஸ் 2.0 உருவாகும்.
ஆனால் பாஜக வில் நிலைமை தலைகீழாக உள்ளது.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினாலும், விரட்டி அடித்தாலும், நீக்கினாலும் பாஜக வில் சலனம் இல்லை. சங்கடம் இல்லை. பொது வெளியில் பூகம்பம் எதுவும் உருவாவதும் இல்லை. எந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படுகின்றதோ அதே அளவுக்குப் பதவி நிரந்தரமில்லை என்ற கருத்தும் பாஜக வின் மேல் இருந்து கீழே உள்ளவர் வரைக்கும் கட்சி புரிய வைத்துள்ளது என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளுக்கும் பாஜக விற்கு பெரிய வித்தியாசமே இது மட்டும் தான்.
இதன் காரணமாக பாஜக வில் உள்ளரசியல் இல்லை. இருந்தாலும் அது நீடிப்பதில்லை. வெளியே தெரிவதும் இல்லை.
இந்த சூட்சமத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் எதிர் அணியினர் தவிக்கின்றார்கள். பாஜக வின் அடுத்த கட்ட நகர்வை உணர முடியாமல் எதிராளிகள் தடுமாறுகின்றார்கள். மனதிற்குள் வெறுத்துக் கொண்டே பாஜக போல இருக்க வேண்டும் ஆஃப் த ரிக்கார்ட்டாக தங்கள் கட்சி வட்டத்திற்குள் பேசிக் கொள்கின்றார்கள். இதனை வாசிக்கும் போது புன்னகை புரிபவர்களும், பாஜக மேல் புழுதி வாரித்தூற்றுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராக வந்து அமர்ந்த பின்பு தமிழகத்தில் பல்வேறு திசைகளில் பலத்த மௌனமும், எரிச்சலும் உள்ள நிலையையும் நீங்கள் ஒவ்வொன்றாக உற்றுக் கவனித்தால் புரியும்?
பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் பரஸ்பரம் அரசியல் நாகரிகம் என்று கைகுலுக்குவதும், கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் இங்கே இயல்பு தானே? என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றக்கூடும்?
ஆனால் அண்ணாமலை நியமனம் விசயத்தில் ஏன் இங்கே அப்படி நடக்கவில்லை? என்பதில் தான் மத்திய பாஜக வின் சூட்சமம் உள்ளது. சுருக்கு கயிற்றுடன் வந்து இருப்பவரை யாராவது வரவேற்பார்களா? எப்போது வேண்டுமானாலும் சுளுக்கு எடுக்கப்படுவோம் என்று பயந்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அருகே வந்து நட்பு பாராட்ட விரும்புவார்களா? காரணம் அழுக்கு மூட்டை சுமந்தவர்களுக்கு அப்பழுக்கில்லாத மனிதர்களைப் பிடிக்காது. அவர்கள் பார்வையில் அரசியல் களத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நபர் என்றே கருதுவார்கள். ஆனால் அண்ணாமலை விசயத்தில் அப்படி இவர்களால் செயல்பட முடியாத அளவுக்கு நான்கு புறமும் பாதுகாப்பு அரண்கள் பக்குவமாக பொருத்தப்பட்டுள்ளது என்பதனை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.
நீங்கள் வாசிக்கும் போது என்னப்பா நீ ஓவராக பிடில் வாசிக்கின்றாய்? என்று நகைக்கத் தோன்றும். உண்மையை வேறு விதமாக உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஜெயலலிதாவைத் தமிழக மக்கள் விரும்பக் காரணம் கருணாநிதி என்ற பெயர் தீயசக்தி என்று அடையாளப்படுத்தி அதையே உண்மையென்று நம்பவைத்தார். அது அவரை காப்பாற்றியது. எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளியைப் பலவீனப்படுத்துவதன் மூலம் தன்னை பலப்படுத்திக் கொள்வது.
இனி அண்ணாமலை எடுக்கப் போகும் அரசியல் பாதை இந்தப் பாதையில் தான் இருக்கப் போகின்றது என்றே நான் யூகிக்கின்றேன்.
காரணம் இங்கே சொல்வதற்கு, சுட்டிக்காட்ட, வெளிக்கொண்டுவர ஏராளமான புதைபொருள் சமாச்சாரங்கள் உள்ளது. இங்கே பதவியில் வந்து அமர்ந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் எதுவும் வெளியே வராமல் இருந்தது.
சுட்டிக் காட்டி அரசியல் செய்து இருந்தால் பாஜக இன்னும் சில சமஉ பெற்று இருக்க முடியும். இது நடக்காத காரணத்தால் இங்குள்ள அனைவரும் தேவ தூதர்கள் போலவே சுகமாக இருந்தார்கள். இனி அது மாறும்.
தமிழ்நாட்டில் அரசியல் எப்படி இதுவரையிலும் நகர்ந்து வந்துள்ளது என்றால் நீ எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருந்து கொள். எங்கள் இருவரையும் அனுசரித்து இருந்து கொள் என்பதாகவே நகர்ந்து வந்த நகர்வுகள் இனி அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்குப் பின் என்று மாறும் என்றே நம்புகிறேன்.
அதிகாரத்தை அண்டிப் பிழைத்தவர்கள், அதிகாரம் வழியே தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டு தாங்கள் இருந்த கட்சியைப் பலிகடாவாக்கியவர்கள், கள்ள மௌனம் காத்தவர்கள், உள்ளே இருந்து கொண்டே குழி பறித்தவர்கள், உறவு ரீதியாக தொடர்பிலிருந்து கொண்டு தொழில் வளம் அடைந்தவர்கள் என்று பட்டியலிட்டால் அது நீளமாகப் போகும்.
இதுவே தான் தமிழகம் என்பது தேசிய அரசியல் தவறானது என்ற எண்ணத்தை இங்கே விதைக்க முக்கிய காரணமாக இருந்தது.
நிலம் உழுது, பட்டம் பார்த்து, பயிர் செய்து, காபந்து பார்த்து, அறுவடைக்காகக் காத்திருப்பது முட்டாள்தனம்.
உடனடி லாபத்திற்காக தங்கள் சுயமரியாதையை அடகு வைப்பது தவறில்லை என்பதாகவே கட்சி மாறுகின்றார்கள். விதவிதமான காரணங்கள் சொல்கின்றார்கள்.
சிறைச்சாலைக்குள் செல்லும் பழைய குற்றவாளிகள் உள்ளே நுழைந்ததும் தங்களுக்குரிய தோஸ்துகளை அடையாளம் கண்டு அந்தப் பக்கம் உள்ள கூட்டணியில் ஐக்கியமாகிவிடுவார்கள். இதுவே தான் இங்கே உள்ள அரசியல் கட்சிகளும் கடைப்பிடிக்கின்றது.
அதிமுக வில் கூட பெரிய உற்சாகம் இல்லாத அளவிற்கு அண்ணாமலை வரவு அமைந்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் அடித்தளத்தில் இவரை எப்படிக் கையாள்வது? என்ற குழப்பம் இருக்கக்கூடும். இதுவரைக்கும் வந்து அமர்ந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை இருந்தது. எளிதாக வாங்க முடிந்தது. பலவீனம் இருந்தது. பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
ஆனால் உள்ளே வரும் போதே மத்திய அரசின் செல்வாக்கோடு வருபவரை அவ்வளவு எளிதாக கை வைக்க முடியாது என்று ஒவ்வொரு கைகளும் பிசைந்து கொண்டு இருப்பது தான் இப்போது தமிழக அரசியல் களத்தில் முக்கியமான பேசப்படாத விவாதம்.
எதிரிகளின் கண்களில் பயத்தை உருவாக்கு.
பாதி வெற்றிக்கு அருகே வந்து விட்டாய் என்று நம்பிக்கை கொள்.
No comments:
Post a Comment