நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய நிலையில், ஏராளமான பிரச்னைகள் காத்திருக்கின்றன.தமிழகத்தில், 21 மாநக ராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, 2006ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது; நீதிமன்ற தடையால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டது. தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்தபோது, பல்வேறு பிரச்னைகளில் மக்களின் கருத்தை அறியாமல் அதிகாரிகளே முடிவுகளை எடுத்தனர். பெரும்பாலான முடிவுகள் மக்களின் எதிர்ப்பை பெற்றன.
சொத்து வரி குளறுபடி
கடந்த ஆட்சிக்காலத்தில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதில், அதிகாரிகள் நிலையில் நடந்த குளறுபடிகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உயர்வை வெளிப்படையாக அமல்படுத்தாமல், பழைய வரி விகிதங்களில் பிழை இருப்பதாக கூறி, அடிப்படை விகிதத்தை அதிகாரிகள் மாற்றி மதிப்பிட்டதாக புகார் எழுந்தது.
இதில், மக்கள் கருத்து என்ன என்பது துளியும் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஒரு கட்டத்தில் சொத்து வரி உயர்வு கடந்த ஆட்சியிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
கட்டண குளறுபடி
நகர்ப்புற பகுதிகளில் திடக் கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கான கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான உள்ளாட்சிகளில், சொத்து வரியுடன் சேர்த்து, திடக்கழிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரையறை என்ன என்பதிலும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கான வகைப்பாடு, வரையறை விஷயங்களில் குழப்பம் நிலவுகிறது. சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்த, கடந்த ஆட்சிக்காலத்தில் முயற்சி நடந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் ஒத்திவைக்கப்
பட்டது. ஆனால், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் இத்திட்டம் அமலானது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இடங்களில், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வரி வசூல் குழப்பம்
இதே போல, உள்ளாட்சிகளில் தொழில் வரி, தொழிலாளர் நல நிதி, நிர்வாக அலுவலகங்களுக்கான உள்ளாட்சி வரி ஆகியவை வசூலிக்கப்படுகின்றன. இந்த வரிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தினாலும், அதை கணக்கில் சேர்ப்பது முதல், பல்வேறு நிலைகளில் குழப்பம் நிலவுகிறது.
பெரும்பாலான நகராட்சிகளில், இந்த வரியை செலுத்த நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், வசூலிப்பு நிலையில் காணப்படும் குளறுபடிகள், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன.இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது: சொத்து வரி, திடக் கழிவு கட்டணம், திடக் கழிவு மேலாண்மை போன்ற விஷயங்களில், மக்கள் கருத்துக்கு ஏற்ப நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். புதிதாக மக்கள் பிரதிநிதிகள் வரும் நிலையில், இது போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். பெயரளவுக்கு இருக்கும் ஆன்லைன் வரிவசூல் முறையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான், அரசுக்கு
வரவேண்டிய வருவாய் முறையாக வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment