திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுகவில் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் முட்டிமோதி வருவதால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுகவின் முன்னாள் பொருளாளர் மறைந்த எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவின் தம்பி மகனான மத்தீன் என்பவரும், உடுமலை நகர முன்னாள் திமுக செயலாளர் வேலுச்சாமி என்பவரும் நகராட்சி சேர்மன் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர்.
இதில் பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவை பெற்றதால் மத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
.
.
உடுமலை நகராட்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் திமுக தனிப்பெரும்பான்மயுடன் 24 வார்டுகளில் அமோக வெற்றிபெற்றிருக்கிறது. இந்நிலையில் 15-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ள உடுமலை நகர திமுக செயலாளர் மத்தீன், நகராட்சி சேர்மன் பதவிக்கான ரேஸில் முந்துகிறார். திமுகவின் பொருளாளராக இருந்த அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவின் தம்பி மகன் என்பது மத்தீனுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
நகராட்சி தலைவர்
இதனிடையே உடுமலை நகர முன்னாள் திமுக செயலாளரான வேலுச்சாமியும் நகராட்சி தலைவர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். இவர் ஏற்கனவே பல பதவிகளில் இருந்த காரணத்தால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் சென்னையில் முகாமிட்டு கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மூலம் பதவியை கைப்பற்றுவதற்காக காய் நகர்த்தி வருகிறார்.
கவுன்சிலர்கள் ஆதரவு
உடுமலைப்பேட்டை நகராட்சியில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள் 24 பேரில் பெரும்பாலானோர் மத்தீனுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதால் மறைமுகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
எஸ்.ஜே.சாதிக்பாட்ஷா
மறைந்த எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவுக்காக உடுமலை நகராட்சி சேர்மன் பதவியை அவரது தம்பி மகனுக்கு கொடுக்க வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கருணாநிதி, அன்பழகன் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் திமுகவில் பொருளாளர் பதவியை வகித்தவர் சாதிக்பாட்ஷா என்பது திரும்பிப்பார்க்கத் தக்கது.
No comments:
Post a Comment