Saturday, February 19, 2022

ஏற்றுக்கொண்டு வாழ்வதே சிறப்பாகும். பகவான் எங்கும் எதிலும் நிறைந்துள்ளான்.

 துறவி ஒருவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தட்டுத் தடுமாறி அங்கு வந்த கண் பார்வையற்ற பெண் ஒருத்தி, துறவியிடம் நெருங்கி, அவரைப் பார்த்து, 'ஐயா, பார்வை அற்றவளாகிய என்னால் பகவான் மகிழும் வண்ணம் வாழ்க்கை நடத்த முடியுமா?' என்று கேட்டாள். குரலில் அன்பொழுக அவர், "பெண்ணே! உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்.

"நடிப்புப் போட்டி ஒன்று நடக்கிறது. அதில் ஒருவன் அரசன் வேடம் போட்டு வருகிறான். இன்னொருவன் பிச்சைக்காரன் வேடம் போட்டு வருகிறான். மற்றொருவன் பைத்தியக்காரன் போல் வேடமிட்டு வருகிறான். இப்படியே பல வேடங்களில் பலர் வருகின்றனர். யாருக்குப் பரிசு கிடைக்கும்? அரசன் வேடம் போட்டவனுக்கா? அல்லது பிச்சைக்காரன் வேடம் போட்டவனுக்கா? அல்லது வேறு யாருக்காவதா?" என்று கேட்டார்.
"யார், தான் ஏற்றிருக்கின்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடிக்கின்றனரோ அவருக்கே சிறந்த பரிசு கிடைக்கும்" என்று பதில் தந்தாள் அந்த பார்வையற்ற பெண்.
"நன்றாகச் சொன்னாய்" என்ற அவர், "அதே போலத் தான் இந்த உலக வாழ்க்கையிலும் பலருக்குப் பல வேடம் தரப்பட்டுள்ளது. எனக்குத் துறவி வேடமும் உனக்கு கண் பார்வையற்றவள் வேடமும் கிடைத்துள்ளன. யார் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை சிறப்பாக நடிக்கின்றனரோ, அவர்களே பகவானுக்கு விருப்பமானவர் ஆவார்'' என்றார். இதைக் கேட்ட அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தாள்.
எவ்வாறான வாழ்க்கை நமக்கு கிடைத்தாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழ்வதே சிறப்பாகும். பகவான் எங்கும் எதிலும் நிறைந்துள்ளான். எல்லா இன்பமும் துன்பமும் இறைவனில் உள்ளது. எனவே, நமக்கு துன்பம் நேர்ந்தாலும் அதை இன்பமாக நினைத்து வாழ்வது தான் சிறப்பாக நடித்தல் என்பது! இன்பமும் துன்பமும் எல்லாம் இறை விதிகள் தான். நாம் இறைவிதிகளை மீறாமலும், நொந்து கொள்ளாமலும், குறை காணாமலும், அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்து வாழ்வதே உத்தமமாகும். இவ்வாறான வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு எவ்விதத்திலும் பயமில்லை. காரணம், ஒவ்வொரு செயலிலும் இறைவனைத் தவிர வேறு எதையும் உணர்வதற்கு வாய்ப்பேயில்லை!
திருச்சிற்றம்பலம்🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...