குருஷேத்திரப் போர் முடிந்து விட்டது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான யுத்தத்தில் தர்மம் வென்றது. பாண்டவர்கள், கவுரவர்கள் என இருதரப்பிலும் எண்ணற்ற உயிர் இழப்புகள் இருந்தாலும், தர்மம் வெற்றி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. தர்மத்தின் வெற்றிக்கும் காரணமான கண்ணன், பாரத யுத்தம் முடிந்து விட்டதை தொடர்ந்து தன் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமானார்.
அதற்கு முன்பாக தனது அத்தையான குந்திதேவியிடம் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும் என்பதற்காக, குந்திதேவியைக் காண வந்தார். அப்போது குந்திதேவி, ‘கண்ணா! எங்களை விட்டுச் செல்கிறாயா?. உன்னைத் தினமும் பார்க்கும் பாக்கியம் எனக்கு இனி கிடைக்காதே’ என்று வருந்தினாள். ‘இந்த மண்ணுலகில் எதுவுமே நிலையானது இல்லை.
இணைந்திருப்பவர்கள் பிரிவதும், பிரிந்தவர்கள் இணைவதும் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். உன் வருத்தம் போக்கும் வகையில் உனக்கு ஒரு வரம் தர, நான் சித்தமாக உள்ளேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்’ என்றார் கண்ணன். குந்திதேவியுடன் கண்ணபிரான் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, பாண்டவர்களும், திரவுபதியும் கூட அங்கு இருந்தார்கள். அவர்கள் குந்திதேவி, கண்ணனிடம் என்ன வரம் கேட்கப்போகிறாள் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.
எப்படியும் தன் வாழ்க்கை வளமாக இருக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், இறைவனின் திருவடியை அடையவேண்டும் என்பது போன்ற வரத்தையே கேட்பாள் என்பது அங்கிருந்தவர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் குந்திதேவி கேட்ட வரம், அனைவரது கணிப்பையும் தவிடுபொடியாக்கியது. மேலும் அவர்கள் இவருக்கு ஏதும் புத்தி சுவாதீனம் கெட்டுப் போய்விட்டதா? என்று கூட நினைத்திருக்கக் கூடும்.
ஆம்! குந்திதேவி கேட்ட வரம் அப்படி நினைக்கச் செய்யும்படிதான் இருந்தது. ‘எனக்கு தினமும் ஒரு துன்பத்தை தர வேண்டும்’ என்று யாராவது இறைவனிடம் வேண்டினால், அவரைப் பற்றி வேறு எவ்வாறு தான் நினைப்பது. கண்ணனைப் பார்த்து குந்திதேவி அந்த வரத்தைத் தான் கேட்டாள். ‘கண்ணா! தினமும் எனக்கு ஒரு சிறு துன்பமாவது நேரும்படி வரம் தந்தருள வேண்டும்’ என்றாள்.
அனைத்தும் அறிந்தவன் என்றாலும், அங்கிருந்தவர்களுக்கு குந்திதேவி எதற்காக அந்த வரத்தைக் கேட்டாள் என்பது புரிய வேண்டும் என்பதற்காக, கண்ணனும் புரியாதவன் போல், குந்தியைப் பார்த்துக் கேட்டான். ‘அத்தை! எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். சவுபாக்கியம் வேண்டும். என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் எந்த குறையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்பார்கள்.
ஆனால் நீயோ தினந்தோறும் ஒரு சிறு துன்பமாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்று வரம் கேட்கிறாயே’ என்றான். ‘இதுநாள் வரையிலும் எனக்கு எப்போது துன்பம் நேர்ந்தாலும், நான் உன்னைத்தான் நினைத்துக் கொள்வேன். யுத்தம் காரணமாக இதுவரை நீ என்னுடன் இருந்தாய். உன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே என் துன்பங்கள் எல்லாம் விலகிவிட்டன.
இப்போது நீ என்னை விட்டு நீங்கிச் செல்வதாக சொல்கிறாய். ஆகையால் நான் உன்னை நினைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற அச்சம் என்னை அச்சுறுத்துகிறது. தினமும் ஏதாவது துன்பம் வந்தால், அதன் வாயிலாக உன்னை நினைத்து ஆறுதல்பட்டுக் கொள்வேன். உன்னை நினைப்பதால், உன் அருட்பார்வை எனக்கு கிடைக்கும் அல்லவா? அதற்காகத்தான் எனக்கு துன்பத்தையே வரமாக தர கேட்கிறேன்’ என்றாள் குந்திதேவி.
உண்மைதான் இன்பத்தில் இருக்கும் எவரும், அந்த மகிழ்ச்சியில் இறைவனை மறந்து விடுவது இயற்கைதான். துன்பம் என்ற ஒன்று இருப்பதால்தான், அவ்வப்போது இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். ஆண்டவனை நினைப்பதற்காக மட்டுமே மனிதர்களுக்கு துன்பம் வருகிறது என்று நினைக்கக்கூடாது. அது ஆன்மாவின் முதிர்ச்சிக்கான பாடசாலை.
ஒவ்வொரு துன்பத்தின் போதும், ஒரு அனுபவத்தையும், சோதனைகளை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தையும் மனிதன் அறிந்து கொள்கிறான். அதோடு இறை வழிபாடும் இணையும்போது அந்த துன்பம், இன்பத்தை அளிக்கும்.
No comments:
Post a Comment