நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலின் என்ஜின் செயலிழந்ததால் அந்த கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் தகவலை அறிந்த கப்பலின் உரிமையாளர்கள் ஒரு சிறு படகில் ஏறி, பழுதாகி நிற்கும் கப்பலை வந்தடைந்தனர்.
கப்பல் இயந்திரங்களை பழுதுப் பார்ப்பதில் பிரசித்தி பெற்ற பல பிரபல பொறியாளர்களும், மெக்கானிக்குகளும் அங்கு வந்து சேர்ந்தனர். ஒருவர் மாற்றி, இருவர் அந்த என்ஜினை சீரமைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை செய்துப் பார்த்தனர். ‘ஊஹூம்’ அந்த என்ஜின் மூச்சு விடுவதாக இல்லை.
அவர்களின் முயற்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த கானல் நீராகிப் போனது. இறுதியாக இதுபோல் ‘முரண்டுப் பிடிக்கும்’ என்ஜின்களை வழிக்கு கொண்டு வருவதில் வல்லவரான ஒரு வயதான அனுபவசாலி மெக்கானிக்கை தேடி கண்டுபிடித்து நடுக்கடலுக்கு அழைத்து வந்தனர்.
கப்பலுக்குள் சென்ற அவர், என்ஜினை ஒருமுறை முழுமையாக தனது எக்ஸ்ரே கண்களால் அலசினார். தன்னுடன் கொண்டு வந்திருந்த பெரிய கைப்பையை திறந்து அதில் கிடந்த கருவிகளில் ஏதோ ஒன்றை வெகு நேரமாக தேடினார்.
கப்பலின் உரிமையாளர்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாக நின்றவாறு, ‘இந்த வயதான முதியவர் என்ன செய்து கப்பலை இங்கிருந்து நகர்த்தப் போகிறார்?’ என்பதை ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் கண்காணித்து கொண்டிருந்தனர்.
தனது பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்து, என்ஜினின் ஒரு பகுதியில் செல்லமாக ஒரேயொரு முறை லேசாக தட்டினார். இப்போது என்ஜினை கிளப்பிப் பாருங்கள் என்று கூறியவாறு தனது கருவிகளை எல்லாம் எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தபோதே, உயிர் பெற்ற அந்த கப்பலின் என்ஜின் ஆக்ரோஷமாக உறுமத் தொடங்கியது..
அவரது அபார திறமையைக் கண்டு வியந்துப்போன கப்பல் உரிமையாளர்கள் அவரது கையை பிடித்து குலுக்கியும், கட்டிப்பிடித்து பாராட்டியும் வழியனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து அந்த முதியவரிடம் இருந்து கப்பல் உரிமையாளர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்துடன் கப்பலின் என்ஜினில் இருந்த பழுதை நீக்கியதற்கான பில்லும் இணைக்கப்பட்டிருந்தது.
பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கண்ட கப்பல் உரிமையாளர்கள் கதிகலங்கிப் போய் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். தனது வேலைக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை (இன்றைய இந்திய மதிப்புக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய்) உடனடியாக அளிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அந்த மெக்கானிக் குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்டு கடுப்பாகிப்போன கப்பல் உரிமையாளர்கள், எங்கள் கப்பலை ஓட வைக்க நீங்கள் என்னென்ன ‘ஆணியைப் பிடுங்கினீர்கள்’? என்று தெளிவாக விபரமாக பட்டியலிட்டு தனியாக ஒரு பில்லை அனுப்பி வையுங்கள் என்று அவருக்கு பதில் கடிதம் அனுப்பினர்.
அடுத்த சில நாட்களில் அந்த மெக்கானிக்கிடம் இருந்து வந்த இரண்டாவது கடிதத்தில் அவர்கள் கேட்டிருந்த விபரம் முழுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
"சுத்தியலால் தட்டியதற்கு = 2 டாலர். எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்து தட்டியதற்கு = 9,998 டாலர்கள்" என மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
முதல் கடிதத்தால் வாய் பிளந்த கப்பல் உரிமையாளர்கள், இப்போது இந்த பதிலை கண்டதும் மூச்சுப் பேச்சில்லாமல் வாயடைத்துப் போய் பத்தாயிரம் டாலர்களை அந்த முதியவருக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்து :
விடாமுயற்சிகளும், பெருமுயற்சிகளும் சாதனைகளுக்கு முக்கியமானவைதான், ஆனால், "எந்த இடத்தில் எந்த முயற்சி" பலனளிக்கும் என்பதை அறிந்தும், உணர்ந்தும் செய்யப்படும் முயற்சிகள்தான் பெரும் வெற்றியையும் பலனையும் அளித்துள்ளன.
No comments:
Post a Comment