"அன்னக்கிளி" படத்துக்கான பாடல் ரிக்கார்டிங். ‘டேக்’ சொல்லி ஜானகி ஹம் பண்ணத் தொடங்கிய அடுத்த செகண்டே கரன்ட் கட். ‘ஆரம்பமே அமர்க்களமா இருக்கே...’ என்பதுபோல இசைக் கலைஞர்களுக்குள் ஏளனப் பேச்சு. ராஜா வருத்தமாக அமர்ந்து இருந்தார். ‘`ஏன் இப்ப என்னாச்சு, கரன்ட் வந்த பிறகு எடுத்துக்கலாம். உடனடியா எடுத்து சுடச்சுட சாப்பிடவா போறோம். ரிலாக்ஸா இரு'’ என்றேன்.
கரன்ட் வந்தது. டேக் போனோம். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ பாடலை ஜானகி பெர்ஃபெக்ட் டாகப் பாட, எல்லாரும் கைதட்டினார்கள். அப்போது மோனோ ரிக்கார்டிங் என்பதால், பாடல் பதிவானதும் திரும்ப ஒருமுறை போட்டுக் கேட்போம். அனைத்தும் சரியாக இருந்தால், அதையே ஃபைனலாக வைத்துக்கொள்வோம். அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால், இன்னொரு டேக் போவோம்.
அப்போது அங்கே ரிக்கார்டிஸ்ட்டாக இருந்தவர் மாணிக்கம். அவரின் உதவியாளர் சம்பத். ரிக்கார்ட் செய்ததைக் கேட்போம் என நினைத்து, ‘`ப்ளே பண்ணுங்க சம்பத்'’ என்றார் ராஜா. அவரும் ப்ளே பண்ணினார். ஆனால், ‘ம்ம்ம்...’ என சத்தம் வருகிறதே தவிர, பாடல் வரவில்லை. உதவியாளர் சம்பத், சுவிட்ச் ஆன் செய்ய மறந்துவிட்டார். எதுவுமே ரிக்கார்டு ஆகவில்லை. அவருக்கு பயத்தில் கை, கால் வியர்த்துவிட்டன.
‘`ஸாரி சார், இன்னொரு டேக் போகலாம்'’ என்றார். ‘என்னடா இது, இரண்டாவது முறையும் இப்படி நடக்குதே’ என நினைத்திருப்பார்போல. ராஜாவுக்கு மேலும் வருத்தம். சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன். இப்படி ‘அன்னக்கிளி’ பாடல்கள் பதிவு செய்யப்பட்ட சமயத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள்.
அந்தச் சமயத்தில் தி.நகர் மூசா தெருவில் என் வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர் இயக்குநர் தேவராஜ். எங்க ஊர்க்காரரான அவர், தினமும் காலையில் என் வீட்டுக்கு வந்துவிடுவார். அவருக்கு, காரைக்குடிக்கு அருகில் ஆராவயல். ஆனால், ஊரில் இருக்கும்போது அவர் எனக்கு பழக்கம் இல்லை. சென்னை வந்த பிறகுதான் அறிமுகம். அவர், இயக்குநர் மாதவனின் உதவியாளர். நான் வாய்ப்புக்காக அலைந்த காலத்திலேயே அவரைத் தெரியும். கவிதை மனதுக்காரர். ரசித்து ரசித்து எடுப்பதுதான் அவரின் வொர்க்கிங்ஸ்டைல். ‘நான் படம் பண்ணும்போது நீங்கதான் டைரக்டர்’ என அப்போதே அவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் இயக்குநராக அவரையும், சிவகுமார் சார், சுஜாதா என ஆர்ட்டிஸ்ட்டுகளையும் புக் பண்ணினேன்.
‘அன்னக்கிளி’க்கான லொக்கேஷன் இதுவரை சினிமாவில் யாரும் பார்த்திராத இடமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதுபற்றி சிவகுமார் சாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, ‘நான் பார்த்துட்டு வர்றேன்’ என அவரே லொக்கேஷன் பார்க்கப் போனார்.
ஒரு வாரம் சுற்றிப்பார்த்துவிட்டு தெங்குமரஹாடா என்ற மலைப்பகுதியைப் பற்றிய செய்தியுடன் வந்தார். அது அப்போது கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலம் தாண்டி பெரிய அளவில் அறிந்திடாத இடம். அங்கு மொத்தமே 10 வீடுகள்தான். அதில் ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். மற்றவை அனைத்தும் குடிசைகள். அந்தப் பகுதிக்குப் போவதாக இருந்தாலோ, அங்கு இருந்து வருவதாக இருந்தாலோ, அது காலை ஒன்பது மணிக்குள் நடந்துவிட வேண்டும். காரணம், அங்கு ஓடிவரும் சின்ன நதி. ஆரம்பத்தில் சலசலவென தெளிந்த நீரோடைபோல ஓடிவரும் நதி, நேரம் ஆக ஆக குபுகுபுவெனக் காட்டாறாகப் பொங்கி வழியும். அதனால், 10 மணிக்கு மேல் ஆற்றைக் கடக்க முடியாது.
‘இதுதான் `அன்னக்கிளி' ஸ்பாட்’ என அப்போதே மனதுக்குள் முடிவெடுத்தேன். ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்த பெர்மிஷன் வாங்குவதும், அங்கு படப்பிடிப்பு நடத்துவதும் எளிதாக இல்லை. வன இலாகா, கலெக்டர், தலைமைச் செயலகம் எனப் பல்வேறு இடங்களில் பெர்மிஷன் வாங்கவேண்டி இருந்தது. காரணம், அப்போது மொத்த படத்தையும் அவுட்டோர் போய் எடுப்பது அபூர்வம். கோவை கலெக்டரோ, ‘நல்லா பண்ணுங்க சார். ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், கம்புகளை நட்டு லைட் போடுறது உள்பட எல்லா செலவுகளையும் நீங்களே பண்ணிக்கணும். அடுத்து, ஷூட்டிங் முடிச்சிட்டுப் போகும்போது அது எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டுப் போயிடணும். எதையும் எடுத்துட்டுப் போகக் கூடாது’ என்றார். அந்த இடத்தைத் தவறவிடக் கூடாது என்பதால், எல்லா கண்டிஷன்களுக்கும் ஓ.கே சொன்னேன்.
அங்கு இருந்த வீடுகளில் ஒரு வீட்டைத் தேர்வுசெய்து, அதை ஒட்டியே பாத்ரூம், டாய்லெட் உடன் இரு அறைகள் கட்டினோம். அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 200 ஏக்கர் அரசு நிலங்கள் இருந்தன. அறுவடையான நெல் மூட்டைகளைச் சேகரித்துவைக்க குடோன் ஒன்றும் இருந்தது. நாங்கள் போனது அறுவடை சீஸன் இல்லாத நேரம். தூசி படிந்து காலியாகக்கிடந்த அந்த குடோனை வாடகைக்குப் பிடித்தோம். கட்டிய அந்த வீட்டு அறைகள் ஹீரோ, ஹீரோயினுக்கு. டைரக்டர், கேமராமேன், நான், உதவியாளர்கள், மற்ற நடிகர்கள் உள்பட யூனிட்டில் இருந்த 100 பேருக்கும் அந்த குடோன் என அங்கேயே தங்கினோம். முன்னதாக, மளிகைப் பொருட்கள், சமையற்காரர்கள், சமையல் கொட்டகை... என எங்கள் யூனிட்டால் தெங்குமரஹாடா ஏரியாவே கல்யாண வீடுபோல் காட்சியளித்தது. விறுவிறுவென படத்தை ஒரு மாதத்தில் எடுத்து முடித்தோம். எல்லோரையும் ஒன்றுசேர்த்து படப்பிடிப்பை முடித்தது மிகப் பெரிய விஷயம் என்றால், அசெளகர்யங்களைப் பொறுத்துக்கொண்டு ஒத்துழைத்த படக்குழுவின் உழைப்பு அதைவிட பெரிய விஷயம். ஆனால், படத்தை விற்கத்தான் சிரமப்பட்டோம்.
‘சிம்பிள் லவ் ஸ்டோரி. நல்லாத்தான் எடுத்திருக்கார். ஆனால், எல்லாத்தையும் காட்டுக்குள்ளேயே எடுத்திருக்கார். பாடல்களும் கிராமத்துப் பாடல்களா இருக்கு. அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம்போல இருக்கு. ஓடாது....’ என ஒருத்தருமே வாங்கவில்லை. என் படங்களை ஏற்கெனவே வாங்கி சக்சஸ் பண்ணின விநியோகஸ்தர்கள்கூட வாங்கவில்லை. நான் ஏதோ புகழுக்காக இந்தப் படத்தை எடுத்திருப்பதாக நினைத்து ஒதுங்கிக்கொண்டனர்.
சினிமா இண்டஸ்ட்ரி எப்படி என்றால், படம் விற்றால் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குவார்கள்; விற்கவில்லை என்றால், ஒருவரும் வர மாட்டார்கள். கடைசியில் படத்தை வாங்கிய வர்கள் அனைவரும், புது விநியோகஸ்தர்கள். செலவானதைவிட கொஞ்சம் அதிகம் வைத்து கையைக் கடிக்காத விலைக்கு விற்றேன்.
படம் ரிலீஸ் ஆனது. சென்னையில் நல்ல தியேட்டர்கள் கிடைக்கவே இல்லை. ‘பாட்டு நல்லா போகுது’ என்கிறது ஒரு குரூப். ‘படம் ரொம்ப மெதுவா இருக்கு’ என்றார்கள் சிலர். ‘படம் நல்லாவே இல்லை’ என்றார்கள் வேறு சிலர். இப்படி கலவையான மவுத் டாக். படம் முதல் வாரம் வரை தடுமாறியது. இன்று, பட இடைவேளையிலேயே ஒரு கையில் பாப்கார்னைப் பிடித்தபடி மறுகையை செல்லில் சுழற்றி, ‘மச்சி, படம் மொக்கடா. இந்தப் பக்கம் வந்துடாத!’ என இளைஞர்கள் ட்வீட் தட்டுகிறார்கள். இப்படி பரவும் ட்வீட்களால் அடுத்த ஷோவுக்கு வெறும் 30 பேர்தான் லைனில் நிற்கின்றனர். ஆனால், அன்று ஒரு படம் வெளியூர் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதை அறிய, வெளியூர் தியேட்டர்களுக்கு ட்ரங்க்கால் போட்டால் பெரும்பாலும் லைன் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், ஒரு ஆபீஸ் பையன் எடுத்து, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. மேனேஜர் வெளியே போயிருக்கார்’ என்பான். ஒரு படத்தின் வெளியூர் வெற்றி-தோல்வி விவரங்கள், தயாரிப்பாளருக்குத் தெரியவே நான்கைந்து நாட்கள் ஆகும்.
ஆனால், நான்கைந்து நாட்களுக்குள் `படம் நல்லா இருக்கு' என்ற செய்தி பரவ ஆரம்பித்தது. அதற்குள் சில தியேட்டர்களில், ‘இந்தப் படம் போகாது’ என முடிவுசெய்து படம் பிக்கப் ஆகும் சமயத்தில் அவசரப்பட்டு வேறு படங்களுக்கு அக்ரிமென்ட் போட்டுவிட்டனர். ஆனால், அவர்களின் கணிப்புக்கு மாறாக ‘அன்னக்கிளி’ பிக்கப் ஆக ஆரம்பித்ததும் போட்ட அக்ரிமென்ட்டுக்காக நன்றாக ஓடிக்கொண்டிருந்த படத்தைத் தூக்கிவிட்டு, வேறு படங்களை ஓட்டினர். ஆனால், அதே பகுதிகளில் உள்ள வேறு சில தியேட்டர்களில் `அன்னக்கிளி'யை ரிலீஸ் செய்தார்கள். தினமும் ஓவர் ஃப்ளோ. படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. அது, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான வெற்றி.
`அன்னக்கிளி' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘வில்லேஜ் சப்ஜெக்ட். அதனால ராஜா பிரமாதப்படுத்திட்டார். ஆனால், அவருக்கு கிளாசிக், மாடர்ன் மியூஸிக் வராது’ என்று சிலர் பேசியதாகத் தகவல் வந்தது. `‘அதையும் பண்ணிப்பார்த்துடுவோம் ராஜா’' என்றேன். ‘`பண்ணிடுவோம்ணே'’ என்றார்.
‘கவிக்குயில்’ படம் தொடங்கினோம். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்...’, ‘குயிலே கவிக்குயிலே...’ என ஃபுல் கிளாசிக் பாடல்கள். ‘கவிக்குயில்’ எழுதி முடித்த உடன் ‘ப்ரியா’ தொடங்கினோம். அது மாடர்ன் சப்ஜெக்ட். எல்லா ட்யூன்களும் ரிச், மாடர்ன். ‘அக்கறை சீமை...’, ‘டார்லிங் டார்லிங்...’, ‘என் உயிர் நீதானே..’, ‘ஏ... பாடல் ஒன்று...’, ‘ஸ்ரீராமனின் ஸ்ரீதேவி...’ ‘அன்னக்கிளி’யில் கிராமம் என்றால் ‘கவிக்குயி'லில் கிளாசிக். ‘ப்ரியா’வில் மாடர்ன். இப்படி அவர் தொட்டவை எல்லாம் ஹிட்.
‘அன்னக்கிளி’ தந்த வெற்றியின் நம்பிக்கையில் பல இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தனர். திருலோகசந்தர் ‘பத்ரகாளி’ எடுத்தார். ராஜ்கண்ணு தயாரிக்க, பாரதிராஜா ‘16 வயதினிலே’ எடுத்தார். அவரிடம் இருந்து பாக்யராஜ், மணிவண்ணன் என அவரின் உதவி இயக்குநர்கள் ஆலமர விழுதுகளாகக் கிளை பரப்பினர். ஏவி.எம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியது. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காயத்ரி’... என மூன்று நான்கு வருடங்களுக்குள் 25 படங்கள் வந்தன. அவற்றில் 20 படங்கள் சில்வர் ஜூப்ளி ஹிட். நான்கைந்து படங்கள் மட்டுமே சுமாராக ஓடின. அவையும் 50 நாட்கள். அதற்கு முன்னர் 50 நாட்கள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடிக் கொண்டிருந்த எங்களுக்கு, ‘அன்னக்கிளி’க்குப் பிறகு 50 நாட்கள் ஓடும் படங்கள் சுமார் படங்களாகின. காரணம், இளையராஜா. இப்படி ராஜாவால் பெரிய ஆட்கள் ஆனவர்கள் நிறைய. பெரிய ஆட்கள் எல்லாம் ராஜாவிடம் வந்ததும் நிறைய. இதுவா... அதுவா எனப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இளையராஜா மட்டும் மையப்புள்ளி ஆனார்.
இவ்வளவு படங்கள் ஒருவருக்கு வரும்போது மற்றவர்களாக இருந்தால், மலைத்துப் போயிருப்பார்கள். ஆனால் ராஜா, சளைக்காமல் இசையமைத்தார். ஒரு பக்கம் ரீ-ரிக்கார்டிங்.
இவர் நோட்ஸ் கொடுத்து இசைக்கலைஞர்கள் வாசித்துப்பார்த்து ரெடியாவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ‘வாசிச்சு ரிகர்சல் பண்ணிக்கங்க’ என அரேஞ்சரிடம் சொல்லிவிட்டு, அடுத்த தியேட்டருக்குப் பாடல் பதிவுக்குப் போவார். அங்கு நோட்ஸ் கொடுத்து ஒரு புது ட்யூன் ரிக்கார்டிங்குக்கு ரிகர்சல் பண்ணச் சொல்லிவிட்டு வருவார். இவை இரண்டுக்கும் நடுவில் என் அடுத்த படத்துக்கான பாடல் கம்போஸிங்குக்காக நான் அவரின் அறையில் காத்திருப்பேன். அங்கு வருபவர், ‘இதுதான் நோட்ஸ். எஸ்.பி.பி வந்ததும் சொல்லிக்கொடுத்துட்டு இருங்க. வந்துடுறேன்’ என்று தன் உதவியாளரிடம் சொல்லிவிட்டு, முதலில் ரிகர்சல் பண்ணச் சொன்ன ரீ-ரிக்கார்டிங்குக்குப் போவார். இப்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் வேலைகள், நள்ளிரவு வரை நீளும். இவ்வளவு வேலைகளிலும் கொஞ்சம்கூட சளைக்காமல் யாரிடமும் முகத்தைக் காட்டாமல் தொடர்ந்து சிரித்த முகத்துடன் இசையைத் தந்துகொண்டே இருந்தார்.
இவர் நோட்ஸ் கொடுத்து இசைக்கலைஞர்கள் வாசித்துப்பார்த்து ரெடியாவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். ‘வாசிச்சு ரிகர்சல் பண்ணிக்கங்க’ என அரேஞ்சரிடம் சொல்லிவிட்டு, அடுத்த தியேட்டருக்குப் பாடல் பதிவுக்குப் போவார். அங்கு நோட்ஸ் கொடுத்து ஒரு புது ட்யூன் ரிக்கார்டிங்குக்கு ரிகர்சல் பண்ணச் சொல்லிவிட்டு வருவார். இவை இரண்டுக்கும் நடுவில் என் அடுத்த படத்துக்கான பாடல் கம்போஸிங்குக்காக நான் அவரின் அறையில் காத்திருப்பேன். அங்கு வருபவர், ‘இதுதான் நோட்ஸ். எஸ்.பி.பி வந்ததும் சொல்லிக்கொடுத்துட்டு இருங்க. வந்துடுறேன்’ என்று தன் உதவியாளரிடம் சொல்லிவிட்டு, முதலில் ரிகர்சல் பண்ணச் சொன்ன ரீ-ரிக்கார்டிங்குக்குப் போவார். இப்படி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் வேலைகள், நள்ளிரவு வரை நீளும். இவ்வளவு வேலைகளிலும் கொஞ்சம்கூட சளைக்காமல் யாரிடமும் முகத்தைக் காட்டாமல் தொடர்ந்து சிரித்த முகத்துடன் இசையைத் தந்துகொண்டே இருந்தார்.
‘அன்னக்கிளி’யால் நான் நினைத்த இரண்டு விஷயங்கள் நடந்தன. `தமிழ்த் திரையுலகம் இந்தி சினிமாவுக்கு சமமாக வரவேண்டும்' என நினைத்தேன். `அன்னக்கிளி'க்குப் பிறகு இந்திப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தது. இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ் ரசிகர்கள், மீண்டும் தமிழ் சினிமாவை ரசிக்க ஆரம்பித்தனர். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து ஒப்புக்கொண்ட அனைத்துப் படப் பாடல்களையும் ஹிட்டாக்கிய பாலிவுட் இசை இரட்டையர்கள் ஷங்கர்-ஜெய்கிஷன் போல ஓர் இசையமைப்பாளர் வரவேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறியது. ஆனால், அந்த ஆசை மட்டும்தான் என்னுடையது; மேலே ஏறிவந்த திறமை ராஜாவுடையது.
‘அன்னக்கிளி’க்காக அன்று கொண்டாடிய வெள்ளிவிழா நாட்கள், இப்போது நினைவுக்கு வருகிறது. அப்போது `அன்னக்கிளி' வெள்ளி விழாவை பல ஊர்களில் கொண்டாடினர். தியேட்டர், மண்டபங்கள் தாங்காது என, பல ஊர்களில் பெரிய பெரிய மைதானங்களில் விழாக்களை நடத்தினர். `‘மதுரையில தமுக்கம் மைதானத்துல வெச்சுப்போம்’' என்றார் மதுரை, ராமநாதபுரம் ஏரியா விநியோக உரிமையை வாங்கிய ஷா நவாஸ்.
``அதெல்லாம் கட்சிகளோட மாநாடுகள் பிரமாண்டமா நடக்குற இடம். அங்கே கூட்டம் வருமாய்யா?'’ என்று தயங்கினேன்.
`‘கண்டிப்பா வரும்ணே’' என்று விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். காரணம், ஒரு லட்சத்துக்குப் படத்தை வாங்கிய அவருக்கு, 15 லட்சத்துக்கும் அதிகமான லாபம். கூட்டம் கும்மியது. வெளியூர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு விழாவுக்கு வந்தனர். விழா தொடங்கியது. ராஜா பாட ஆரம்பித்தார், மழையும் பெய்ய ஆரம்பித்தது. ஆனால், கூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு பாட்டையும் ‘மறுபடியும் பாடுங்க ராசா... பாடுங்க ராசா’ எனக் கூட்டம் ஆர்ப்பரித்தது. மழையில் நனைந்த படி இளையராஜா பாடிக்கொண்டே இருந்தார்.
`அன்னக்கிளி'க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது.
- பஞ்சு அருணாச்சலம்
No comments:
Post a Comment