Friday, December 14, 2018

உலகமே வியந்து பார்த்த சம்பவம் இது*

*இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடத்தக்க வெற்றி 1971ல் இந்தியா கிழக்கு பாகிஸ்தானைத் துண்டித்து இன்றைய "பங்களாதேஷ் உதயமான வங்கப்போர்*
*அதில் குறிப்பிடத்தக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது*
அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது.
*இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே அமெரிக்க பழக்கம், அது மிக சரியாக கணித்தது இந்தியாவிடம் கப்பல் உண்டே தவிர நீர்மூழ்கி கப்பல் இல்லை என கண்டுகொண்டது, அவ்வளவுதான் ஒரு பெரும் நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்கள்.*
1965 யுத்தத்திலே அது பாகிஸ்தானிடம் இருந்தது, அப்போதைய யுத்தம் நிலத்தில் என்றாலும் அது இந்தியாவின் பிரம்மபுத்திரா கப்பலை உடைத்ததாகவும், பல இந்திய கப்பல்களை மூழ்கடித்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்து கமாண்டருக்கு மெடல் எல்லாம் கொடுத்தது.
அப்படி சம்பவம் நடக்கவே இல்லை எனினும் எங்களிடம் பலம் வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் உண்டு என இந்தியாவிற்கு மறைமுக மிரட்டல் விடுத்தது பாகிஸ்தான்.
அந்த செய்தியினை இந்திய தளபதி பிரம்மபுத்திரா கப்பலில் இருந்தே படித்துகொண்டிருந்தார் என்பது வேறுவிஷயம். பாகிஸ்தானியர் அப்படித்தான் பின்லேடன் இங்கு இல்லை, தாவூத் இல்லை என சொல்லாத பொய் இல்லை.
1965ல் பேட்டர்ன் டாங்க் எனப்படும் நவீன டாங்கிகளை அமெரிக்கா கொடுத்தும் பாகிஸ்தான் மரண அடி வாங்கி இருந்தது, அது தன் அவமானமாக அமெரிக்கா கருதிற்று, விளைவு இம்முறை பல நவீன வசதிகளை மேம்படுத்தி அந்த நீர்மூழ்கி கப்பலை களத்தில் இறக்கிற்று.
*நவீனம் என்றால் டார்பிடோ எனும் நீர்மூழ்கி ஏவுகனைகளை ஏவும் வசதி, கடல் கன்னிவெடிகளை விதைக்கும் வசதி, சுருக்கமாக சொன்னால் கடலின் அடியிருந்தே இந்தியாவின் எந்த நகரத்தையும், கப்பலையும் அழிக்கும் எமன் அது.*
*அந்த கப்பல் அப்படித்தான் இருந்தது, கடலை நாம் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே திடீரென ஏவுகனை எழும்பி நம் நகர் மீது விழுந்தால் எப்படி இருக்கும்? அந்த நீர்மூழ்கி அந்த ரகம் தான்.*
*அதற்கு காஜி அல்லது கோஜி என பெயரிட்டு மகிழ்ந்தது பாகிஸ்தான். அது என்னமோ தெரியவில்லை இந்திய எதிர்ப்பு கருவிகளுக்கு எல்லாம் கோரி,கஸ்னி என அக்கால ஆப்கன் மன்னர்கள் பெயரினை இடுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.*
1971 யுத்தம் தொடங்கும் முன்னமே ஐ.என்.எஸ் விக்ராந்தை அழிக்க உத்தரவிடபட்டது, எனினும் யுத்தம் தொடங்கி இனி அதனை அழித்தே ஆகவேண்டும் என வெறியோடு கிளம்பிற்று அது.
*இந்தியா வங்க எல்லையில் போரில் இறங்கினாலும் அதன் பலம் கடற்படை, காஜி அவர்களின் தூக்கத்தை கெடுத்தது, அதனை அழிக்காமல் இந்திய வெற்றி சாத்தியமில்லை என்பது ராணுவ பாடம். காரணம் திடீரென நடுக்கடலில் இருந்து வரும் ஏவுகனைகளை எப்படி தடுப்பது? கப்பலை எப்படி அழிப்பது?*
*கடல்மேல் மிதக்கும் விக்ராந்தினை, கடலுக்குள் அலையும் காஜியிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி என்று மானெக்ஷாவும், கிருஷ்ணனும் சிந்தித்தார்கள்.*
மிக தந்திரமான திட்டமது, அதில்தான் பாகிஸ்தானின் ஹாஜி சிக்கியது.
*இஸ்ரேலின் புகழ்பெற்ற 6 நாள் போருக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த இந்தியாவின் 13 நாள் போர்.*
*இன்றளவும் உலக ராணுவ திட்டங்களில் பாராட்டதக்கதும், மானெக் ஷா மங்கா புகழ் அடைவதற்கும் அதுதான் காரணம். வங்கதேசம் சுதந்திரமடையவும் அதுதான் காரணம்.*
*ஒரு பாகிஸ்தானையே சமாளிக்க பெரும் பாடென்றால் இரு பாகிஸ்தானை சமாளிக்க என்னபாடு பட்டிருக்கவேண்டும்?*
யுத்தம் தீவிரமாக காஜி கிளம்பிற்று, கப்பலில் 100 ராணுவத்தார், 50 ஏவுகனைகள், மிக ஆபத்தான கடல்கண்னிவெடிகள் ஏராளம்.
கடல்கண்ணி வெடிகள் என்றால் இப்படி சொல்லலாம்,
தமிழக கட்சி தொண்டர்கள் வீட்டில் தூங்குவார்கள், எந்த பொதுபிரச்சினை ஆனாலும் ஏன் ஊரே வெள்ளத்தில் மூழ்கினாலும் வரமாட்டார்கள்.
ஆனால் அந்த கட்சியின் தலமைக்கு ஏதும் சிக்கல் வந்தால் ஓடிவந்து கொந்தளிப்பார்கள்,அடித்து நொறுக்குவார்கள். கடல்கண்ணிவெடியும் அப்படித்தான் சாதுவாக மிதக்கும் ஆனால் அருகில் கப்பல்வந்தால் ஓடிசென்று வெடிக்கும்.
*காஜியினை சிக்கவைக்க இந்திய திட்டம் செயல்படுத்தபட்டது, பாகிஸ்தானோ இந்தியாவின் பெருமை ஐ.என்.எஸ் விக்ராந்தை அழித்த செய்தியினை உலகிற்கு சொல்ல தயாராக இருந்தது.*
இந்திய கடற்படை மிக பரபரப்பாகவும், கொஞ்சம் அச்சத்துடனம் செயல்பட்ட நேரமிது, துப்பாக்கி படத்தின் வில்லனும் ஹீரோவும் ஒருவரை ஒருவர் தேடிகொண்டிருப்பது போல, இரண்டும் தேடிகொண்டிருந்தன,
ஆனால் இந்தியா முந்திகொள்ளும் பெரும் கட்டாயம் இருந்தது, காரணம் காஜி அப்படியான பெரும் நாசகாரி. அதன் கண்ணில் பட்டுவிட்டால் தப்புவது சுலபமல்ல.
இந்தியாவின் விக்ராந்த் ஏதும் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்தாலும், யுத்த தர்மத்தை மீறி அந்த ஊரே அழிந்தாலும் (அதனால் அழிக்கமுடியும்) விக்ராந்தை விடகூடாது என்ற வெறியோடு காஜி வங்ககடல் பக்கம் வந்தது.
*காஜி விக்ராந்தை தேடிகொண்டிருக்க, இந்திய படைக்கோ அவகாசமில்லை, காரணம் அது நீர்மூழ்கி. பரந்த கடலில் எங்கு சென்று தேடுவது?*
*அதனால் தளபதி கிருஷ்ணன் அட்டகாசமாக திட்டமிட்டார்.*
*தளபதி கிருஷணனின் திட்டம் என்னவென்றால், எங்கோ சுற்றிகொண்டிருக்கும் காஜி நீர்மூழ்கியினை குறிப்பிட்ட இடத்திற்கு தந்திரமாக வரவைப்பது, வந்ததும் போட்டு தள்ளுவது.*
அதற்காக கோவளம் பீச், கோல்ட்ன் பீச் கடற்கரைகளை சொல்லமுடியாது,
அது மிக குறிப்பிடபட்ட இடமாக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் ஹாஜி காலத்திற்கும் சிக்காது.
அவர்கள் குறிப்பிட்ட இடம் விசாகபட்டினம், இயற்கை துறைமுகம். ஆழமான கடல். அப்படியே அங்கு பரபரப்பினை கிளப்பிவிட்டார்கள், பரபரப்பு என்றால் 500 மூட்டை அரிசி, 200 கிலோ ஆடு, 2000 லிட்டர் டீசல் எல்லாம் 2 நாளுக்குள் வேண்டும் மிக அவசரம், என பெரும் கொள்முதல் செய்வதாக இந்திய உளவுதுறையினர் சத்தம்போட்டு வியாபாரம் பேசினர்.
(ரகசியமாக மீணவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்தது கடற்படை, விநோத நீர்குமிழி கண்டாலோ, அசாதாரண அலைகளை கண்டாலோ உடனே தகவல் தெரிவிக்க சொல்லி இருந்தார்கள்.)
மிக மிக பரபரப்பான காலங்கள் அவை
விசாகபட்டினததில் இருந்த பாகிஸ்தான் உளவாளிகள் இதனை வழக்கம்போல பாகிஸ்தானுக்கு அனுப்பினர், இந்திய உளவுதுறையினர் மிக அவசரம் என துரிதபடுத்தியதையும், பெரும் பொருள் வாங்குவதையும் மறக்காமல் அனுப்பினர், அவ்வளவுதான் துள்ளிகுதித்து பாகிஸ்தான் கடற்படை, சிக்கியது விக்ராந்த் என மகிழ்ந்தார்கள்.
(இதனைத்தான் கமலஹாசனும் விஸ்வரூபத்தில் சொல்லி இருந்தார், பாகிஸ்தான் உளவாளிகள் இப்பொழுதும் எங்கும் இருக்கலாம், இதனை படித்துகொண்டும் இருக்கலாம்
அதே நேரம் இந்திய உளவாளிகளும் பாகிஸ்தானில் டீ குடித்துகொண்டிருக்கலாம், இவை எல்லாம் யுத்த தர்மம், ராணுவ அறம்)
இலங்கை அருகே சுற்றிகொண்டிருந்த கொடூர ஹாஜிக்கு தகவல் அனுப்பினார்கள், பட்சி விசாகபட்டினத்தில் இருக்கின்றது இன்றே சென்று உடையுங்கள், மறக்காமல் பின்குறிப்பினையும் எழுதினார்கள்,
அதாவது ஏதும் சண்டை நடந்தால் அந்த நகரமே அழிந்தாலும் பரவாயில்லை, கப்பல் தப்ப கூடாது.
உற்சாகமாய் வந்தது காஜி , வந்ததும் சும்மா இருந்திருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் டாக்கா (கிழக்கு பாகிஸ்தான்) சில தகவல்களை அனுப்பியது, அதனை வழிமறித்து படித்து நிலமையினை புரிந்துகொண்டது இந்தியபடை.
*அதாவது நாங்கள் விசாகபட்டினத்தில் இருக்கின்றோம், இந்த விக்ராந்தை கடலுக்குள் மூழ்கடித்துவிட்டு, அது மூழ்குவதை ஆசைதீர பார்த்துவிட்டு சிட்டகாங்( வங்க துறைமுகம்) வந்து மேல் எழுவோம், எம்மை வரவேற்க தயாராகுங்கள் என்ற செய்தி அது.*
*அதோடு இந்திய தரப்பு வேண்டுமென்றே ரகசிய தகவல்களை, பாகிஸ்தான் படிக்குமாறு அனுப்பி குழப்பியது அல்லது நம்பவைத்தது. அதாவது கப்பலின் விமானங்களின் ஒன்று பழுது, பாதுகாப்பு கப்பல்களில் பிரச்சினை என ஏதோதோ அனுப்பி விக்ராந்த அங்கேதான் இருக்கின்றது என பிம்பத்தை உருவாக்கியது.*
*அது டிசம்பர் 3 நள்ளிரவு. விசாகபட்டினத்தை அடைந்தது ஹாஜி. இடம், ஆயுதம் எல்லாம் உறுதி செய்யபட்டபின் மெதுவாக வெளிவந்து கப்பலை குறிபார்க்க தேடியது, அதன் கண்களில்பட்டது ராஜ்புத் எனப்படும் இன்னொரு கப்பல்.*
*அதனை கண்டதும் நீருக்குள் படக்கென்று மூழ்கியது ஹாஜி எனினும், ராஜ்புத் கப்பல் அந்த அசாதாரண கடல் அலைகளை இனங்கண்டது, ஆனாலும் அது ஹாஜி என தெரியாது.*
*பொதுவாக பெரும் விமானம் தாங்கி கப்பல்கள் பல கப்பல்கள் துணையோடுதான் பயணிக்கும், அப்படி ராஜ்புத் கப்பலை விகராந்தின் துணைகப்பலாக எண்ணி விட்டுவிட்டது ஹாஜி, அதன் முதல் தவறு இது. தவறு என சொல்லமுடியாது. புலிவேட்டைக்கு செல்லும் பொழுது எலியினை கொல்வது யார்? அப்படித்தான் அது புலியினை தேடியது.*
*ஆனால் ராஜ்புத் கப்பல் கேப்டனுக்கு பொறி தட்டியது, எதற்கும் இருக்கட்டும் என கடல் கன்னிவெடிகளை வீசிவிட்டு அவர் கப்பலை கிளப்பினார். அடுத்த 30ம் நிமிடத்தில் முடிந்தது பாகிஸ்தான் கனவு.*
*பெரும் வெடிச்சத்தம், விசாகபட்டின மக்கள் பூகம்பத்தை உணர்ந்தனர். ஜன்னல் கண்ணாடிகள் கூட உடைந்தன, பெரும் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்தாலும் படு ஜாக்கிரதையான இந்திய ராணுவம் முதலில் அதனை நம்பவில்லை. காரணம் ஹாஜியின் திசை திருப்பும் விளையாட்டாக இருக்கலாம், என்ன சத்தம் என சென்றால் தொலைத்துவிடுவார்கள்.*
*நிதானித்து டிசம்பர் 5ம் தேதி, இந்திய கடற்படை கடலடி வீரர்கள் சென்று பார்த்தபொழுது பிரமாண்ட ஹாஜி முன்பக்கம் வெடித்து மூழ்கி கிடப்பதையும், 95 பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களையும் கண்டார்கள், உறுதிபடுத்தினார்கள் ஹாஜி தொலைந்தது.*
*இந்த களபேரங்கள் நடக்கும்பொழுது அந்தமானுக்கு அப்பக்கம் பத்திரமாக நின்றுகொண்டிருந்தது ஐ.என்.எஸ் விக்ராந்த். அதாவது 10 நாளைக்கு முன்பே அதனை அந்தமானுக்கு கடத்திவிட்டு விசாகபட்டிணத்தில் கண்ணாமூச்சி ஆடியது இந்திய கடற்படை.*
*பின் பெரும் ஆபத்து நீங்கிய இந்திய கடற்படை தூள் பறத்தியது. ஐ.என்.எஸ் விக்ராந்தை மீறி எந்த பாகிஸ்தானிய கப்பலும் வங்க கடலுக்குள் வரமுடியவில்லை. அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை ரூட்களை முடக்கியது விக்ராந்த்.*
*போதா குறைக்கு பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை அகதளம் செய்தது இந்தியபடை, ஹாஜி மூழ்கடிக்கபட்டபின் இந்திய கடற்படை எதற்கும் காத்திருக்கவில்லை*
*தன் நீர்மூழ்கி இந்தியாவால் மூழ்கடிக்கபட்டதை ஜீரணிக்கமுடியாத அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது, பதிலுக்கு சோவியத் யூனியன் மிரட்ட, பின்வாங்கிய அமெரிக்கா பாகிஸ்தானை முறைத்துவிட்டு அமைதியானது.*
*பலமிழந்த பாகிஸ்தானிய படைகள், சப்ளை இல்லாததால் சோர்ந்தன, கிட்டதட்ட 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்து காட்டினார் மானெக்க்ஷா, அதோடு பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்தார்.*
*இவை எல்லாம் இந்திய கடற்படையின் பெரும் சாகசங்கள். இந்திய ராணுவத்தின் தந்திரமான நகர்வுக்கு கிடைத்த வெற்றி, உலகமே வியந்து பார்த்த சம்பவம் இது*
*இந்திராவும், மானெக்ஷாவும் உலக பிரபலம் ஆனார்கள். மானெக்ஷா மங்கா புகழ்பெற்றார், அவரை அரசியலுக்கு வர எல்லாம் அழைத்தார்கள், அவர் பெயர் அப்படி மின்னியது*
*ஆனால் அவர் வரவில்லை மாறாக ஊட்டிபக்கம் வந்து ஓய்வெடுத்தார்*
*இந்திய வரலாற்றில் இந்த டிசம்பர் 4 மறக்கமுடியாமல் ஆனது இந்த சாகசத்தில்தான், ஒவ்வொரு இந்தியனும் மறக்காமல் படிக்க வேண்டிய விஷயங்கள் இவை.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...