Thursday, July 1, 2021

தலைவர், செயல் தலைவர் பதவி : தமிழக காங்.கில் 50 பேர் மோதல்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் செயல் தலைவர்கள் பதவிக்கு, அக்கட்சியில் 50க்கும் மேற்பட்டோர் மோதுகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டன. அதனால் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என, கோஷ்டி தலைவர்கள் டில்லிக்கு படையெடுத்து வருகின்றனர்.

தலைவர், செயல் தலைவர், பதவி , காங்.,50 பேர் மோதல்


சிறுபான்மை சமூகத்தினரின் 20 சதவீத ஓட்டுகளை, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தக்க வைக்க வேண்டும். அதற்கு தி.மு.க.,வுடன் இணக்கமாக செயல்பட்டு, உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், வாரியத் தலைவர் பதவிகளில், கணிசமான அளவில் காங்கிரசாரை நியமிக்க வேண்டும்.இதற்கெல்லாம், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தான் சரியானவர் என்பதால், அவரை தலைவராக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் ராகுலிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


ஓட்டு வங்கி



ஒடிசா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளருமான டாக்டர் செல்லக்குமார் எம்.பி., மற்றும் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி.,யும், தலைவர் பதவிக்கு காய் நகர்த்துகின்றனர்.சட்டசபை தேர்தலில், கிறிஸ்துவ நாடார் சமுதாய ஓட்டுகள் மட்டும் தான் காங்கிரசுக்கு கிடைத்து உள்ளன. காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியான ஹிந்து நாடார் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு போய்விட்டன. அதனால் ஹிந்து நாடாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், அகில இந்திய விவசாய அணி துணை தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான ராமசுப்புவும், தலைவர் பதவி கேட்டுள்ளார்.இளையபெருமாளுக்கு பின், தலித் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தரவில்லை எனக் கூறி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதனும், வன்னியர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில், செயல் தலைவரான டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.,யும் டில்லியில் காய் நகர்த்தி வருகின்றனர்.


வலியுறுத்தல்



சட்டசபை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமசாமி அல்லது தமிழக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்க வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தனை கோஷ்டிகளுக்கு போட்டியாக, மகளிருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, ஜோதிமணி எம்.பி., யும், விஜயதரணி எம்.எல்.ஏ., வும் கேட்டுள்ளனர்.ஓரிரு நாட்களில் டில்லி செல்கிற தினேஷ் குண்டுராவ், அங்கு ராகுல், சோனியாவை சந்தித்து, தமிழக காங்கிரஸ் விவகாரங்களை பேச உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -


செயல் தலைவருக்கு வாரிசுகள் போட்டி



தமிழக காங்கிரசுக்கு நியமிக்கப்பட்ட ஐந்து செயல் தலைவர்களில், வசந்தகுமார் மரணம் அடைந்து விட்டார். ஜெயகுமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் எம்.பி.,க்களாகி விட்டனர். மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விட்டனர்.அதனால் இந்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐந்து பதவிகளை கைப்பற்றுவதில், வாரிசுகள் மத்தியில் போட்டி உருவாகி உள்ளது. அதாவது, தன் தந்தை வசந்தகுமார் பதவி தனக்கு வேண்டும் என, விஜய்வசந்த் எம்.பி., எதிர்பார்க்கிறார்.

வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராமசுகந்தன், அன்பரசு மகன் அருள் அன்பரசு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் ஹசீனாசையது, மாநில நிர்வாகி சொர்ணா சேதுராமன், அமீர்கான் ஆகியோர் பெயர்களும் டில்லியில் பரிசீலிக்கப்படுகின்றன.மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் டி.ஏ.நவீன், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் ஆகியோரும், செயல் தலைவர் பதவியை பெற விரும்புகின்றனர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...