ஏனென்றால் இஸ்மாயில் அவர்கள் காஞ்சி மடத்துக்கு வந்தவுடனே அவரை மகிழ்வோடு வரவேற்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார் மகாபெரியவர்.
பேசினார்கள் பேசினார்கள்
இருவரும் நீண்ட நேரம்
பேசிக் கொண்டிருந்தார்கள்.
இஸ்மாயில் பற்றி ஒரு சில வார்த்தைகள்.
அவர் ஒரு முன்னாள் நீதிபதி.
பெயர்தான் இஸ்மாயில். ஆனால் இவருடைய ஆர்வமெல்லாம்
இந்துமத இதிகாசங்களின் மீதுதான் இருந்தது.
கம்ப ராமாயணத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தவர் இந்த இஸ்மாயில். சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கி, அதன் ஆரம்ப நாள் முதல், தன் அந்திமக் காலம்வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்.
'கம்பன் கண்ட சமரசம்', 'கம்பன் கண்ட ராமன்' இன்னும் பல இலக்கிய நூல்களை எழுதியவர்.
அவரோடுதான் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார் மகாபெரியவர்.
இலக்கியம், கம்பராமாயணம் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.
குறிப்பாக நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற புத்தகத்தைப் பற்றி !
அந்தப் புத்தகத்தில் 'வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது சரிதான்' என திட்டவட்டமாக தீர்ப்பளித்து எழுதி இருந்தாராம் நீதிபதி இஸ்மாயில்.
அதைக் குறிப்பிட்டு காஞ்சிப் பெரியவர், "ஒரு தலைமை நீதிபதியான நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள்"என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்.
ஒருவழியாக பேச்சுவார்த்தை முடியும் நேரம் நெருங்கியது.
இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்.
நீதிபதி இஸ்மாயில் விடை பெற்றுப் புறப்படும்போது காஞ்சிப் பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் ?
இந்துக்கள் என்றால் விபூதி குங்குமம் கொடுப்பார். ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும் ?
விடை பெற எழுந்து விட்டார் இஸ்மாயில்.
அனைவரும் ஆவலோடு உற்று நோக்கிக் கொண்டிருக்க...
காஞ்சிப் பெரியவர் சற்றே குனிந்து தன் முன் இருந்த ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்தார். அதை இஸ்மாயிலிடம் கொடுத்து விட்டு, “இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது. நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம் இந்த சந்தனம். உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது. எங்கள் கோவில்களிலும் சந்தனம் இருக்கிறது. இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள்” என்று வழியனுப்பி வைக்க, சந்தனத்தோடும் சந்தோஷத்தோடும் புறப்பட்டுச் சென்றாராம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்.
எப்போதோ நடந்த இந்த சந்திப்பு பற்றி இப்போது படிக்கும்போதும் நெகிழ்வாகவும்,
மனநிறைவாகவும்
இருக்கிறது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் ...
இந்த இருவரின் நட்பான உரையாடலுக்கு பின்னே,
ஒரு மகத்தான ரகசியம் மறைந்திருக்கிறது.
இந்த சந்திப்பின்போது,
காஞ்சி மகாபெரியவர் தன்னுடைய மடாதிபதி என்ற எண்ணத்தை துறந்து விட்டு ஒரு சாதாரண சந்திரசேகரன்
சுவாமிநாதன் ஆக மாறிவிட்டார்.
நீதிபதி இஸ்மாயிலும் தன்னுடைய கௌரவம், அந்தஸ்து அனைத்தையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு சாதாரண இஸ்மாயில் ஆக மாறிவிட்டார்.
அதனால்தான் அந்த சந்திப்பு இயல்பாக இருந்தது.
அவர்கள் நட்பு
இனிமையாக
இருந்தது.துறவிகள் மட்டுமல்ல. நாம் அனைவருமே நமது ஜாதி மத வேறுபாடுகளை கொஞ்சம் துறந்தாலே போதும்.
நிறைவான ஒற்றுமை நமக்குள் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.
No comments:
Post a Comment