'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நிராகரித்தார். மறுபரிசீலனை செய்யும்படி, தமிழக அரசுக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; ஒப்புதல் கிடைக்கவில்லை.அதேநேரம், ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தது. இதன்படி, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
தி.மு.க., வாக்குறுதி
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள், தேர்தல் பிரசாரத்தின்போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என, வாக்குறுதி அளித்தனர்.தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; ஸ்டாலின் முதல்வரானார். அவர், கடந்த ஜூன் 17ல் டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மனு அளித்தார்.
சட்ட மசோதா
அதன்பின், செப்., 13ல் தமிழக சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்காக தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், எந்த முடிவும் எடுக்கவில்லை.அடுத்து செப்., 18ல் புதிய கவர்னராக ரவி பொறுப்பேற்றார். நவ., 27ல் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு விரைவாக அனுப்பும்படி, முதல்வர் கோரிக்கை வைத்ததாக, அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழை பாதிப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடந்ததாக கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது, அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான உரசலை வெளிப்படுத்தியது.
அமித் ஷாவுடன் சந்திப்பு
கடந்த மாதம் தமிழக எம்.பி.,க்கள், ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஜனாதிபதியை சந்திக்க முடியவில்லை.அதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை, ஜனாதிபதி மாளிகையில் அளித்தனர். அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தனர்.
தலைவர்கள் கூட்டம்
கடந்த மாதம், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், சட்டசபையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். கூட்டத்தில், நீட்
தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
வாழ்த்தால் சர்ச்சை
கடந்த மாதம், குடியரசு தின விழாவையொட்டி, கவர்னர் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில், 'நீட் தேர்வுக்கு முன் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. 'அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டால், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும், அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசரத் தேவை' எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின. அப்போதே, கவர்னர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்பது தெரிந்தது.
நிராகரிப்பு
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை, மறு பரிசீலனை செய்யும்படி, கவர்னர் ஆர்.என்.ரவி, சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இது தொடர்பாக, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:இளங்கலை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவையும், இதற்கு அடிப்படையாக, தமிழக அரசு அமைத்த உயர்நிலைக் குழு அறிக்கையையும், கவர்னர் விரிவாக ஆய்வு செய்தார்.மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வுக்கு முந்தைய நிலையை, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆய்வு செய்தார்.
அதன் அடிப்படையில் இந்த நீட் விலக்கு மசோதா, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.எனவே, இந்த மசோதாவை, தமிழக சபாநாயகருக்கு, சட்டசபை மறு பரிசீலனைக்காக, பிப்.,1ல் திருப்பி அனுப்பி உள்ளார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி அமைப்பின் வழக்கில், இப்பொருள் குறித்து, குறிப்பாக சமூக நீதி நோக்கத்தில் விரிவாக ஆராய்ந்து, ஏழை மாணவர்கள் மீதான பொருளாதார சுரண்டலை தடுக்கக்கூடியது நீட் என்றும், சமூக நீதியை முன்னெடுத்து செல்ல, நீட் தேர்வு தேவை என்றும் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரை திரும்ப பெற கோரி தமிழக எம்.பி.,க்கள் கடும் அமளி
'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தமிழக அரசின் மசோதவை, ஜனாதிபதி பரிந்துரைக்கு அனுப்பாமல், கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய விவகாரம், பார்லிமென்டில் எதிரொலித்தது.லோக்சபாவில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு பேசிவிட்ட நிலையில், தமிழக எம்.பி.,க்கள், வழக்கமான அலுவல்களில் இருந்தனர்.
இந்நிலையில், நீட் மசோதா கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட தகவல், சென்னையில் இருந்து வந்த மறுநிமிடமே, தமிழக எம்.பி.,க்கள் பரபரப்பாகினர். 'தமிழக கவர்னரை திரும்பப் பெறு' என்பது போன்ற கோஷங்களை சபையில் எழுப்பினர். சபையை நடத்திக் கொண்டிருந்த மூத்த எம்.பி.,யான ரமாதேவி, எம்.பி.,க்களை அமைதியாக அமரும்படி கேட்டபடி இருந்தார். திரிணமுல் காங்., - எம்.பி., மொய்த்ரா பேச எழுந்து நின்றபடியே இருந்தார்.ஆனாலும், சபைக்குள் யாரும் பேசவே முடியாத அளவுக்கு, தமிழக எம்.பி.,க்கள் உரத்த குரலில் கோஷங்கள் போட்டனர். பின் வெளிநடப்பு செய்தனர். இதனால் லோக்சபாவில் சில
நிமிடங்களுக்கு பரபரப்பு நிலவியது.
நாளை அனைத்து கட்சி கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை, கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான கோப்பு, பிப்.,1ல் கையெழுத்திடப்பட்டு, 2ம் தேதி தமிழக அரசால் பெறப்பட்டது.உடனடியாக கவர்னரின் கடிதத்தை சபாநாயகருக்கு, அரசு அனுப்பி வைத்தது.'நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை' என, கவர்னர் தெரிவித்துள்ள கருத்துக்கள், தமிழக மக்களால் ஏற்கத்தக்கது அல்ல.
கவர்னர் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆராய்ந்து, நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, இந்த சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றுவதற்கான, அனைத்து முயற்சிகளையும் அரசு முன்னெடுக்கும்.
இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்ய, நாளை காலை 11:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, சட்டசபை கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு கடிதம் எழுதியுள்ளார். அதே நேரம், சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை' என தெரிவித்துள்ளார்.நீட் விலக்கு சட்ட முன்வடிவை, கவர்னர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நேற்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment