வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமான, 160 ஏக்கர் நிலத்துக்கும், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறையினரின் அதிரடி நடவடிக்கையால், அமைச்சருக்கு சொந்தமான, 6.50 கோடிரூபாய் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன், 70. தி.மு.க.,வில் மாவட்ட செயலராகவும், திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வாகவும், மீன் வளத் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.இவர், அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்தவர். அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும், குறுகிய காலத்தில், மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் என, அசுர வேகத்தில் உச்சத்தை அடைந்தார்.
ஆதரவு வட்டம்
அப்போது இவருக்கும், துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலராக இருந்த, மறைந்த பெரியசாமிக்கும் அறவே ஆகாது. அ.தி.மு.க.,வில் சறுக்கல் ஏற்பட்டதும், யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அதே பெரியசாமியின் ஆதரவில், அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.,வில் ஐக்கியம் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்; 2009ல் தி.மு.க.,வில் இணைந்தார்.
பெரியசாமியின் மறைவுக்கு பின், துாத்துக்குடி மாவட்டத்தில் அனிதாவின் கை ஓங்கியது. அவருக்கென தி.மு.க.,வில் ஆதரவு வட்டம் உருவானது. இதையடுத்து மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஒரு பகுதிக்கு இவரை மாவட்ட செயலராக்கினர்.தற்போது, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில், மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். எனினும், பெரியசாமி மகளும், மற்றொரு மாவட்ட செயலருமான அமைச்சர் கீதா ஜீவனுக்கும், இவருக்கும் மோதல் நீடித்து வருவதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஜெயலலிதா ஆட்சியில், 2001 -- 2006ல், கால்நடை மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது, இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், 2006ல், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஏழு பேர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.
சம்மன்
அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்தனர். அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த பண பரிமாற்றம் வாயிலாக, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஏழு பேர் மீதும், அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக
வேண்டும் என, 'சம்மன்' அனுப்பப்பட்டது.
நடவடிக்கை
இந்த வழக்கு, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருந்தது. அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், 2001 மே 14ல் இருந்து, 2006 மார்ச் 3 வரை, தன் பெயரிலும், குடும்ப உறுப்பினர் பெயரிலும், 160 ஏக்கர் நிலம் உட்பட, 18 வகையான அசையா சொத்துக்கள் வாங்கியிருப்பதை, அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதையடுத்து, 160 ஏக்கர் நிலத்துக்கு, 'சீல்' வைத்த அமலாக்கத் துறையினர், 6.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் நேற்று முடக்கினர்.
No comments:
Post a Comment