ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி துன்பம் என்பது எப்படி இயல்பானதோ அதே போல அவ்வப்போது அல்லது எப்பவாவது நடக்கும் சம்பவம் தான் “நேரம் சரியில்லை” என்பது. நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?
பகுத்தறிவாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ இது அனைவருக்கும் பொதுவானது, அவர்களும் நம்பித்தான் ஆகணும்.
ஏனென்றால், அவர்கள் வாழ்க்கையிலேயே இதுபோல ஒரு சூழ்நிலையைச் சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது.
எப்படி தெரிந்து கொள்வது?
நீங்கள் நல்லது நினைத்துச் செய்தாலும், பிரச்சனையில் சென்று முடியும்.
சம்பந்தமே இல்லாமல், மற்றவர்கள் உங்களுடன் சண்டை போடுவார்கள்.
பிரச்சனையாகாது என்று நினைத்துச் செய்தால், பிரச்னையைக் கொண்டு வரும்.
நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருடன், வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனையாகும்.
புதிதாகத் தொழில் ஆரம்பித்தால், நட்டத்தில் முடியும்.
இதையெல்லாமா பிரச்சனை செய்வாங்க!! என்று நினைக்கும்படியான நிகழ்வு நடக்கும்.
நல்லது சொல்லலாம் என்று நினைத்துக் கூறினால், அதனால் பிரச்னை தான் வரும்.
வேறு யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.
சுருக்கமாக, என்ன செய்தாலும் சிக்கலே வரும்.
இதை எப்படி தவிர்ப்பது?
இது உங்க விதி, தவிர்க்க முடியாது. குறிப்பிட்ட காலம் இது இருந்தே தீரும்.
இதன் தாக்கத்தைக் குறைக்க என்ன செய்வது?
அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பது மட்டுமே சிறந்த வழி. முடிந்தவரை பேச்சை முழுவதும் குறைக்க வேண்டும்.
செலவு ஏற்படும் புதிய முயற்சிகளைக் கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைப்பது நல்லது.
எதிலும் நிதானம் அவசியம்.
எதையும் பேசும் முன்பு நூறு முறை யோசிப்பது நல்லது.
எதிலும் அதிகம் கலந்து கொள்ளாமல் சிறிது காலம் அமைதி காப்பது நல்லது.
என் அனுபவம்
எனக்கு இதுபோல ஒரு நிலை 2001 ம் ஆண்டு வந்தது.
என்ன செய்தாலும் பிரச்சனையானது. நல்லதுக்கு சொன்னாலும் பிரச்சனையானது.
கடுமையை குறைப்போம் என்று நகைச்சுவையாகக் கூறினால், மேலும் சிக்கலானது.
அலுவலகத்தில் இன்னொருவர் செய்த தவறுக்கு என் தலை உருண்டது.
என் கண் முன்னாடி நேரம் தாண்டவமாடியதை கண்டேன். எனக்கு நேரம் சரியில்லை என்பதை என்னால் தெளிவாகக் கண் முன்னே காண முடிந்தது.
என்னிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம், தவறு செய்தால் உடனே தெரிந்து கொள்வேன் அல்லது யாராவது ஒரு முறை கோடு காட்டினால் போதும்.
சொல்புத்தியும் உண்டு, சுய புத்தியும் உண்டு. தெரிந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன். எதனால் பிரச்னை ஏற்படுகிறது? என்பதை யோசிப்பேன்.
யோசித்துப்பார்த்ததில் வாயை மூடிக்கொண்டு கொஞ்ச நாள் இருப்போம், என்ன ஆனாலும் சரி என்று முடிவு செய்தேன்.
சொன்னா நம்பமாட்டீங்க, பிரச்சனைகள் அப்படியே டமால் என்று பங்குச் சந்தை மாதிரி சரிந்து விட்டது.
அதன் பிறகு எனக்கு அக்காலகட்டம் இன்றுவரை திரும்ப வரவில்லை.
பல நெருக்கடியான சம்பவங்கள், பணப்பிரச்சனைகள் என்று ஏராளம் வந்துள்ளது ஆனால், இதுபோலத் தொட்டதெல்லாம் பிரச்னை என்றானதில்லை.
சுருக்கமாக, உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால், “வாயை மூடிட்டு இருங்க” . இது அல்லாமல் இன்னொரு ஆலோசனை, “நேர்மறையாகச் சிந்தியுங்கள்”.
பின்குறிப்பு
சமீபத்தில் நெருங்கிய ஒருவருக்கு நேரம் சரியில்லை. அவருக்கு ஆலோசனை இதுபோல வழங்கி, நேர்மறையாகச் சிந்தியுங்கள் ஆனால், வாக்குவாதம், சண்டை போன்றவற்றை தவிருங்கள், அமைதியாக இருங்கள் என்று கூறி இருந்தேன்.
தற்போது கிட்டத்தட்ட மீண்டு வந்து விட்டார்.
No comments:
Post a Comment