N95 மாஸ்க்கை எத்தனை நாள்கள் உபயோகிக்கலாம்..
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்.
துணி மாஸ்க், சர்ஜிகல் மாஸ்க், அதிலும் இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாஸ்க்குகள் என நிறைய இருக்கின்றன. இவற்றைத் தவிர FFP2 மாஸ்க், N95 மாஸ்க், KN95 மாஸ்க் என வேறு சில மாஸ்க்குகளும் இருக்கின்றன. FFP2 மாஸ்க் என்பது ஐரோப்பிய நாடுகளில் அங்கீரிக்கப்பட்ட எண்ணிக்கை. FFP2 மாஸ்க் போலவே FFP3 மாஸ்க் எல்லாம் இருக்கிறது. FFP2 மாஸ்க், N95 மாஸ்க் இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. N95 என்பது, அதில் 95 சதவிகித்துக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற கணக்கைக் குறிக்கும். KN95 மாஸ்க் என்பது சீனாவில் தயாரிக்கப்படுவது. விலை குறைவானது. ஆனால், அது N95 மாஸ்க் போன்றது எனச் சொல்ல முடியாது. KN95 மாஸ்க் என்பது N95 மாஸ்க்கைவிட சற்று பாதுகாப்பு குறைவானதுதான். அதனால்தான் அதைக் குறிக்க KN95 என வைத்திருக்கிறார்கள். பல நாடுகளில் KN95 மாஸ்க்கை உபயோகிப்பதில்லை. FFP2 மாஸ்க், N95 மாஸ்க்குகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.
N95 மாஸ்க்கை எத்தனை முறை உபயோகிப்பது எனக் கேட்டிருக்கிறீர்கள். இதுவரை எந்த மாஸ்க்கையும் திரும்ப உபயோகிக்கக் கூடாது என்றுதான் நினைத்திருந்தோம். ஒருமுறை பயன்படுத்தும் மாஸ்க்காகவே இதை நினைத்திருந்தோம். கொரோனா பெருந்தொற்று வந்த பிறகுதான் மாஸ்க்கின் உபயோகம் நிரந்தரமானது.
தற்போதைய ஆய்வுகளின் படி கைவசம் இரண்டு N95 மாஸ்க்குகளை வைத்திருக்கும் நிலையில் அவற்றை மாற்றி மாற்றி உபயோகித்தால், இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உபயோகித்த மாஸ்க்கை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதெல்லாம் தேவையில்லை என்கிறார்கள். இன்று நீங்கள் ஒரு N95 மாஸ்க் அணிந்தால், நாளை அதைத் தனியே வைத்துவிட்டு வேறொரு N95 மாஸ்க்கை அணியலாம். அடுத்தநாள் முதல்நாள் உபயோகித்ததைப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் மாஸ்க்கில் ஈரம் பட்டிருக்கக் கூடாது. உணவுப்பொருளோ, அழுக்கோ பட்டிருக்கக் கூடாது.
பொதுமக்களுக்கு பெரும்பாலான நேரங்களில் N95 மாஸ்க் தேவைப்படுவதில்லை. ஆனாலும், இப்போது பலரும் அதை அணிகிறார்கள். மருத்துவத்துறைப் பணியாளர்கள்தான் இதை அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் மீண்டும் உபயோகிக்கும்போது மேற்குறிப்பிட்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ளலாம்."
No comments:
Post a Comment