Sunday, January 7, 2018

அரசியல் கட்சி தொடங்கமாட்டார்...

ரஜினி கூறும் ஆன்மீக அரசியலில் புதுமை ஒன்றும் இல்லை. தனக்கு வேண்டிய அளவு பொருளும் புகழும் இருப்பதாகவும், அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்று ரஜினி சொல்கிறார். அவரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்து பதவிகளை அடையத் துடிப்பவர்களுக்கு அது எவ்வளவு தூரம் பொருந்தும்?
சொல்லப் போனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரிகள் தான் உண்மையான ஆட்சியாளர்கள். ரஜினி ஆண்டாலும், ராமன் ஆண்டாலும் அதிகாரிகள் வைத்ததே சட்டம். "சிஸ்டம்" கெட்டுவிட்டது என்று ரஜினி சொன்னாலும் அவர் சார்ந்த திரைத்துறையின் "சிஸ்டத்தை" சீர்திருத்த இந்த 35 ஆண்டுகளில் அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பெரிய கேள்வி. அன்புச்செழியன் விவகாரத்தில் தன கருத்து என்ன என்பதை இன்று வரை ரஜினி சொல்லவே இல்லை.
“நான் கனவில்கூட நினைக்காத அளவுக்கு 1000 மடங்கு பணம், புகழை எனக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள்"என்று மேடையிலேயே அறிவிக்கும் ரஜினி, இன்றைய நாள்வரை அந்தத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றிற்காவது தமிழர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிப் போராடியிருக்கிறாரா? அல்லது ஆதரவுக் குரல்தான் எழுப்பியிருக்கிறாரா?
விவசாயிகள் தற்கொலை, காவிரிப் பிரச்னை, ஈழப் பிரச்னை, கந்துவட்டி, நீட் தேர்வு, மாமிச விற்பனைத் தடை, மாடு விற்பனைச் சட்டம், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அனிதா தற்கொலை, ஒகி புயல் பாதிப்பு.... என்று தமிழக மக்கள் பிரச்னைகள் எதிலுமே தலையிடாமல், இதுநாள்வரை திரை வாழ்க்கை நடத்திவந்த ரஜினிகாந்த், நேரடியாக முதல்வர் நாற்காலியில் போய் அமர்ந்துகொள்ளத் திட்டம் போடுகிறாரா?.
ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்புலமாக இருப்பது பி.ஜே.பி கட்சிதான். தலைகீழாக நின்று பார்த்தும், தமிழகத்தில் அக் கட்சியால் மரியாதையான ஓட்டு வாங்க முடியவில்லை. எனவே, ரஜினியை மறுமுகமாக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் "ஆன்மிக அரசியல்'" செய்ய நினைக்கிறார்கள். பிரச்னைகளுக்குக் கருத்து கூடச் சொல்லாமல் இமயமலை ஏறிவிடும் ரஜினிகாந்த் தமிழக மக்களை எப்படிக் காப்பார்?
ரஜினி எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்களின் மேற்படிக் கருத்துகள் சமூகவலைதளங்களில் இன்றும் விவாதிக்கப்படுகின்றன. ரஜினி மீடியாவுக்குப் பயப்படுவதை விட சோஷியல் மீடியாவுக்குத் தான் இனி அதிகம் பயப்படவேண்டும். முகநூளிலும், வாட்ஸ்அப்பிலும் கிண்டல் அடித்தே கிழங்கு எடுத்து விடுவார்கள்
மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் அரசியல் எப்படிச் செய்துவிட முடியும்? தமிழ்நாட்டின் அன்றாடப் பிரச்னைகளுக்கு எதிர்கால முதல்வர் என்ற முறையில் அவரிடம் கருத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். முன்பு செய்தது போல் தனியறைக்குள் போய் ஒளிந்துகொள்ள முடியாது. எந்தப் பொது விழாவில் கலந்துகொண்டாலும் மைக்குகள் நீளும், நாக்குகள் சுழலும். "பௌன்சர்கள்" புடை சூழ பவனி வரும் ரஜினிகாந்த் அவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?
நவீன அரசியல் களம் அதிகார வேட்டை நடைபெறும் மைதானம். தேர்தல் அரசியலில் மௌனத்திற்கு ஏது இடம்? அது அமைதி கலைக்கப்படும் காலம்; வசனங்கள் பேசப்படும் நேரம். ஒத்திகை இல்லாமல் நேரடிக் காட்சி அரங்கேறும் நேரம். தெருக்களை நாடியும், வீடுகளைத் தேடியும் ஓடவேண்டிய காலம். அதிகாரத்தின் ஓடுபாதையில் நடக்கத் தயாராகும் ஒருவரின் எண்ண ஒட்டங்களுக்குப் பின் மௌனத்தின் சாயல் படியக்கூட முடியாது.
இன்றைய அரசியல்களத்தில் காட்சி ஊடகங்கள் தேர்தல் அரசியலைத் தங்களின் விளையாட்டு மைதானமாக ஆக்கிக் கொண்டு விட்டன ஊடக விளையாட்டுகளில் பங்கேற்கும் விருப்பம் பலருக்கும் இல்லை. ஆனாலும் வேடிக்கை பார்க்கும் விருப்பம் உள்ளவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். காரணம் பங்கேற்பவர்களின் பயம் வேடிக்கை பார்ப்பவர்களுக்குத் தேவை இல்லை. அவர்களுக்குத் தேவை ஆர்வம் மட்டும் தான்.
இன்றைய காலகட்டத்தின் வெகுமக்கள் தொடர்பு ஊடகம் தொலைக்காட்சிகள் தான்.தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அந்த முடிவுக்கு வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. அதிகார பலத்திற்கேற்ப ஊடக பலத்தைத் தூக்கி நிறுத்தி அதன் வழியே தமிழ் நாட்டு அரசியல் நடத்தப்படுகிறது.எங்கள் காலகட்டத்தில் திராவிட இயக்கப் பத்திரிகைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை வந்தன. அவற்றின் வழி தான் அதிகாரம் கை மாற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு அந்தச் சாமர்த்தியம் கைவரவில்லை.
இந்தப் பந்தயத்தில் இப்போதும் திராவிடக் கட்சிகள் தான் முந்தி நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடகங்கள் இன்று மக்கள் சக்தியாக மாறி விட்டன. அவற்றின் சக்தியைப் புறந்தள்ளவே முடியாது. 2017ன் துவக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டமே அதற்குச் சாட்சி. சுரங்கச் சொன்னால் எல்லோருமே இன்று வெளியிட்டாளர்கள், எழுத்தாளர்கள், கருத்துரையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள். "முகநூல் நேரலையே" அதற்குச் சாட்சி.
ஆயிரம் ரஜினிகளை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை கொண்டவை சமூக ஊடகங்கள்! புனைவுகளும் உண்மைகளும் அங்கு ஒரு மெல்லிய கோட்டால் தான் பிரிக்கப்படுகின்றன. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் இது. "மீம்ஸ்" போட்டே தாளிக்கும் லட்சோப லட்சம் "நெட்டிசன்களை" எப்படிச் சமாளிக்கப் போகிறார் ரஜினி?
திரைப்படம் என்பது வியாபாரம். அதன் மூலம் கிடைத்த புகழ் என்பது பந்தயத்தில் முதலாக ஓடி வந்த குதிரையின் மீது பணம் கட்டியோரின் மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பந்தயத்தில் பணமிழந்தோர் அசுவத்தின் அரசியலை ரசிப்பார்களா? ரஜினி என்ற குதிரையின் மீது பல நூறு கோடிகளை முதலீடு செய்திருக்கும் எந்திரன் 2.0 மற்றும் காலா படத் தயாரிப்பாளர்கள் இப்போதே வயிற்றில் நெருப்போடு தான் இருப்பார்கள்.
சினிமாப் புகழ் அறிமுகத்தைத் தரும். கூட்டம் சேர்க்கும். ஆனால் அதுவே மக்களுக்கான அரசியலை உருவாக்கப் போதுமானதா? இனி ரஜினியின் சின்னச் சின்ன அசைவுகள் கூட வாட்ஸ் அப் கிண்டல்களாகவும் கேலிகளாகவும் மாறும். அவற்றை உருவாக்குவோருக்கு "லைக்ஸ்" மட்டுமே லட்சியம். ஆனால் ரஜினிக்கும் அவரை நம்பி பண முதலீடு செய்துள்ளோருக்கும் அது "உயிரின் வாதை!"
ரஜினி "பாபா" ஆவாரா? "பாட்சா" ஆவாரா? அது காலத்தின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் பாபாவும், பாட்சாவும் சேர்ந்த அரசியல் சரி வராது என்பதே என் எண்ணம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...