Thursday, March 1, 2018

சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்:

அத்ரி மகரிஷியின் பிரதான சீடர், கோரக்கர். சித்தர்களின் வரிசையில், பிறப்பிலேயே விசேஷத் தன்மை கொண்டவர் இவர். விபூதி என்றால் ‘சாம்பல்’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. சிவ ஞானத்துடன் பிறந்தவர் மச்சேந்திரர். இவர் கடும் தவம் செய்து சித்தரானார். மச்சமுனி என்று அழைக்கப்பட்டார்.
மச்சமுனி ஒருநாள் பிச்சை கேட்டு ஒரு வீட்டின் முன்பு வந்து நின்றார். அந்த வீட்டுப் பெண், மச்ச முனிக்கு பிச்சையிட்டாள். அப்போது அவளது முகம், அவளுக்கு ஏதோ மனக்குறை இருப்பதை உணர்த்தியது.
Image may contain: 1 person
அதைக் கண்ட மச்சேந்திரர், ‘உனக்கு துன்பம் யாது?’ என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், தனக்கு மகப்பேறு இல்லாததைக் கூறி வருந்தினாள். இரக்கம் கொண்ட மச்சேந்திரர், சிறிது திருநீற்றை அள்ளி அவளிடம் கொடுத்தார். ‘இந்த திருநீற்றை, சிவநாமம் கூறி உண்பாயானால், உனக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். அந்த பாலகனை காண நிச்சயம் ஒருநாள் வருவேன்’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.
மச்சமுனி சென்றதும், அந்தப் பெண் பக்கத்து வீட்டுக்காரியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினாள். பக்கத்து வீட்டுப்பெண்ணோ, ‘உன்னிடம் பிச்சை வாங்கி சென்றவர் மாயாவியாக இருக்கலாம். விபூதியை கொடுத்து உன்னை மயக்கி அடையலாம். எனவே அந்த விபூதியை சாப்பிடாதே’ என்று கூறினாள்.
பயந்து போன அந்தப் பெண், மச்சமுனி கொடுத்து விட்டு சென்ற விபூதியை அடுப்பில் போட்டாள். ஆண்டுகள் சில சென்றன. திருநீறு கொடுத்த மச்சேந்திரர் மீண்டும் அந்தப் பெண்ணை வந்து சந்தித்தார். ‘திருநீற்றால் பிறந்த பாலகன் எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்’ என்று கேட்டார். மச்சமுனியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அந்தப் பெண், முடிவில் நடந்த அனைத்தையும் கூறினாள்.
பின்னர், ‘சிவ சித்தர்தானே? அடுப்பில் போட்ட சாம்பலில் இருந்தும் குழந்தையை உருவாக்கலாமே?’ என்று சந்தேகக் கண்கொண்டு கேள்வியை எழுப்பினாள்.
அவளது கேள்வியால் கோபம் கொண்ட மச்சமுனி ‘அடுப்பு சாம்பல் எங்கே?’ என்றார்.
‘கோபத்தில் குப்பை மேட்டில்தான் கொட்டினேன்’ என்றாள் அந்தப் பெண்.
உடனே மச்சேந்திரர், ‘குழந்தை உன் கருப்பைக்குள் வளர உன் கர்மா இடம் கொடுக்கவில்லை. ஆனால் கோசலையாகிய இது, அதற்கு இடம் கொடுத்து விட்டது. நான் சிவசித்தன் என்பது சத்தியமானால் இந்த கோவகம், ஒரு கோவகனைத் தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல.. கோரக்கனும்கூட. கோவாகிய பசுவின் இரக்கம் இவனிடம் இருக்கப்போவது சத்தியம். கோரக்கனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்தார்.
கோரக்கனும் அந்த குப்பை மேட்டில் கொட்டிய சாம்பலில் இருந்து வெளிவந்தார். திருநீறு கொடுத்த காலம் முதல் அப்போது வரை என்ன வளர்ச்சியோடு இருக்க வேண்டுமோ அதே வளர்ச்சியோடு இருந்தான் அந்த பாலகன். அவரே கோரக்கர்.
மச்சமுனி, சாம்பலில் இருந்து வந்த பாலகனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் சிறுவன் கோரக்கனோ, தாயிடம் போகாமல், மச்சேந்திரநாதரை பின் தொடர்ந்தான். கோரக்கரும் பெரிய சித்தராகி குருவை மிஞ்சும் சீடராக விளங்கினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...