Friday, May 4, 2018

உங்களிடம் ஒன்று கேட்பேன். பொய் சொல்லாமல் பதில் சொல்லவேண்டும்.

 உங்கள் டீவி ரிமோட்டில் ஏகப்பட்ட பட்டன்கள் இருக்கிறதே. அதில் ஆன் ஆஃப், சேனலை மாற்றுவது, ஒலியை கூட்டி குறைப்பது என்ற மூன்று நான்கு பட்டன்களைத் தவிர வேறு எதையாவது உபயோகித்திருக்கிறீர்களா? அட்லீஸ்ட் உபயோகிக்கவாவது தெரியுமா?
தெரியாதா? கையை கொடுங்கள். எனக்கும் தெரியாது. எங்கே நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேனோ என்று பயந்துகொண்டிருந்தேன்!
நானும் நீங்களும் மட்டுமல்ல, பலருக்கும் தெரியாது போலிருக்கிறது. பிறகு எதற்கு ரிமோட்டில் கடுகு தாளித்து கொட்டியது போல் இத்தனை பட்டன்கள்? ஒருவருக்கும் தெரியாமல் பலருக்கும் பயன்படாமல் ஏன் இத்தனை அம்சங்கள்? ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறார்கள் டீ.வி கம்பெனிகாரர்கள்?
இதற்கு காரணம் ‘ஃபீச்சர் க்ரீப்’ (Feature Creep) என்ற கோட்பாடு. ஒரு விஷயத்தை அளிக்கும் போது அதை சார்ந்த, சாராத, சேர்ந்த சேராத விஷயங்களையும் சேர்த்து அளிப்பதற்கு ஃபீச்சர் க்ரீப் என்று பெயர். அதாவது தயாரிக்கும் பொருளுக்கு தேவைப்படும், தேவைப்படாத, வேண் டிய வேண்டாத அம்சங்களை ஏகத்திற் கும் திணிப்பது. க்ரீப் என்றால் ஆங்கி லத்தில் நுழைப்பது என்று அர்த்தம். ஃபீச்சர் க்ரீப் என்பதை அம்சங்களின் அணிவகுப்பு எனலாம். எதை, எதற்கு, யாருக்கு, எப்படி அளிக்கிறோம் என் பது பற்றி தெளிவான சிந்தனை இல் லாத போது பல கம்பெனிகள் இக் கோட்பாட்டில் சிக்கி வாடிக்கை யாளர்களையும் சிக்க வைக்கின்றன!
எந்தப் பொருளையும் வடிவமைக் கும்போது அதை வடிவமைப்பவர்கள் நல்ல எண்ணத்துடன் தான் ஆரம் பிக்கிறார்கள். ‘இது நன்றாக இருக்கும்’ என்று ஒருவர் ஒரு அம்சத்தை கூற அது சேர்க்கப்படுகிறது. இன்னொருவர் ‘இது இல்லையென்றால் எப்படி’ என்று இன்னொரு அம்சத்தை பரிந்துரை செய்ய அதுவும் சேர்க்கப்படுகிறது. ‘இதோ இந்த இடம் காலியாக இருக்கே, இதுல இந்த பட்டனையும் வைக்கலாமே’ என்று மூன்றாமவர் முனக, எதற்கு குறை என்று அந்த ஐடமும் சேர்க்கப்படுகிறது. இது போல் ஒவ்வொன்றாய் சேர்த்துக்கொண்டே போகும் போது சாதாரண டீ.வி ரிமோட் கூட ஹரிகோட்டா கண்ட்ரோல் ரூம் போல் மாறுகிறது.
இப்படி அம்சங்களை அடுக்கி அனைத்தையும் தருவது வாடிக்கை யாளர்களுக்கு தான் பிரச்சினை என்று நினைக்காதீர்கள். கம்பெனிகளுக்கு பெரிய தலைவலியாகிக் கொண்டிருக் கிறது இது. அமெரிக்காவில் வாங்கிய பொருளை பிடிக்காமல் திருப்பித் தருவதால் ஏற்படும் நஷ்டம் சில நூறு பில்லியன் டாலர்களாம். அப்படி திருப்பி தரப்படும் பொருள்களில் எந்த குறையும் இல்லை என்று ‘ஃபிலிப்ஸ்’ கம்பெனி ஆய்வு கூறுகிறது. பொருளை உபயோகிக்கத் தெரியாமல் திருப்பித் தருபவர்களின் கைங்கர்யத்தால் விளையும் கர்மமாம் இது!
இப்பிரச்சினை பற்றி கம்பெனிகளுக் குத் தெரியாமல் இல்லை. நஷ்டப் படுவது தெரிந்தும் ஏன் கம்பெனி களால் இப்பிரச்சினையை தடுக்க முடியவில்லை?
இதற்கு பாதி காரணம் பொருளை வடிவமைக்கும் கம்பெனியின் ஆர் அண்டு டி பொறியாளர்கள். வடிவமைப் பவர்கள் பொருளை உபயோகிப்ப தில்லை. அவர்களுக்கு எந்த அம்சம் முக்கியமாகப்படுகிறதோ அது வாடிக் கையாளர்களுக்கு முக்கியமாக தெரிவ தில்லை. மேலும் பொருளை வடி வமைப்பவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்த விற்பன்னர்கள். தங்கள் அசாத்திய திறமையை திரளாகத் திரட்டி பொருளை மெருகேற்றுகிறோம் என்று திகட்டும் அளவிற்கு அம்சங்களை அடுக்கி பொருளை வடிவமைக்கிறார்கள். வடிவமைத்த பொருள் தங்கள் திறமையின் வெளிப்பாடு, தங்கள் பெருமைக்கு எடுத்துக்காட்டு என்று நினைக்கிறார்கள். போதாக் குறைக்கு பலருக்கு ‘அறிவின் சாபம்’ பீடித்து தங்களுக்கு தெரிவது மற்றவர்களுக்கு எளிதாக புரியும் என்று நினைக்கிறார்கள். இந்த கோர்ஸ் ஆப் நாலேட்ஜ் (Curse of knowledge) பற்றியும் இதன் பாதிப்பையும் சில வாரங்கள் முன் இந்தப் பகுதியில் நாம் அலசியது நல்ல உள்ளங்களுக்கு நினைவிருக்கும்.
ஆனால் அப்பொருளை வாங்கி உபயோகிப்பவர்கள் உங்களை, என்னை போன்ற சாமனியர்கள். ரிமோட் என்றால் சேனலை மாற்ற, ஒலியை கூட்ட குறைக்க என்று நினைத்து பழக் கப்பட்டவர்கள். அதனால் வாங்கிய பொருளில் உள்ள தொழில்நுட்ப புதுமைகள் பலருக்கும் இந்தி படம் பார்ப்பது போல் இருக்கிறது. என்னதான் படித்து தெரிந்து கொள்ள முயன்றாலும் புரியமாட்டேன் என்கிறது.
ஒன்றும் வேண்டாம், செல்ஃபோனில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. அதில் எத்தனை உபயோகிக்கிறீர்கள்? பேச, மெசேஜ் அனுப்ப என்று ஆரம்பித்து அலாரம், எஃப் எம் ரேடியோ, பாட்டு, படம் பார்க்கத்தான் வளர்ந்திருக்கிறோம். அதற்கு மேல் உள்ள அம்சங்களை ஒதுக்குகிறோம்.
ஃபீச்சர் க்ரீப் பிரச்சினைக்கு பாதி காரணம் பொருளை படைத்தவர்கள் என்றால் மீதிக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் வாடிக்கையாளர்கள். ஒரு பொருளை வாங்கும் போது அதில் அளவிற்கு அதிகமான புதிய அம்சங்கள் இருக்கின்றன என்று தெரிந்தால் ‘ஆஹா எத்தனை மேட்டர், தரும் காசுக்கு மேலேயே பலன் கிடைக்கும்’ என்று கனவுடன் கனகாரியமாக பொருளை வாங்கவேண்டியது. வாங்கிய பொருளை வீட்டில் உபயோகிக்க முயலும்போது ஒன்றும் புரியாமல் ‘இந்த எழவெல்லாம் கடையில தான் வேலை செய்யும் போலிருக்கு’ என்று அலுத்துக்கொள்ளவேண்டியது.
சமீபத்தில் மார்க்கெட்டிங் வல்லுனர்கள் நடத்திய ஆய்வு இதை இன்னமும் தெளிவாக விளக்கும். ஒரு எலெக்ட்ரானிக் பொருளின் மூன்று மாடல்கள் பலரிடம் காட்டப்பட்டு அந்த மூன்றில் எந்த மாடல் பிடித்திருக்கிறது என்று கேட்கப்பட்டது. மூன்றுமே ஒரு பொருள்தான் என்றாலும் முதல் மாடலை விட இரண்டாவது மாடலில் எக்ஸ்ட்ரா அம்சங்கள் இருந்தன. மூன்றாவது மாடலில் மற்ற இரு மாடல்களை விட அதிகமான அளவு அம்சங்கள் இருந்தன.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் அறுபது சதவீதம் பேர் அதிக அம்சங்கள் இருந்த மூன்றாவது மாடலை தேர்ந் தெடுத்தனர். அவர்களிடம் அந்த மாடல் அளிக்கப்பட்டு அதை வீட்டிற்கு எடுத்து சென்று உபயோகிக்கச் சொன்னார்கள். அங்கு பிடித்தது அனைவருக்கும் ‘ஃபீச்சர் ஃபெடீக்’. அதிக அம்சங்களால் ஏற்பட்ட அசதி. தாங்கள் விரும்பி தேர்ந் தெடுத்த மாடலை பயன்படுத்த படாதபாடு பட்டு ‘சே, அந்த முதல் மாடலையே தேர்வு செய்திருக்கலாம்’ என்றனர்! ஃபீச்சர் க்ரீப்பின் ஃபீச்சர் இது தான்!
ஃபீச்சர் க்ரீப் என்பது நம் வாழ்க்கையில் ஊறிப் போனதென்று தோன்றுகிறது. ‘சௌக்கியமா’ என்று யாராவது கேட்டால் ‘சௌக்கியம்’ என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடிகிறதா? ‘அத ஏன் கேக்கறீங்க. நேத்து வெயில்ல அலைஞ்சு ஒரு பக்க தலைவலி வந்து பெரிய அவஸ்தை. பத்தாக்குறைக்கு வீட்டில கரண்ட் வேற இல்ல. தவிச்சு போயிட்டேன். பொடி நடையா ராயர் மெஸ்ஸுக்கு போய் சூடா ஒரு காபி குடிச்சுட்டு அப் படியே டப்பா செட்டி கடைக்கு லொங்கு லொங்குன்னு நடந்து போய் சூரியனார் சுப்புனி சூரணம் வாங்கி நெத்தில தேய்ச்சு ஒரு உருண்டை வாயில போட்டதுக்கு அப்புறம் தான் கொஞ்சத்துக்கு கொஞ்சம் தேவலையாச்சு’ என்று பதிலளிக்கிறோம்.
பார்த்த மரியாதைக்கும், பழகிய பாவத்திற்கும் ஒருவர் தெரியாத்தன மாய் உங்களை விசாரிக்கிறார். பதில் மரியாதைக்கு சௌக்கியம் என்று கூறி போவதை விட்டு ஒத்தை தலைவலி, ராயர் மெஸ், டப்பா செட்டி கடை, சூரணம் என்று தேவையற்ற விஷயங் களை கதையாக்கி ஏண்டா கேட்டோம் என்று விசாரித்தவருக்கே தலைவலி வர நீட்டி முழக்கி கதை சொல்கிறோமே, இதுவும் ஃபீச்சர் க்ரீப் தானே!
ஒன்று புரிந்துகொள்ளுங்க. முப்பது விஷயம் கூறினால் கேட்பவர் மனதில் ஒன்று கூட நிற்காது. முப்பது பட்டன் வைத்தால் ரிமோட்டை எப்படி உபயோகிப்பது என்பது தெரியாது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...