Saturday, November 3, 2018

ஆம்புலன்ஸ்கள் நடத்திய சக்சஸ் ஆபரேஷன்.....

தமிழகத்தையே மிரள வைத்த செய்தி திருச்சி - சென்னை பைபாஸ்... ஒரு குழந்தையின் உயிரை மீட்க 30 ஆம்புலன்ஸ்கள் நடத்திய சக்சஸ் ஆபரேஷன்.....திருச்சி கிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கிருஷ்ணவேணி என்கிற பெண் பிரசவத்துக்காகச் சேர்க்கப்படுகிறார். கணவரின் பெயர் குணாளன். குழந்தை பிறக்கிறது என்பது இருவருக்குமான தவம். பல கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். ஞாயிறு காலை 6.30 மணிக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் மூச்சு விடச் சிரமப்படுவதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனே குழந்தையை திருச்சியிலுள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். காலை 9 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும், உடனடியாக சென்னைக்குக் கொண்டு செல்லுங்கள் என ஒரு மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறார்கள். தாமதப்படுத்தாமல் உடனடியாகக் கொண்டு சென்றால் குழந்தையைக் காப்பாற்றிவிடலாம் எனக் குணாளனிடம் தெரிவிக்கிறார்கள். குழந்தை வென்டிலேட்டரில் வைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றிய தகவல் அந்தக் குழந்தையின் தாய்க்குத் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.சென்னைக்குக் குழந்தையைக் கொண்டு செல்ல அதி நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வேண்டுமென மருத்துவமனை பரிந்துரைக்கிறது. கண்டிப்பாக வென்டிலேட்டர் இருக்கிற ஆம்புலன்ஸ் வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். கால் ஈஸி என்கிற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதில் இலியாஸ் என்பவரின் தகவல் கிடைக்கிறது. இவர் மாநில ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைச் செயலாளர். பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை என்பதால் ஆம்புலன்ஸில் 330 கிலோ மீட்டர்கள் கொண்டு செல்வது ஆபத்து என்றும், 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கிற ஆம்புலன்ஸ் குழிகளில் விழுந்து எழுகிற நேரத்தில் வென்டிலேட்டரில் பொருத்தியிருக்கிற பைப் குழந்தையைக் காயப்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும், குழந்தையின் வசதிற்கேற்ப ஆம்புலன்ஸைத் தயார்படுத்த வேண்டுமென்று சொல்கிற இலியாஸ், மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று குழந்தையின் நிலை குறித்துக் கேட்டறிகிறார்.பிறகு மதியம் 2 மணிக்கு அனைத்து வசதிகளுடன்கூடிய குழந்தைகள் ஆம்புலன்ஸ் மணப்பாறை பகுதியில் ஸ்ரீதரன் என்பவரிடம் இருக்கிற தகவல் கிடைக்க அவரைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். ஸ்ரீதரன் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் அவசர சிகிச்சை அளிக்கும் டெக்னீஷியனாகவும் பணி புரிகிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டரை அழைத்துக்கொண்டு ஸ்ரீதரன் 2.30 மணிக்கு மணப்பாறையிலிருந்து திருச்சிக்குக் கிளம்புகிறார்கள். மருத்துவமனையில் குழந்தை சென்னைக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஏற்பாடுகள் துரிதமாக நடக்கிறது. சரியாக 4 மணிக்குக் குழந்தையுடன் சென்னைக்குக் கிளம்புவது என முடிவு செய்யப்படுகிறது.பிற்பகல் 3 மணிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தடைகிறது. எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸாண்டருக்குத் தகவல் கொடுக்கப்படுகிறது. ஆம்புலன்ஸில் குழந்தை பயணிக்க இருக்கிற 330 கி.மீ தூரம் என்பது ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ``கோல்டன் அவர்ஸ்”. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கிற நெடுஞ்சாலை. இந்தச் சாலையில் அதிகபட்ச வேகமாகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே 80 லிருந்து 100 கி.மீ வேகம்தான். பல இடங்களில் சாலை சந்திப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்த்து 7 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. 4 மணியிலிருந்து இரவு 10 மணி என்பது சாலைகளின் ``ப்ரைம் டைம்”. பள்ளி கல்லூரி, அலுவலகம் என எல்லோருமே வீட்டுக்குத் திரும்புகிற நேரம். இந்தச் சூழ்நிலையில் 4 மணி நேரத்தில் சென்னையைச் சென்று சேருவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு காரியம். அதிலும் இரவு 7 மணிக்கு மேல் செங்கல்பட்டிலிருந்து அண்ணாசாலையில் இருக்கிற மருத்துவமனையை அடைய இருக்கிற தூரத்தைக் கடக்க மட்டுமே குறைந்தபட்சம் 2 மணி நேரங்கள் ஆகும். கூடுதல் பிரச்னை என்னவென்றால் அன்று ஞாயிறு. விடுமுறை முடிந்து அதிக வாகனங்கள் சென்னைக்குத் திரும்பி கொண்டிருக்கும். எனவே, இப்போது கண்ணுக்கு முன்னால் இருப்பது மிகப்பெரிய சவால்தான்.ஆம்புலன்ஸ் கிளம்ப இருக்கிற ஒரு மணி நேர இடைவெளியில் இலியாஸ், மாநில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருக்கிற மூன்று வாட்ஸ் அப் குரூப்பிலும் குழந்தை குறித்த தகவலைச் சொல்கிறார். படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பலரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக இருப்பதால் எல்லாத் தகவல்களும் ஆடியோ வடிவில் குரூப்பில் பதியப்படுகிறது. 3 மணியில் இருந்தே வாட்ஸ் அப்பை வாக்கிடாக்கியாக மாற்றுகிறார்கள். திருச்சியிலிருந்து சென்னை வரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிற எல்லா ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ஒரு குழுவாக ஒன்றிணைகிறார்கள். திருச்சி முதல் சென்னை வரை இருக்கிற பகுதியை பல எல்லைகளாகப் பிரிகிறார்கள். ஒவ்வோர் எல்லைக்கும் ஒரு குழு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.எல்லா வசதிகளும் செய்யப்பட்டு குழந்தை 4 மணிக்கு ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்பகுதியில் குணாளனின் உறவினரும் ஸ்ரீதரனும் மட்டும் இருக்கிறார்கள். வெண்டிலெட்டரில் குழந்தை வைத்துப் பராமரிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அருகில் குழந்தையின் தந்தை குணாளன் அமர்ந்திருக்கிறார். சரியாக 4:10 மணிக்கு ஆம்புலன்ஸ் மருத்துவமனையிலிருந்து கிளம்புகிறது. மருத்துவமனையிலிருந்து கிளம்பிய ஆம்புலன்ஸுக்கு முன்பு 4 ஆம்புலன்ஸ்கள் சாலையை கிளியர் செய்து கொடுத்துக் கொண்டே செல்கிறார்கள். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒலிபெருக்கி இருப்பதால் வாகனங்களை ஒழுங்குபடுத்த அவை உதவியாய் இருந்தன.குழந்தை இருக்கிற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அலெக்ஸண்டார் வாகனத்தை 100 கி.மீட்டருக்கும் அதிகமாக இயக்குகிறார். எந்த இடத்திலும் குழியிலோ, வேகத்தடைகளிலோ வாகனம் குலுங்காமல் லாகவமாக இயக்குகிறார். ஓட்டுநருக்குப் பக்கத்தில் குழந்தையின் தந்தை பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறார். திருச்சி நம்பர் ஒன் சுங்கச்சாவடி வரை திருச்சி ஆம்புலன்ஸ்கள் சாலையைச் சீர்ப்படுத்திக் கொடுக்கிறார்கள். அங்கிருந்து அடுத்த எல்லையான பெரம்பலூர் வரை தொழுதூர் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். 4 ஆம்புலன்ஸ்கள் முன்னே செல்ல பின்னால் குழந்தையிருக்கிற ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் வாகனம் எங்கிருக்கிறது என்கிற தகவல் நொடிக்கொரு முறை ஆடியோ செய்திகளாக வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பது மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஓரளவு தெரியப்படுத்துகிறார்கள். எல்லா வாகனங்களும் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டு நிற்க ஆரம்பித்தன.இதற்கு இடையில் குழந்தை எங்கே எனக் கேட்டு பல அழைப்புகள் அவரது மனைவியிடமிருந்து குணாளனுக்கு வந்திருக்கிறது. ``குழந்தை இன்னொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது பயப்படாத ஏதும் ஆகாது'' எனச் சொல்லி மனைவியை ஆறுதல்படுத்தி கொண்டே வருகிறார். ஏனெனில் குழந்தை பிறந்ததிலிருந்து அவரது மனைவி குழந்தையைப் பார்க்கவே இல்லை. பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்கவேண்டுமென்பது ஒவ்வொரு தாயினுடைய கனவு என்பதால் என்ன நடக்கிறது என்றே புரியாமல் அவரது மனைவி கிருஷ்ணவேணி வலியோடு இருக்கிறார். குழந்தையை எப்படியும் காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் முடிந்த வரை தகவலை மனைவியிடமிருந்து மறைத்தே வைத்திருந்தார்.விழுப்புரத்திலிருந்து திருச்சி நோக்கிக் கிளம்பிய இரண்டு ஆம்புலன்ஸ்கள் தொழுதூரில் ஆம்புலன்ஸைப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். எந்தச் சிரமமுமின்றி ஆம்புலன்ஸ் விழுப்புரம் எல்லையை வந்தடைகிறது. விழுப்புரத்தில் தயாராய் இருந்த மேலும் 5 ஆம்புலன்ஸ்கள் பணியில் இணைந்து கொள்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நின்று சாலையைச் சரிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். மொத்தம் 7 ஆம்புலன்ஸ்களும் திண்டிவனம் வரை கொண்டு வந்து விடுகிறார்கள். அதற்குள் செங்கல்பட்டைச் சேர்ந்த 3 ஆம்புலன்ஸ்கள் திண்டிவனம் வந்துவிடுகின்றன. திண்டிவனத்திலிருந்து அவர்கள் ஆம்புலன்ஸைப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். எந்த இடையீருமின்றி ஆம்புலன்ஸ் திண்டிவனத்தைக் கடக்கிறது. செங்கல்பட்டை வந்தடையும் போது வேறு 4 ஆம்புலஸ்கள் அவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இருக்கிற சிக்கலே இனிதான் ஆரம்பிக்க இருக்கிறது. சென்னையை நெருங்க நெருங்க வாகன நெரிசல் அதிகமாகிறது. பீக் அவர்ஸ் என்பதால் கூடுவாஞ்சேரியில் 5 ஆம்புலன்ஸ்கள் சேர்ந்து சாலையை முடிந்த வரை சரி படுத்துகிறார்கள்.எந்த இடத்திலும் ஆம்புலன்ஸ் நின்றுவிடக் கூடாது என்கிற தகவல் வாட்ஸ் அப்பில் வந்து கொண்டே இருந்ததால் சென்னையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிக சிரத்தை எடுத்து சாலையைச் சீர்ப்படுத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு 10 ஆம்புலன்ஸ்களின் சத்தம் வாகன ஓட்டிகளைப் பதற்றப்படுத்தியது. என்ன ஏதென்று தெரியாதவர்கள் எல்லோரும் ஆம்புலன்ஸுக்கு வழி விடுகிறார்கள். எந்த எல்லையைச் சவாலான எல்லை என நினைத்தார்களோ அது நினைத்ததை விட எளிதாக இருந்தது. ஒவ்வொரு 4 கி.மீ இடைவெளியிலும் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பெருங்குளத்தூர், தாம்பரம், கிண்டி என ஒவ்வொரு ஆம்புலன்ஸாகச் சேர்ந்து மொத்தம் 15 ஆம்புலன்ஸ்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்க சரியாக 8 மணி 20 நிமிடத்தில் அண்ணா சாலையில் இருக்கிற தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். குழந்தையின் அப்பா குணாளன் கண்ணீர் மல்க ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கிறார். மிகப் பெரிய பொறுப்பை முடித்த மகிழ்ச்சியில் அலெக்ஸாண்டரும் ஸ்ரீதரனும் நிம்மதி பெரு மூச்சு விடுகிறார்கள்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை எனவும் நுரையீரல் பகுதியில் பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். நுரையீரல் சிகிச்சையைத் தொடரப் பல லட்சங்கள் செலவாகும் என்பதால் 2 மணி நேரத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு இரவு 10 மணிக்கு எழும்பூரில் உள்ள குழந்தை நல அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறது. அரசு மருத்துவமனையில் குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள் குழந்தையை வென்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று காலை குழந்தை சென்னையில் சீராக இருப்பதாக முதன் முறையாகக் குணாளன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.......... ``காசு, பணம், புகழ், பதவி என ஒரு மனிதனைத் தீர்மானிக்கும் எந்த ஒரு காரணிக்குப் பின்னாலும் ஓடாத சில கால்கள், சில மனிதர்களைச் சுமந்துகொண்டேதான் இருக்கின்றன”.சாதனை புரிந்த டிரைவர் அலெக்ஸாண்டருக்கு வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...