சாமியார்கள் என்ற பெயரில் கார்ப்பொரேட் சாமியார்களையும் அவர்கள் மீதான அடுக்கடுக்கான புகார்களையும் கண்டு பழகிவிட்ட தமிழ்ச் சமுதாயத்துக்கு மூக்குப்பொடி சித்தர் ஆச்சர்யமான மனிதர்.
உண்மையில் அவர் சாமியார் அல்ல, சித்தர் என்கிறார்கள். கோவிலோ தனிப்பட்ட இடம் என்றோ அவருக்கு எதுவும் கிடையாது. விரும்பும் இடத்தில் விரும்பிய கோலத்தில் தங்குவது அவர் சுபாவம்.
எங்கிருந்தாலும் பக்தர்கள் அவரைத்தேடி ஓடிவிடுவார்கள் என்கிறார்கள் உள்ளுர் மக்கள்.
மூக்குப்பொடி சித்தர் குறித்து உள்ளுர்வாசி ஒருவரிடம் கேட்டோம். “மூக்குப்பொடி சித்தரின் வயது 90க்குமேல் இருக்கும். அவரது நிஜப்பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
ஆரம்ப நாள்களில் திருவண்ணா மலையில் கிரிவலப்பாதையில் படுத்துக்கிடப்பார். பின்னர் கோவிலில் உள்ள யானை மண்டபத்தில் இருந்து மக்களை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார்.
அவரது ஒரே பழக்கம் மூக்குப்பொடி போடுவது. யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டார். அரிதாக எப்போதாவது யாரிடமாவது மூக்குப்பொடி கேட்டுப் போட்டுக்கொள்வார்.
அவரது முக தேஜஸ் கண்டு அவருக்கென பக்தர்கள் உருவானார்கள். அதனால் மூக்குப்பொடி சித்தர் என்றே அழைக்கிறார்கள்
சாமியார் என்றாலும் அவர்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசங்கள் உண்டு. பணம், பொருள் மீது பற்று இல்லாதவர். நிரந்தரமாக பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வரும் அளவு பிரபலமாகியிருந்தும் கோவில், மடம் என எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்.
அவருக்கு கார், பங்களா என சொகுசு வாழ்க்கையை ஏற்படுத்தித்தர செல்வாக்கு படைத்த பக்தர்கள் பலர் தயாராக இருந்தும் அவர் விருப்பம் கோவில், குளம், தெரு வீதிதான். இப்படி வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர் அவர்.
தரிசனத்துக்காக பல பெரிய விஐபிக்கள் பணத்தைக் கட்டுகட்டாக தட்டில் வைத்து காத்து நிற்பார்கள். ஆனால், அவர்களைப் பொருட்படுத்தமாட்டார். துாரத்தில் வெறும் வெற்றிலைப் பாக்குத் தட்டு வைத்தபடி இருக்கும் ஒருவரை அழைத்துப் பார்ப்பார்.
எத்தனை மணிநேரம் காத்திருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவர் விரும்பினால் மட்டுமே ஆசிர்வாதம் செய்வார். அவரது ஆசிர்வாதம் என்பது வித்தியாசமானது.
கண்ணைத்திறந்து ஒரு பார்வை பார்த்தால் அதுதான் அவரது ஆசிர்வாதம். அதனாலேயே அவர் எப்போது கண்திறந்துபார்ப்பார் என பக்தர்கள் காத்துநிற்பார்கள். பலரை பார்க்காமலேயே அனுப்பிவைப்பார்.
பல மணிநேரங்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் அவர்கள் செல்வார்கள். அரிதாகத்தான் பக்தர்கள் பணம் தந்தால் பெற்றுக்கொள்வார். அப்போதே அதை ஏழ்மையான பக்தர்கள் யாருக்காவது தந்துவிடுவார்.
அவரை வெளியில் கொண்டுச்செல்ல கார்கள் அணிவகுத்து நின்றாலும் நடந்தேசெல்வார். திடீரென ஆட்டோ, லாரி, சைக்கிள், பைக் என ஏதோ ஒரு வாகனத்தை நிறுத்தி ஏறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார்.
கூட்டம் கூட்டமாக அவரைக் காண காத்திருப்பார்கள். திருவண்ணா மலையில் உள்ள தனியார் ஓட்டல் முதலாளி ஒருவரின் பாதுகாப்பில் இருந்ததால் மக்கள் கூறினர். என்றாலும் நிரந்தரமாக எங்கும் தங்காமல் சுற்றிவருவார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி இவரது பக்தர்களில் ஒருவர். முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் முன் இவரைச் சந்தித்துவிட்டுச் செல்வார் ரங்கசாமி.
சில சமயங்களில் இவரது ஆசிர்வாதம் அதிர்ச்சியாக இருக்கும். ஆம்...பக்தர்களை கண்டபடி கெட்டவார்த்தைகளைப்போட்டுத் திட்டுவார். ஆனால், பக்தர்கள் இதற்குப் பெரும் மகிழ்ச்சி யடைவார்கள்.
அதாவது இப்படி கெட்ட வார்த்தைகளை வாங்கிக்கொண்டால் அது அதிகபட்ச ஆசிர்வாதம் என்பது அவர்களின் எண்ணம். ஹோட்டல்களுக்குச் சென்றால் அவருக்கென ஒரு டேபிளையே ஒதுக்குவார்கள்.
காரணம் மற்றவர்களைப்போல் சேரில் உட்காராமல் டேபிளில் அமர்ந்து உண்பார். எப்போதும் மூக்குப்பொடி போட்டபடி இருப்பார். கருத்து தெரிந்து அவர் குளித்ததில்லை என்பார்கள்.
உடலில் வேறு எதையும் பூசிக்கொண்டதில்லை. ஆனால், அவர் அருகில் சென்றால் ஜவ்வாது, சந்தனம், விபூதி வாசம் வீசும். பக்தர்கள் ஆச்சர்யப்படுகிற விஷயம் இது.
தற்போது உயிரோடுள்ள சித்தர் இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார் ஆனால் இன்று இறையருள் இனைந்தார். அஸ்டமா சித்திகள் என்று சொல்லப்படும் சித்தர்களின் வாழ்வுநிலைகளில் இவர் இறுதிநிலையில் வாழ்வதாக சொல்கிறார்கள்.
தெருவில் இறங்கி நடக்கும்போது திடீரென ஒரு இடத்தில் நின்று போகிற யாரையாவது அழைத்து உண்பதற்கு ஏதாவது கொடுப்பார்.
எத்தனை பெரிய விஐபி ஆக இருந்தாலும் அவர் மனதுக்கு விகல்பம் இல்லாதவர்களாக தோன்றுபவர்களை மட்டும்தான் ஏறெடுத்துப்பார்ப்பார்” என்றார் ஊர் மக்கள்...
வாழ்க அவர் புகழ்.
வாழ்க அவர் புகழ்.
No comments:
Post a Comment