Monday, April 27, 2020

மே 17 வரை? ஊரடங்கு நீட்டிப்பு...

புதுடில்லி அடுத்த மாதம், 3ம் தேதிக்குப் பின், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது நிபந்தனைகளுடன் தளர்த்துவதா என்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை, 17 ம் தேதி வரை தொடரலாம் என்றும், குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என்றும் பெரும்பாலான முதல்வர்கள் தெரிவித்தனர்.அப்போது, ''தொற்று அதிகம் உள்ள சிவப்பு நிறமிடப்பட்டுள்ள பகுதிகளை, பாதிப்பு குறைந்த ஆரஞ்சு நிறப் பகுதிகளாகவும், தொடர்ந்து அவற்றை, பாதிப்பு முற்றிலும் நீங்கிய பச்சை நிறப் பகுதிகளாகவும் மாற்றும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும்,'' என அவர்களிடம், மோடி கேட்டுக் கொண்டார்.


இன்னும் ஒரு வாரமே


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மாதம், 24ல் இருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அமலாகி, 14ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னும், கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்ததால், இரண்டாம் முறையாக, வரும், ௩ம் தேதி வரை, சில தளர்வுகளுடன், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறையாத நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடனும், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற முதல்வர்களில் பெரும்பாலானோர், கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கை, மே 17 வரை நீட்டிக்கலாம் என்றும், குறிப்பிட்ட சில தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

நெருக்கடியான நேரம்

இதையடுத்து, பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நமக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மற்ற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில், வைரஸ் பரவும் வேகம் குறைவாக உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல், பொருளாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. இது நெருக்கடியான நேரம் என்றாலும், நம் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது; யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், ஊரடங்கு விதிமுறைகளை முழுமையாகவும், கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும். ததஅதிக பாதிப்புள்ள, சிவப்பு நிறமிடப்பட்டுள்ள பகுதிகளை, குறைந்த பாதிப்புள்ள, ஆரஞ்சு நிறப் பகுதிகளாக மாற்றி, பின் அவற்றை, பாதிப்பு முற்றிலும் நீங்கிய பச்சை நிறப் பகுதிகளாகவும்; குறைந்த பாதிப்புள்ள ஆரஞ்சு நிறப் பகுதிகளை, பாதிப்பு முற்றிலும் நீங்கிய பச்சை நிறப் பகுதிகளாகவும் மாற்ற, அனைத்து முதல்வர்களும் முயற்சிக்க வேண்டும்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இரண்டு ஊரடங்குகளை சந்தித்து விட்டோம். தற்போது, அதைத் தாண்டி வேறு சில விஷயங்களையும் செய்ய வேண்டியுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கும் கொரோனாவின் வீரியம் இருக்கும் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்; இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, முக கவசம் அணிவது கட்டாயமாகி விட்டது. இது, மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது. சமூக இடைவெளி என்ற மந்திரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர், பொருளாதார பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கான நடைமுறை, ஆலோசனைகளை திட்டமாக தயாரித்து, அதை அறிக்கையாக அளிக்கும்படியும், முதல்வர்களிடம் பிரதமர் வலியுறுத்தினார். பெரும்பாலான முதல்வர்கள், 'கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சிவப்பு மண்டலம் என அறிவித்து, ஊரடங்கை தொடரலாம். பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளை ஆரஞ்சு மண்டலாக அறிவித்து, இங்கு கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தலாம்' என்றனர்.

அதேபோல், 'கொரோனா பாதிப்பு எதுவும் புதிதாக பதிவாகாத அல்லது பாதிப்பு இல்லாத பகுதிகளை, பச்சை மண்டலம் என அறிவித்து, இங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தலாம்' என்றும் தெரிவித்தனர். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் வலியுறுத்தினர். இது குறித்து உள்துறை, நிதி, சுகாதார அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதை, பிரதமர் நரேந்திர மோடியே நாட்டு மக்களுக்கு அடுத்த சில நாட்களில் தெரிவிப்பார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். கொரோனா பிரச்னைக்காக, பிரதமர் மோடி, இதுவரை நான்கு முறை, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர்கள் கூறியது என்ன?
மே, 3ம் தேதிக்குப் பின்னும் ஊரடங்கை தொடரப் போவதாக பிரதமரிடம் தெரிவித்தேன். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் மேகாலயாவில் அனுமதி அளிக்கப்படும். கன்ராட் சங்மா, மேகாலயா, தேசிய மக்கள் கட்சி

மத்திய அரசு என்ன உத்தரவிடுகிறதோ, அதை செயல்படுத்துவோம். ஊரடங்கை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.ஜோரம் தங்கா, மிசோரம், மிசோ தேசிய முன்னணி

பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் கிடைப்பதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கிற்குப் பின், தொழில் துறை செயல்பட, மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.நாராயணசாமி, புதுச்சேரி, காங்கிரஸ்.

வர்த்தக நடவடிக்கைகளை படிப்படியாக துவங்க அனுமதி அளிக்க வேண்டும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடைமுறைகளை அறிவிக்க வேண்டும். திரிவேந்திர சிங் ராவத், உத்தரகண்ட்,
வர்த்தக நடவடிக்கைகளை துவங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மற்ற மாநிலங்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பா.ஜ., ஜெய்ராம் தாக்குர், ஹிமாச்சல பிரதேசம், பா.ஜ.,

ஊரடங்கு தொடர வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை, அந்தந்த மாநில எல்லைக்கு உட்பட்ட நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கலாம் நவீன் பட்நாயக், ஒடிசா, பிஜு ஜனதா தளம்

வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள பீஹார் தொழிலாளர்களை மீட்டு வருவதற்கு, மத்திய அரசு உதவ வேண்டும். வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்தலாம்.
நிதிஷ் குமார், பீஹார், ஐக்கிய ஜனதா தளம்.


கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களை துவங்க, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.மனோகர்லால் கட்டார், ஹரியானா, பா.ஜ.,

புறக்கணித்த பினராயி: பங்கேற்ற மம்தாபானர்ஜி


பிரதமருடன் நேற்று நடந்த ஆலோசனையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. இது குறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமருடனான ஆலோசனையில், ஒன்பது மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும் என்றும், மற்ற முதல்வர்கள், தங்கள் ஆலோசனைகளை அறிக்கையாக அனுப்பி வைக்கும்படியும், மத்திய அரசு தரப்பில் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அந்த ஒன்பது பேர் பட்டியலில், பினராயி விஜயன் பெயர் இடம் பெறவில்லை. இதனால், முதல்வர் சார்பில், தலைமைச் செயலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியும், இந்த ஆலோசனையில் பங்கேற்க மாட்டார் என, கூறப்பட்டது. ஆனால், அவர் ஆலோசனையில் பங்கேற்றதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...