'சட்டசபையில் கேட்ட அந்த குரல், பின்னணி குரலா?' என, துணை முதல்வர், பன்னீர்செல்வத்திற்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மனசாட்சி
அவரது அறிக்கை:'முதல்வரின் முயற்சியால் தான், தமிழகத்திற்கு, 32 ஆயிரத்து, 849 கோடி ரூபாய், மத்திய நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது' என, மனசாட்சியை அடகு வைத்து, பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிப்., 14ல், சட்டசபையில், தான் படித்த பட்ஜெட் அறிக்கையை மறந்து விட்டாரோ என்ற, ஆதங்கம் தான் மேலிடுகிறது.
தனிப்பட்ட ஒதுக்கீடு
'ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 15 சதவீத அளவில், மத்திய அரசின் வரி வருவாய் அதிகரிக்கிற நிலையில், மாநிலங்களுக்கும், அதே அளவில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும்' என, நிதித் தத்துவம் பேசியது யார்? மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தன் பங்கை, மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது என்றும், தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே, சிறப்பு உதவி மானியம் வழங்க, தனிப்பட்ட ஒதுக்கீடு கேட்கிறோம் என்றும், காரசாரமாக ஆற்றிய உரை யாருடையது? சட்டசபையில் கேட்ட அந்த குரல், நிதி அமைச்சரான பன்னீர்செல்வத்துக்கு உடையது தானே அல்லது பின்னணி குரலா?
நோய் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்து விட்டு, இந்த அறிக்கை வாயிலாக மட்டுமே, வெளிச்சத்திற்கு வந்துள்ளார், பன்னீர்செல்வம். அவர், என்னை பார்த்து, 'அரசியல் காழ்ப்புணர்ச்சி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி' என, அறிக்கை விட்டிருப்பதற்கு, உள்ளபடியே வருந்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment