Tuesday, February 1, 2022

அறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா?

 படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார்.
பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு `பிரமசிரக்கண்டீசுவரர்’ என்று திருப்பெயர். இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார்.
இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி. அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார்.
அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன.
முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம், கீழப்பரசலூர்
காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். `பரசலூர்’ என்றே இப்போது அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.
தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான்.
அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் `திருப்பறியலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி
இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.
ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.
வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.
இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.
கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது.
பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம்.
இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.
அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன்.
ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன்.
தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.
பிறப்பிலி என்னும் பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும்வென்று,
இறைவனின்திருவருளைப்
பெற்று சிறப்புற வாழலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...