மேற்கு வங்க சட்டசபையை முடக்கி வைத்து, கவர்னர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். 'கவர்னரை திரும்ப பெற வேண்டும்' என,ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வலியுறுத்தி வந்த நிலையில்,சட்டசபையை கவர்னர் முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.'எனக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை; நான் கேட்கும் கேள்விகள், விளக்கங்களுக்கு பதில் அளிப்பதில்லை' என, மாநில அரசு மீது, கவர்னர் குற்றஞ்சாட்டுகிறார்.மாநில அரசோ, 'சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துகிறார்' என குறை கூறுகிறது.
தீர்மானம் தாக்கல்
இது பற்றி முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறுகையில், 'கடந்த ஓராண்டாக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். 'இதனால், அரசின் கொள்கை முடிவுகளை அறிவிக்க முடியவில்லை. எனவே தான், என் 'டுவிட்டர்' கணக்கில் இருந்து கவர்னரை முடக்கினேன்' என்றார். இதையடுத்து கவர்னர் - முதல்வர் மோதல் அதிகரித்து, கவர்னரை நீக்க வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் திரிணமுல் காங்., உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.மேற்கு வங்க சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச்சில் கவர்னர் உரையுடன் துவங்க இருந்தது. இதில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திரிணமுல் காங்., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் புதிய திருப்பமாக மேற்கு வங்க சட்டசபையை முடக்கி, கவர்னர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக உத்தரவிட்டார். கவர்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க சட்டசபையை பிப்., 12முதல் முடக்கி வைக்கஉத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரும் பரபரப்பு
கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை, மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரிணமுல்காங்., வட்டாரங்கள்கூறிய தாவது:இது போன்ற சூழ்நிலையில் சட்டசபையை முடக்கிய கவர்னரின் நடவடிக்கை, இதற்கு முன் எந்த மாநிலத்திலும் நடந்ததாக தெரியவில்லை. கவர்னர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். சட்டசபை முடக்கப்பட்டுள்ளதால், 2022 - 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில அரசால் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அது, அரசின் நிர்வாகத்தை பாதிக்கும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சிக்குள் குழப்பம்
இதற்கிடையே, திரிணமுல் கட்சிக்குள் நடக்கும் குழப்பத்தால், அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கவலையில், மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தான், கவர்னர் சட்டசபையை முடக்கியதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன. இது குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது:சட்டசபை முடக்கம் என்பது சட்டசபை கலைப்பு அல்ல. சட்டசபை செயல்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதே இதன் அர்த்தம்.
கவர்னர் அனுமதி அளித்தால் தான், மீண்டும் சபையை கூட்ட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். சபையை நடத்தக் கோரி, முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னரைச் சந்தித்து கோரிக்கை வைத்தால், சட்டசபையை நடத்த கவர்னர் சம்மதிக்கலாம்.
மம்தா பானர்ஜி, மருமகன் மோதல்
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க.,வுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்.,குக்கும், பிரஷாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தது.அந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணமுல் கட்சியின் பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி முக்கிய பங்கு வகித்தார்.
ஐபேக் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து பணிகளை கவனித்து வந்தார்.இந்நிலையில் அபிஷேக், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கோஷத்தை முன்வைத்து வருகிறார். இதற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மம்தா பானர்ஜிக்கும் இதில் ஒப்புதல் இல்லை. 'ஐபேக்' நிறுவனம் தான் அபிஷேக்கை துாண்டி விடுகிறதோ என்ற சந்தேகம், மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, கட்சியின் உயர்நிலை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் விவகாரங்களை கவனிப்பதற்காக, 20 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய செயற்குழு என்ற புதிய அமைப்பை உருவாக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment