தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவரான ஜிடி நாயுடு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் மார்ச் 23, 1893ம் ஆண்டு பிறந்தார். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர், தொழிலதிபர். இவர் இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படுகிறார்.
இவரைப் பற்றி சில சுவாராஷ்யமான தகவல்கள்...
இளம் வயதில் ஜிடி நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.
தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போன ஜிடி நாயுடு வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.
இவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.
மும்பை சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். மும்பை பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார். ஆனால் மனந்தளராத ஜிடி நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார்.
ஸ்டேன்ஸ் துரை நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.
முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.
தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.
முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.
பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் இவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார். இதற்கு நாயுடு கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’ என்றார்.
தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார் ஜிடி நாயுடு.
ஜிடி நாயுடு கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில.
ஜிடி நாயுடு பற்றி அறிஞர்கள் கருத்து:
‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரிய மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.
"கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் ஜிடி நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்" என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி. வி. ராமன்.
No comments:
Post a Comment