Saturday, January 13, 2018

சொர்க்கம் பக்கத்தில்…


ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து
விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை மறுபுறம். அப்படியானால், தொடர்ந்து நாம் பாவத்தை செய்து கொண்டே இருப்போம்… ஏகாதசியன்று விரதமிருந்து, பாவ விமோசனம் தேடிக்  கொள்ளலாம் என்று கருதக் கூடாது.

வைகுண்ட ஏகாதசியன்று, முழுவதும் துளசி தீர்த்தம் அருந்தி, அன்று இரவு முழுக்க விழித்திருந்து, நாராயண நாமம் சொல்லி, மறுநாள் துவாதசியன்று காலையில் சாப்பிட்டு விரதம் முடிப்பது மரபு. இப்படி சம்பிரதாயத்திற்காக விரத மிருந்தால் மட்டும் சொர்க்கம் கிடைத்து விடாது. விரதத்தின் போது, “இனி எக்காரணம் கொண்டும், பாவச் செயல்கள் செய்ய மாட்டேன்; பிறர் நலம் காப்பேன்…’ என்று உறுதி எடுத்து, அதை வாழ்க்கையில் கடை பிடிப்பவர் களே வைகுண்ட பதவியை அடையலாம். கதை ஒன்றைக் கேளுங்கள்…
முனிவர் ஒருவரும், அவரது சீடரும் நதி ஒன்றைக் கடக்க படகுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒரு தாசிப் பெண் வந்தாள். அவளும், நதியைக் கடக்க வந்தவளே. அவளிடம், பேச்சுக் கொடுத்த முனிவர், அவள் செய்யும் தொழிலைப் பற்றி அறிந்து கொண்டார்.

“பெண்ணே… இழிந்த தொழில் செய்யும் நீ, நாங்கள் பயணம் செய்ய இருக்கும் படகில் ஏறாதே. உன் காற்று பட்டாலே பாவம் தொற்றிக் கொள்ளும். வேறு படகில் நீ வா…’ என்று கடிந்து கொண்டார். அவள், வருத்தத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள். அவள், நிர்ப்பந்தம் காரணமாக அந்தத் தொழில் செய்கிறாள் என்பது, அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படகு வந்தது. முனிவரும், சீடரும் மட்டும் ஏறிக் கொள்ள, படகு போய் விட்டது. வருந்திய நிலையில் நின்ற அந்தப் பெண்ணுக்கு மார்பு வலி ஏற்பட்டது. உடனேயே அவள் இறந்து போனாள். முனிவர் சென்ற படகு, திடீரென கவிழ, நீச்சல் தெரிந்த சீடரும், படகுக்காரனும் தப்பி விட்டனர். முனிவர் நீரில் மூழ்கி இறந்தார். முனிவரும், இறந்த பெண்ணும் எமனுலகம் சென்று, ஒரே இடத்தில் நின்றனர். வாசல் திறக்கப்பட்டதும், நரக வாசல் வழியாக அந்த முனிவரும், சொர்க்க வாசல் வழியாக அந்தப் பெண்ணும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
“இதென்ன அநியாயம்… தவமே வாழ்வாகக் கொண்ட எனக்கு நரகம், இழிந்த தொழில் செய்த அவளுக்கு சொர்க்கமா?’ என்று கத்தினார் முனிவர்.
“முனிவரே… அமைதியாயிரும். பிறரைக் குறை கூறுபவர்கள், அவர்களது நிலை அறியாது பேசுபவர்கள், எவ்வளவு பெரிய தபஸ்வியாயிருந்தாலும், தங்கள் தவ வலிமையை இழந்து, சாதாரணமானவர்களை விட, கீழ்நிலைக்குப் போய் விடுவர். ஆனால், அந்தப் பெண்ணோ, இழிந்த இப்படி ஒரு வாழ்வு, இனி வரும் பிறவிகளில் வரக்கூடாதென ஸ்ரீமந் நாராயணனை நினைத்து கண்ணீர் வடித்து, வாழ்நாளெல்லாம் அவர் நினைவாகவே வாழ்ந்தாள். அவளது கோரிக்கை நாராயணனால் ஏற்கப்பட்டு, வைகுண்ட பதவியை அனுபவிக்கச் செல்கிறாள். நீரோ, அவள் மனதைக் குத்தி காயப்படுத்தினீர். பிறர் மனதைக் காயப்படுத்துபவர்களின் கண்களைக் குத்துவது எங்கள் வழக்கம். உமது கண்களும் இப்போது பறிக்கப்படும்…’ எனச் சொல்லி அழைத்துச் சென்றனர்.  புரிகிறதா… வெறும் விரதமும், தவமும் சொர்க்கத்தை அடைய உதவாது. பிறர் மீது கொள்ளும் இரக்க சிந்தனையே, சொர்க்க வாழ்வைத் தரும். வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதப் பெருமானிடம் இரக்க சிந்தனையுள்ள மனம் வேண்டுமென வேண்டி வருவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...